இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1071 குறள் திறன்-1072 குறள் திறன்-1073 குறள் திறன்-1074 குறள் திறன்-1075
குறள் திறன்-1076 குறள் திறன்-1077 குறள் திறன்-1078 குறள் திறன்-1079 குறள் திறன்-1080

கயவரைத் தனியே பிரித்து ஒதுக்குவது முடியவில்லை. அவர்கள் மக்கள் போலவே வெளித்தோற்றத்தில் காணப்படுவதால் பொதுவாழ்க்கையில் அவர்களை எளிதில் அறிந்து விலக்கிவிட முடியவில்லை; அவர்கள் உலகில் வாழ்வதால் பொறுப்பற்ற தன்மை, நெறியின்மை, அதிகார மனப்பான்மை, அடிமை மனப்பான்மை, அற்ப ஆசை, பொறாமை, கொள்கையின்மை முதலிய பல மாசுகள் பொதுவாழ்வில் இருக்கின்றன. ஆகையால் பொதுவாழ்விற்கு ஆகாதது கயமை என்று வள்ளுவர் கடிகின்றார்.
- மு வரதராசன்

மக்களுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள்‌ இல்லாத கீழோரது இயல்பினைக்‌ கூறுவது கயமை அதிகாரம்‌. இது மனித நிறைவுக்கு எதிரான கீழ்மையான பண்புகளைச் சொல்கிறது, கயவர்கள் தம்மனத்தில் நன்மை-தீமை எதையும் எண்ணி உழன்றுகொண்டிருப்பதில்லை; அவர்கள் மனிதப்பிறப்பிற்கு உரியஒழுக்கம் கைவரப் பெறாதவர்கள்; இழிந்த தன்மையுடையவர்கள். மக்களே போல்வராக கயவர் இருப்பதால், பார்த்த அளவிலே ஒருவர் நல்ல குணத்தவரா அல்லது கயமைக் குணம் கொண்டவரா என்பது அறியமுடியாதிருக்கிறது.

கயமை

மக்களுக்கென்று தனித்த பண்பாடுகள் உண்டு. நல்ல குணங்களெல்லாம் பண்பு எனப்படும். பிறரது பண்புகளை அறிந்து அவற்றோடு ஒத்து ஒழுகிற வன்மை மக்கட்பண்பு ஆகும். மக்கட்பண்போடு ஒழுகுபவர் மக்கட்பிறப்பினர் ஆவர்; மக்கட்பண்புக்கு மாறாக இழிவாக நடப்பவர் மக்கட்போலியர் அல்லது கயவர் என அழைக்கப்படுவர். இழிந்த குணம் கொண்டவர்களும் வெளிப்புறத் தோற்றத்தில் மற்ற எல்லா மக்கள் போலத்தான் இருப்பார்கள்; உருவத்தால் ஒன்றுபோலவே தென்படுவராயினும் குணத்தால் மாறுபட்டு இருப்பர். இவ்வதிகாரத்துச் சொல்லப்படும் கயவர் வஞ்சனைஉடையவரோ அல்லது வன்முறையாளரோ அல்லர்; அவர்கள் பெருந்தீய குற்றங்கள் புரிபவராகவும் இல்லை. ஆனால் அவர்கள் சிறுமைக் குணம் கொண்டவர்கள்; சின்னத்தனமாக நடந்து கொள்பவர்கள்.

மக்களுள் அறிவு, குணம் இவற்றில் குறைபாடுடைய மனிதர்களைப் பற்றிப் பேசும் குறளதிகாரங்கள் பேதைமை, புல்லறிவாண்மை, கயமை ஆகியன. இவற்றுள் முதல் இரண்டு அதிகாரங்களான பேதைமை, புல்லறிவாண்மை ஆகியன அறிவை ஆளத்தெரியாதவர்கள் பற்றியன. பேதை என்பவன் இதைச் செய்தால் இது நடக்கும் என்பதை அறியாதவன் அல்லது அதை ஒத்துக்கொள்ளாதவன்; இவன் தன் கேட்டிற்குக் காரணம் யாதெனத் தானே அறியமாட்டாதவன்; அறிவுறுத்தினாலும் உணரமாட்டான். புல்லறிவு என்றது புல்லிய அறிவுடைமை அதாவது தாழ்ந்த அறிவு குறித்தது; அறிவு முதிராமையையும் குறிப்பது; பேதைமை வெள்ளந்தியாய் இருத்தல் என்றால் புல்லறிவாண்மை அரைவேக்காட்டுத்தனத்தைச் சொல்வது.
கயமை என்பது சிறுமைக் குணத்தைச் சுட்டுவது. எனினும், அதிகாரப்பாடல்களில் வள்ளுவரின் வெறுப்புணர்வோ உளச்சோர்வோ காணப்படவில்லை; கயவரைப் பிணம் என்றோ விலங்கு என்றோ திட்டி கடுமை காட்டப்படவில்லை. இங்கு அதிகாரப்பாடல்கள் பெரிதும் எள்ளலுடன் கூடிய நகைத்திறத்துடன் அமைந்துள்ளன;

