இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறளாட்சி, மரபு, சொல்லமைப்பு, பொருட்சிறப்பு, எதுகை மோனை நயம், யாப்பமைதி இன்ன பிற துணயாகக் கொண்டு, பல்வேறு பாடங்களுள் ஆசிரியன் பாடம் இஃதெனத் தேர்ந்து பொருட்டெளிவு பெறுதல் இன்றியமையாதது. திருக்குறளின் உண்மைக் கருத்தையறிந்து ஆசானின் உள்ளத்தை உணர அனைத்துப் பாடங்களையும் ஆய்ந்து தெளிந்த, நூற்பாடங்களைக் கொண்ட ஓர் ஆய்வுப் பதிப்பு திருக்குறட்கு வருதல் வேண்டும்.
-இரா சாரங்கபாணி

ஒரே குறளுக்குப் பல பேர் பல பொருள்களைச் சொன்னார்கள்; சொல்லி வருகிறார்கள். வள்ளுவர் கருதிய உரை இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்லுவதற்குச் சான்றாக அவர் கருதிய உரையை நமக்கு விளக்கக்கூடிய அவர் காலத்து உரைப்பிரதிகள் கிடைக்கவில்லை.

குறளும் பாடவேறுபாடுகளும்

வாய்வழி வந்த இலக்கண, இலக்கியங்கள் அல்லது ஏட்டில் கையால் எழுதப்பெற்ற நூல்கள் பிறர் படிப்பதற்குப் பயன்படும் நோக்கத்தில் படியெடுக்கப்பட்டன. இப்படிப் படியெடுக்கும்போது ஏட்டுச் சுவடியில் கண்ட எழுத்துக்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியாததால் ஒன்றைப் பார்த்துப் படியெடுத்தோர் ஓரெழுத்தை பிறிதோரெழுத்தாக மயங்கி எழுதியதால் பிழைகள் நேர்ந்தன. ஒருவர் பாடம் கூற மற்ற மாணவர் பலர் அவற்றை எழுதிப் படியெடுப்பதும் உண்டு; இவ்வாறு எழுதும்போது மயங்கி எழுதுதல் இயல்பே. படியெடுப்போரின் விரைவு, சோர்வு, நெகிழ்ச்சி, மதிக்குறை இவற்றாலும் தவறுகள் நேர்ந்தன. புள்ளி இட்டெழுதும் வழக்கம் இல்லாத காலமும் உண்டு. அதன் காரணமாகவும் பிழைகள் உண்டாயிற்று. நூலைப் படித்தவர் மொழித் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் புதிய பாடம் கற்பிக்கவும், நூலின் கட்டமைப்பை மாற்றவும் முயல்வர்.
மற்ற நூல்கள் போலவே குறளும் பாடவேறுபாட்டுத் தீங்குக்கு உள்ளானது. படியெடுப்பதில் நேர்ந்த பிழைகள் தவிர, பாடங்களைத் திருத்துவதில் பயிற்சியும் துணிவும் பெற்ற சிலர் பேரார்வத்துடன் வலிந்து புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் காரணமாகவும் குறளில் பாட வேறுபாடுகள் மிகுந்தன. உரையாசிரியர்களாலும் பாடவேறுபாடுகள் ஏற்பட்டன. இன்னபிற காரணங்களினால் பா ஒன்றுக்கே பாடங்கள் பல பெருகின.

எடுத்துக்காட்டுகள் சில......:

குறளில் பாடவேற்றுமை பற்றி இரா சாரங்கபாணி தொகுத்தளித்த நூலில் இருந்து சில இங்கே தரப்பட்டுள்ளன:

புள்ளி இட்டு எழுதும் வழக்கம் இல்லாததால் தோன்றிய பாடவேற்றுமை:

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236) என்னும் குறட்பகுதியில் ‘நோவல்’ எனப் பரிமேலழகர் கொள்ள, ‘நேர்வல்’ எனக் காலிங்கர் கொண்டு உரைசெய்கிறார். நோவல் என்னும் பாடமே சிறப்பானது.

