இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0913



பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

(அதிகாரம்:வரைவின் மகளிர் குறள் எண்:913)

பொழிப்பு (மு வரதராசன்): பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.



மணக்குடவர் உரை: பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும்.
இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும்.
(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பொய்ம்மையுடைய பொருட்பெண்டிரின் முயக்கின்பம் இருட்டறையில் முன்பின் அறியாத பிணத்தைத் தழுவிப் பெறும் இன்பம் போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று.

பதவுரை: பொருள்-பொருள்; பெண்டிர்-மகளிர்; பொய்ம்மை-பொய்யாந்தன்மை; முயக்கம்-தழுவல்; இருட்டு அறையில்-இருளையுடைய அறையின்கண்; ஏதில்-முன்னறியாத (அயலார்); பிணம்-சவம்; தழீஇ அற்று-தழுவியது போன்றது, அணைத்தது போலும்.


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம்;
பரிப்பெருமாள்: பொருளேயே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம்;
பரிதி: வரைவின் மகளிர் பொய்யை மெய்யன்பாக ஒழுகுதல் எத்தன்மைத்து எனின்;
காலிங்கர்: தாமே தமக்குப் பொருள் வரைந்து ஒழுகும் பெண்டிர் தமது பொருள் வரலாற்றிற்கு வேண்டும் ஆடவர் உயர்ந்தோர் இழிந்தோர் யாவரே யாவரே ஆயினும் வரைவு இன்றிப் பொய்ம்மை முயக்கம் முயங்கும் மகளிரது முயக்கம்; [வரலாற்றிற்கு - வரும் வழிக்கு; வரைவு இன்றி - எல்லையுன்றி; முயங்கும் - புணரும்]
பரிமேலழகர்: கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்;

'பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் விரும்பும் பரத்தையரின் பொய்த்தழுவல்', 'பொருளுக்காகத் தம்மை விற்றுவிடுகிற வேசியரைப் புணரும் பொய்யான காமக் கலவி', 'விலைமாதரது பொய்யான புணர்ச்சி', 'கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் விலை மகளிரது பொய்ம்மையான கூட்டுறவு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் ஒன்றையே கருதும் பெண்டிரின் பொய்த்தழுவல் என்பது இப்பகுதியின் பொருள்.

இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும்.
மணக்குடவர் குறிப்புரை: இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கேடு வரினும் இன்பம் தருமாயின் புணர்ச்சியான் வரும் குற்றம் என்னை என்றார்க்கு, அவர் இவ்வாறு வருந்துவர் ஆகலான் இன்பம் இல்லை என்று கூறப்பட்டது. இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.
பரிதி: இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: பெரிதும் இருள் உடைய அறையுள் புக்கவர் அப்பிணம் தழீஇஉறையும் அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது. [அவர் குறிப்பு- பொதுமகளிர் எண்ணம்; அகத்தால் அருவரா நின்றும் - மனத்தால் வெறுத்தும்]

'இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும்' என்று பரிதியும் 'இருள் உடைய அறையுள் புக்கவர் அப்பிணம் தழீஇஉறையும் அத்தன்மைத்து' என்று காலிங்கரும் 'இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருட்டறையில் ஒரு பிணம் தழுவியது போலும்', 'இருட்டு வீட்டில் உயிரும் உணர்ச்சியுமற்ற பிணத்தைத் தழுவிப் புணர்வதற்குச் சமானமேயாகும்', 'இருட்டு அறையின் கண்ணே பிணம் எடுப்பார் பிறர் பிணத்தைக் கூலிக்குத் தழுவி எடுத்தாற் போலும்!', 'இருட்டறையில் முன்னறியாத பிணத்தைத் தழுவியதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இருட்டறையினுள்ளே முன்னறியாத பிணத்தைப் புணர்வது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பொருள் ஒன்றையே கருதும் பெண்டிரின் பொய்த்தழுவல் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ போலும் என்பது பாடலின் பொருள்.
'இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ' குறிப்பது என்ன?

பொருளுக்காகச் சேரும் காமக் கூட்டம் பொய்யானது.