யாப்பு நோக்கி எழுந்தன:

இலக்கணப் பொருத்தமின்றி வழுவுடையவாய்க் காணப்படும் பாக்களும் உள்ளன.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
(139) என்னும் குறளில் தாம் பாடமாகக் கொண்ட ‘ஒல்லாவே’ எனும் பன்மைக் கேற்ப சொலர்’ என்பதைச் ‘சொல்லுந் தொழில்கள்’ எனப் பொருள் கூறுவார் பரிமேலழகர். அதனினும், ‘ஒல்லாதே’ என ஒருமையாகப் பொருள் கண்ட மணக்குடவர் பாடம், பால் வழுவின்றிச் ‘சொலல்’ என்னும் ஒருமைக்கு ஏற்ற பயனிலையாக அமைதலின், அதுவே ஏற்கத்தகுந்ததாக உள்ளது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
(1033) என்ற குறளில் ‘வாழ்வார் மற்று எல்லாம்’ எனப் பரிமேலழகர் கொள்ள காலிங்கர் 'வாழ்வார் மற்றல்லாதார்' எனக் கொண்டது வெண்தளை பிழைத்தல் ஆதலால் பொருந்தாது.

எதுகை மோனை நயம் கருதிச் சிலரும் பொருட்சிறப்பு கருதிச் சிலரும் சில குறளுக்கு பாடவேறுபாடு கொண்டுள்ளனர். அவற்றை நோக்கின், வள்ளுவர் எதுகை மோனை நயத்தோடு தம் குறளினை யாத்தாரா? பொருட்செறிவுக்காக அந்நயத்தை விடுத்தாரா? என்றெல்லாம் ஐயுற வேண்டியுள்ளது. பொருட் சிறப்போடு யாப்பின்பம் இருப்பின் அப்பாடம் சரியென்று கொள்ளலும் பொருட் சிறப்பில்லாததாயின் அதனைத் தள்ளலுமே செய்யவேண்டியது.

எதுகைச் சிறப்புக்காக:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(43)‘ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை ’ எனப் பரிமேலழகர் பாடங்கொள்வர். அதனினும் ‘ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ எனக் கொண்ட தாமத்தர் பாடம் எதுகை முற்றிலும் இயைதல் காணலாம். மேலும் குறளில் எண்ணிய ஐவரையுங் குறிக்க ஐம்புலம் என்பதினும் ஐம்புலத்தார் என்பதே திணைவழுவின்றி அமைகின்றது.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
(1081) இங்கு ‘அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை’ எனும் பரிப்பெருமாள் பாடம் எதுகைச் சிறப்பு பயத்தலால் கனங்குழை எனும் பரிமேலழகர் பாடத்தினும் நன்று.

மோனைச் சிறப்புக்காக:

மோனை நயம் பயக்கும் பாடங்கள்:
வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்
(1261) என்ற மணக்குடவர்/பரிமேலழகர் உரையினும் ‘தேய்ந்த நகம்’ எனும் காலிங்கர் பாடம் மோனை நயம் வாய்ந்தது. அதுபோல
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
(1077)எனும் மணக்குடவர்/பரிமேலழகர் பாடத்தினும் ‘கூர்ங்கை’ எனும் காலிங்கர் பாடம் மோனை நயம் கொண்டது. மோனை நயம் வாய்ந்திருப்பினும் ‘கூர்ங்கை’ எனும் பாடமும் ‘நாள் ஒற்றித் தேய்ந்த நகம்’ எனும் பாடமும் பொருட் சிறப்பில்லாதவை.

பொருள் வேறுபாடற்றவை

பொருள் வேறுபாடன்றி சொற்கள் வேறாகக் காணப்படும் சில பாடங்களும் உண்டு.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
(4) என்பது பரிமேலழகர் கொண்ட குறள். இதனை ‘வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார் யாண்டு யிடும்பையிலர்’ என மணக்குடவர் கொண்டுள்ளதாகக் குறிப்பர்.
‘வாரி வளங்குன்றிக்கால்’ (14) என்பது ‘குன்றுங்கால்’ (மணக்குடவர், தாமத்தர்) எனவும்
‘யானையால் யானையாத்தற்று’ (678) என்பது ஆர்த்தற்று (காலிங்கர்) எனவும்
‘துணையல் வழி’ (1299) என்பது ‘தமரல் வழி’ (காலிங்கர்) எனவும்
‘என்பாக்கறிந்து’ (1312) என்பது ‘என்பதறிந்து’ (மணக்குடவர்) எனவும் பொருள் வேறுபாடின்றிப் பாடம் மட்டும் வேறாகி நிற்கின்றன.

பொருள் வேறுபடுபவை

எழுத்தாலும், சொல்லாலும், தொடராலும் வேறுபடும் பாடம் அமைந்த குறள்களும் சில உள.
‘அஞ்சுவதோரு மறனே’ (366) என்பதற்கு ‘அறிவே’ என நச்சரும் ‘அவாவே’ எனத் தாமத்தரும்,
‘அறம் பொருளின்பம் உயிரச்சம்’ (501) என்பதற்கு ‘உயிரெச்சம்’ எனக் காலிங்கரும்,
‘ஒற்றுமுரை சான்ற’ (581) என்பதற்கு ‘ஒற்றும் முறை சான்ற’ என மணக்குடவரும்,
‘விழை தகையான் வேண்டியிருப்பர்’ (581) என்பதற்கு ‘விழை தகையால் வேண்டியிருப்பர்’ எனக் காலிங்கரும் பாடங் கொள்வதால் இவர் தம் உரைகள் பரிமேலழகர் உரையினும் வேறுபடுகின்றன.

இங்ஙனமே பரிமேலழகர் கொண்ட பாடங்கட்கு வேறாகப்
‘பகல் கருதிப் பற்றார் செயினும்’ (252),
'இறப்போர் இருந்த தொழிற்றாம்’ (977),
‘உழுவார் உலகத்தார்க்காணி அஃதற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து’ (1031)
‘தோட்டாழ் கதுப்பினாள்தோள்’ (1105)
என மணக்குடவர் வேறுபாடமோதுவார்.

‘ஏந்திய கொள்கையார் சீறின்’ (899)
‘அற்ற மறைக்கும் சிறுமை பெருமைதான் குற்றமாக் கொண்டுவிடும்’ (980)
‘எண்பதத்தான் எய்தல் எளிதென்ப’ (991)
‘பல்குடை நிழலும் த்ங்கொடைக் கீழ்க்காண்பர்’ (1034)
‘செல்லான் கிழவனிருப்பின் நிலமடந்தை புல்லாள் புரள் விடும்’ (1039)
’துறைவன் துறந்தமை தேற்றாகொல்’ (1157)
‘கூடிய காலம் பிரிந்தார்’ (1264)
எனக் காலிங்கர் பரிமேலழகர் பாடத்தினும் வேறு பாடங் கொள்வர்.

‘தானைக் கண் டன்ன துடைத்து’ (1082)
என்பது பரிதி கொண்ட வேறு பாடம்.


குறளாட்சி கொண்டு அறிதல்:
உரையாசிரியர்களின் சில உரை காணப்படும் மூலத்துக்கு முரணுவதால் அவ்வுரை கொண்டு அவ்வாசிரியர் தம் மூல பாடங்களை நாம் ஆய்ந்து காண வேண்டியுள்ளது. ‘பாத்தூண் மரீஇயவனை’ (227) என்னும் குறட்பகுதிக்கு உரை வரையும்போது, பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக்கொண்டு வந்து பசியாற்றுவானை எனப் பரிதியார் கூறியுள்ளார். ‘பார்த்தூண்’ எனும் வழக்கு குறளாட்சி இல்லை. இவ்வுரையில் ‘பார்த்தூண்’ என்பது வள்ளுவர் பாடமல்ல; பரிதியார் பாடமே எனத் தெளியலாம். மேலும் தமது பாத்துண்டற்றால் (1107) என்னும் பாடலைக் கண்டும் 'பாத்தூண்' என்பதே பாடமெனத் துணியலாம்.