பொதுமகளிரது பொய்யான முயக்கமானது, இருட்டறையில் முன்பின் அறியாத பிணத்தினைத் தழுவிக்கொள்வதைப் போன்றது.
புணர்தல் இங்கு தழுவுதல் என இடக்கரடக்கலாகக் (euphemistic) கூறப்பட்டது. ஒருவன் பணம் கொடுத்து காம இன்பம் எய்தும் எண்ணத்துடன் பொதுமகளிரிடம் செல்கிறான். அவன் பெறும் இன்பம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு உவமையுடன் விளக்குகிறது இக்குறள்.
யாருமறியாத பெண் ஒன்றின் செத்த உடல் ஓர் இருட்டறையில் வைக்கப்பட்டிருக்கிறது. கழிகாமம் கொண்ட ஒருவன் அது பிணம் என்றும் தெரிந்தும் அவ்வறையுள் சென்று அதைப் புணர்கிறான். பிணத்தினுடனான கூட்டுறவில் என்ன இன்பம் பெறமுடியுமோ அந்தளவு காமவின்பமே பொருட்பெண்டிரை நாடிச் செல்பவன் பெறுவதும். பொருள்பெற்ற பெண் அன்பு காட்டாமல் உணர்ச்சியின்றி படுக்கையில் கிடப்பாள். அவளைத் தழுவிப் பெறும் இன்பமும் ஓர் பிணத்தைத் தழுவிப் பெறும் இன்பமும் ஒன்றுதான். என்ன ஓர் அருவருப்பு! என்ன ஓர் இழிவு!

பொருளுக்காகத் தன் உடலை விற்கும் பெண்டிரின் தவறான வாழ்வியலை இகழும் இக்குறள் அவர்களுடனான அன்பற்ற பொய்முயக்கத்தால் ஆடவன் என்ன இன்பம் காணப்போகிறான் என்பதையும் வெறுக்கத்தக்க வகையில் சொல்கிறது. கட்டுப்பாடு இல்லாத பெண்டிர் பொய்யாகத் தழுவுவதை மெய்யன்பாகக் காட்டிக் கொள்வர். அவரது நாட்டமனைத்தும் பொருள் மேலேயே ஆதலின், அவர்களிடம் பெறும் இன்பமும் பொய்யானதாகும்.

காமத்துப்பாலில் தலைவியானவள் பொய்யாகத் தன் கணவனைப் புலக்கும்போது அவன் வரும்வழியில் உள்ள பெண்கள் அவனது மார்பைப் பார்த்ததால் அந்த மார்பு எச்சில் பட்டது எனச் சொல்லி 'நண்ணேன் பரத்த நின்மார்பு' எனக் கூறுவாள். பார்த்ததாலேயே தலைவனது மார்பு எச்சிலானது என்று எண்ணும் அத்தலைவிக்கு பிணத்தைத் தழுவிய கணவனது உடம்பு எத்தகைய இழிவை உண்டாக்குமோ!

'இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ' குறிப்பது என்ன?

'இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ' என்பதற்கு ஓர் இருட்டறையில் அயலார் பிணத்தைத் தழுவுதல் என்பது பொருள்.
இப்பாடலில் சொல்லப்படும் பிணம் பொதுமகளிர் சேரச் செல்லும் ஆடவனைச் சொன்னது எனக் கூறினர் சிலர், பொருள் கொடுத்த ஆண் பொதுமகளிரால் பிணமாகத்தான் கருதித் தழுவப்படுவான் என்ற பொருளில். ஆனால் அது பொருட்பெண்டிரைக் குறித்தது எனப் பலரும் கூறினர்-அவரைத் தழுவுவது உணர்ச்சியற்ற பிணத்தைத் தழுவுதல் போன்றது என்பதால். இவற்றுள் பொதுமகளை முயக்குதல் பிணத்தைத் தழுவுதல் போன்றது என்பது குறள் நோக்கத்தை நன்கு புலப்படுத்தும்.