மிக்க பொருத்தம் கொண்ட பாடம் தெளிதல்:
குறள்களுக்குக் காணப்படும் வெவ்வேறு பாடங்களுள் எது தக்கது எனக் காரணங்கண்டு உறுதி செய்தல் வேண்டும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
(202) இக்குறளுக்குத் தீயவே தீயபயத்தலால் என ஒரு பாடமுண்டு எனக் காட்டுவார் அரஞ்சண்முகனார். நன்மையுந்தீமையுந் தரும் தீயினும் தீமையே தரும் தீயவை அஞ்சப்படும் எனும் கருத்தழுத்தம் தீயவே தீயபயத்தலால்’ எனும் பாடத்தாற் பெறப்படுதலின், அதுவே பரிமேலழகர் கொண்ட பாடத்திலும் சிறந்ததாகும்.
முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு
(786) எனும் பாடத்திலும், ‘நட்பதே நட்பு’ எனும் மணக்குடவர் பாடம் கருத்தழுத்தமுடைமை காணலாம்.

அதிகார அமைப்பு, குறள் வரிசை முறை போன்றவைகளில் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன.

அதிகார வைப்பு முறை/அதிகாரப் பெயர்:
மணக்குடவர் “குடி” என்று கூறிய அதிகாரத்தைப் பரிமேலழகர் “குடிமை” என்று மாற்றியுள்ளார். பரிமேலழகர் பாடத்தில் இரண்டு “குறிப்பறிதல்” உள்ளது. அவருக்கு முறபட்ட காலிங்கர் இன்பத்துப்பால் குறிப்பறிதலை “குறிப்புணர்தல்” என்று கூறியுள்ளார். மணக்குடவர் “பசப்புறுதல்” என்பதைப் பரிமேலழகர் “பசப்புறு பருவரல்” என்கிறார். காலிங்கர் “அவர்வயின் விரும்பல்” என்பதைப் பரிமேலழகர் “அவர் வயின் விதும்பல்” என்று கூறுகிறார்.

பாடல் வைப்பு முறை:
பாடல் வைப்பு முறையிலும் உரையாசிரியர்கள் மாறுபடுகிறார்கள்.
“பழைய உரை” யில் “ஒழுக்கம் உடைமை” அதிகாரத்தில்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்”
(138) என்ற குறளையே காணவில்லை. இதற்குப் பதில்
“தன்மம் பெருக்கும் ஒழுக்கம் அதுவிடில்
கன்மம் பெருக்கும் கவர்ந்து” என்ற பாடல் “பழைய உரை” யில் செருகப்பட்டிருக்கிறது.
“வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு”
(632) இக்குறளில் கூறப்படுவன நான்கு செய்திகள். ஆயினும் ஐந்துடன் என வருகிறது. இதில் ஐந்து செயல் இருந்திருக்க வேண்டும் அல்லது ஐந்துடன் என்பதற்குப் பதில் நான்குடன் என்றிருந்திருக்க வேண்டும். ஆனால் மூல வேறுபாட்டில் எடுத்து எழுதியவர்கள் மாறுபட எழுதியதுதான் இக்குறள். மணக்குடவர் ‘குடிகாத்தல்’ என்பதனை ‘குடியைக்காத்தல்’ ‘ஐம்பொறிகளைக் காத்தல்’ என இரண்டாக்கி மொத்தம் ஐந்து என உரைக்கின்றார். இது தவறுதான். ஆனால் இதை எல்லாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தொடக்கத்தில் எழுதப் பெற்றதுபோல் குறள் இல்லை என்பது தெளிவு.


மேலே சொல்லப்பட்டன தவிர இன்னும் பல பாடவேறுபாடுகளும் உண்டு..

பொதுவாகப் பரிமேலழகர் பாடத்தை ஒட்டியே பாடவேறுபாடு சுட்டப்படுகிறது. அதாவது இவரது உரையே மூலப்பாடத்தை ஒக்கும் என்றபடியான நிலை இன்று உள்ளது. பரிமேலழகரே முதல் உரையாசிரியராகக் கருதப்படும் மணக்குடவர் பாடத்தை ஒட்டியே பெரும்பாலும் தன் உரையைப அமைத்துக் கொண்டார். மேலும் பரிமேலழகருக்கு முந்தியவரான காலிங்கர் பாடங்களும் சிறப்பானவையே.