இருட்டறையில் அயலார் பிணத்தைத் தழுவுதல் என்பதற்கான சுவையான உரைகளிலிருந்து சில:
  • அறையிற் பிணமாயினும் ஏதிற் பிணமாயினும் அத்தினிச் சாதிப் பெண்டிர் (முரட்டுத் தன்மை நிறைந்த பெண்கள்) சிலர் விருப்பொடு தழுவுதல் கூடும் அதை நீக்குதற்பொருட்டு இருட்டறையில் என்றும், கற்புடைப்பெண்டிர் தம்கணவரிறந்துழி அப்பிணத்தையும் அன்பொடுந்தழுவுதல் உண்டாதலின் அதனை நீக்குதற்கு பொருட்டு 'எதில் பிணம்' என்றும் காட்டிற் பிணம் சிதைவுண்டும் அழுகியும் புழுத்துக் கிடக்குமாதலின் அதனை நீக்குதற்பொருட்டு 'அறையிற் பிணம்' என்றும் சொல்லப்பட்டது (அ சண்முகம் பிள்ளை).
  • பிணத்தைச் சூழ்ந்து அழும் பெண்களில் உறவினராயின் கட்டித் தழுவி அழுதலும், அல்லராயின் அருவருப்புடன் அழுதலும் மரபாதலின் அயற்பெண்கள் தங்கண்ணால் நோக்காது அழுதலை உளங்கொண்டு கூறியதாம் (இலக்குமணப்போற்றி).
  • கன்னிப்பெண் இறந்தால் அவள் கன்னிமை கழிப்பதற்காகக் காசு கொடுத்துப்பிணத்தைத் தழுவச் செய்தல் மலை நாட்டு வழக்காதலின் அதனையுட்கொண்டு கூறினது (மு ரா கந்தசாமிக் கவிராயர்).
  • மலையாள நாட்டில் ஒருவகை மரபில் கன்னிப்பெண் இறந்தால் அவள் பிணத்திற்குத் திருப்பூட்டு புணரச்செய்தல் வழக்கமாதலின் அதனை எண்ணிக் கூறியதாம் (அ மாதவ ஐயர்)
  • சாவு வீட்டிலே முன்பின் தெரியாத பிணத்தைத் தழுவி சிலர் காசுக்காக ஒப்பாரி வைப்பர். உண்மையில் அவர்களுக்கும், இறந்தவருக்கும், அல்லது அவர் குடும்பத்தினருக்கும் ஒருவித தொடர்பும் இராது. அத்தகையவரைப் போன்றோரே விலைமாதரும் – காசுக்காகக் கட்டிப்பிடித்து முயங்குவர்; அதில் உண்மையான அன்பு இராது.
  • ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே, மணமாகாத பெண் இறந்துவிட்டால் அவள் பிணத்தை பேய்த்தன்மையான புணர்ச்சிக்காவது உட்படுத்த வேண்டுமென்பது குலமரபாதலால் கூலிக்காக மணந்து கொண்ட 'கணவன்' அவளைத் தழுவுவது வழக்கமாக இருந்தது; அந்த வழக்கத்தையே 'ஏதில் பிணம் தழீஇ யற்று' என்று வள்ளுவர் குறித்திருக்கிறார் (தேவநேயப்பாவாணர்).
  • 'இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும்' என்றார் (பரிதி). அதாவது ஊறின்பம் கூட பெறமுடியாத கற்பிணத்தை பொருள் கொடுத்துக் கட்டித்தழுவுதல் போல என்பது கருத்து.
  • 'ஐம்புல இன்பங்களை ஆரத்துய்க்கும் மகளிர் இன்பத்துள் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிதலே முறையாதலின் முதற்கண்னதாகிய காட்சியின்பமும் இன்றென்பதால் இருட்டறை என்றார்' (தண்டபாணி தேசிகர்).

பொதுமகளிரைத் தழுவிப் பெறும் இன்பத்தை ஒப்பு நோக்க உறவறியாத பிணத்தினை இருட்டறையில் தழுவி அடையும் இன்பம் சொல்லப்பட்டது. உணர்ச்சி எதுவுமில்லாத தழுவல் என்பது குறிப்பு. இருட்டறையில் என்றது அருவருப்பால் தன் கண்ணால் நோக்காததையும் தன் அருவருப்பைப் பிறர் அறியாமையும் விளக்குவதற்காக. அன்பில்லாத வரைவின் மகளிர் வழி பெறும் காமம் எத்துணை இழிவானது என்பதை வெறுப்புணர்ச்சியும் அருவருப்பும் தோன்றும் காட்சிவழி சொல்லப்பட்டது.
பரத்தையர் சேர்க்கையை முற்றிலும் நீக்குக என்பதைக் கூறவந்த வள்ளுவர் அதன் இழிவை மிகைப்படுத்தி நினைத்தாலே உடல் கூசுமளவிற்கு ஓர் காட்சியை உவமித்து அதில் இன்பம் இல்லை என்பதை உளப்படுத்துகிறார்.
'இதற்குமேலும் ஒரு ஆடவனுக்கு உறைக்குமாறு சொல்ல இயலுமா? இக்குறளைக் கற்ற பின்னும், மனங்கூசாது பரத்தையரை நாடுவார் விலங்கே ஆவர்' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.

பிணத்துடன் உடலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் 'necrophilia' என்ற சொல்லால் குறிக்கின்றனர். இது பாலூட்டிகள், விலங்கினம், பறவைகள், ஊர்வன ஆகியவற்றிடையும் நிகழ்கின்றன என்பர்.

பொருள் ஒன்றையே கருதும் பெண்டிரின் பொய்த்தழுவல் இருட்டறையினுள்ளே முன்னறியாத பிணத்தைப் புணர்வது போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வரைவின் மகளிர் உடனான சேர்க்கை பிணமுயக்கமே.

பொழிப்பு

பொருட்பெண்டிரின் பொய்யான தழுவல் இருட்டறைக்குள்ளே முன் அறியாத பிணத்தைப் புணர்வது போலாகும்.