கயவர் என்ற சொல் இன்று ‘கெட்டவர்' என்ற பொருளில் வழங்குகிறது. மிகவும் வெறுக்கத்தக்க வேலைகளைச் செய்யும் மோசடிக்காரர்களைக் கயவர் என்று கூறுகிறோம். ஆனால் இழிந்த குணத்தையே வள்ளுவர் 'கயமை' என்று கூறுகிறார். கயமைக் குணம் உடைய மக்களை அவர் கயவர் என்கிறார். கயவர் வேறு, தீயவர் வேறு என்பது அவர் கருத்து. கயவர்கள் நற்பண்புகளை அறியாதவர்களாயிருக்கின்றனர். வற்றிப்போன மனம் கொண்டவர்களாக உள்ளனர்.
வள்ளுவர் கயமையிற் சுட்டும் குணங்களாவன: நெஞ்சத்து அவலமின்மை, விரும்பிய செய்தல், தன்னினும் கீழானோருடன் போட்டியிடுதல், ஆற்றலுள்ளோர் முன்னே பம்முதல்-தன்தேவைகள் நிறைவேறும்வரை கொஞ்சம் ஒழுக்கமாக இருத்தல், மறை வெளிப்படுத்தல், ஈகைச் சிந்தனையே இல்லாதிருத்தல், பிறர்மேற் குற்றங்காணல், துன்பம் வந்தால் தன்னையே விற்றுக்கொள்ளுதல் முதலியன.
கீழ் என்பதன் வெளிப்படையான பொருள் கீழானவன், தாழ்ந்தவன், இழிந்தவன் என்பன. கயவனை இச்சொற்களால் அழைத்தால் 'மனிதன்' என ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் என்பதால், அவ்வாறு கூற விரும்பாமல், கீழ் என்று அஃறிணைப் படுத்திக் கூறுகிறார் வள்ளுவர். பன்மையிலும் அவர்களைக் 'கீழ்கள்' என்றே குறிக்கிறார்.

சான்றாண்மைக்கு எதிர்நிலை கொண்ட இழிந்த குணங்கள் கொண்டவர்களாய் இருக்கின்றனர் கயவர். இவர் மக்கள் போன்றே இருப்பதால் அவரது குணக் குறைபாடு வெளித்தோன்றுவதில்லை. மனச்சான்றின் உறுத்தல் இல்லாதவர்களாதலால் எவ்விதக் கவலையுமின்றித் திரிவர். தான்தோன்றித்தனமாய் நடக்கின்றவராயிருந்தாலும் ஆற்றல், பதவி, செல்வம் ஆகியவற்றால் மேலானவர்களிடம் அச்ச உணர்வுடனே நடந்துகொள்வர்; சில இடங்களில், தன் விருப்பம் ஈடேற சிறிது ஒழுக்கமாகவும் இருப்பர். சிற்றினச் சேர்க்கை உள்ளவர்; தன்னினும் கீழாய் யாரும் தென்பட்டால் அவரது 'மேன்மை'யை மிகைப்படுத்திக் காட்டி இறுமாப்புக் கொள்வர்; அதாவது இழிவில் போட்டியிடுவர். பிறர் மறைவுகள் அவர்களிடம் சிக்கிவிட்டால், அவற்றை ஊரெங்கும் பரப்பி, அப்பிறர்க்குக் களங்கம் விளைவிப்பர். பிறர் உடுத்துவதும் உண்பதுவும் கூட அவர்க்குப் பிடிப்பதில்லை; அவர்கள்மேல் இல்லாத குறைகளைக்கூடக் கற்பித்து அவர்களது அமைதியைக் குலைப்பர். செல்வம் இருந்தாலும் உதவி கேட்பவர்க்கு ஈயவேண்டும் என்ற எண்ணமே இவரிடம் இராது; செல்வம் ஈட்டியவனே அதன் முழுப்பயனையும் துய்க்க வேண்டும் என்ற கொள்கையினர்; தன்னை மட்டுமே நினைப்பவர்; கள்வர் வந்து அடித்து உதைத்துத்தான் அவரிடமிருந்து காசை வெளிக்கொணர முடியும். நிலையிலாத் தன்மை உடையவராதலால் துன்பம் வரும்போது மானத்தையே விட்டுவிட்டு, பிறரிடம் தம்மை விற்பதற்கு - அடிமைப்படுத்திக் கொள்வதற்கு - விரைந்து செல்வர். இவை கயமை அதிகாரம் தரும் செய்திகள்.

கயமை பற்றிய குறளறிஞர்களின் கருத்துக்களிலிருந்து சில:

 • வ சுப மாணிக்கம்: இவன் மகனல்லன்; விலங்கல்லன்; மரமுமல்லன்; கயமை என்னும் புத்தம்புதிய பிறப்பினன்.
 • கா அப்பாத்துரை: மலையின் பலபடி உயரங்கள் நற்பண்புகளுக்கு உவமையானால், நீரோட்டமற்ற ஆழமுடைய பாழ்ங்குட்டை அல்லது கயத்தின் சேறும் அழுக்கும் தீய வாடையும் மிக்க அடிப்பகுதியே கயமைக்கு உவமை என்னலாம். கயமையென்ற பெயர்க் காரணமும் அதுவே.
 • இரா இளங்குமரன்: கயம்-பெரியது; ஆழ்ந்தது; இருண்டது; கீழ்மை மிக்கது, மென்மை எனப்பல பொருள் தரும் ஒரு சொல்....ஆழ்நீர்க் கேணி கயம் எனப்படும். நீர் இருப்பதும் தெரியாது. இருட்டுக் கசமாக இருக்கிறது என்பது மக்கள் வழக்கு.
 • கி ஆ பெ விசுவநாதம்: சான்றாண்மை என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், கயமை என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும்.
 • பொற்கோ: சமுதாயத்தில் மோசடி வேலைகளையும் ஏமாற்று வேலைகளையும் செய்து பெரிய மனிதர்போல் வாழ்கின்ற மனிதனைப் பெரிய மனிதன் என்று ஒரு வினாக் குறியோடு குறிப்பிடுவது போலத்தான் அந்தக் காலத்தில் கயவர் என்ற சொல்லும் பயன்பட்டிருக்கிறது. காலப்போக்கில் கயவர் என்ற சொல் மோசடி வேலைகளைச் செய்பவர்களுக்கு மட்டுமே உரிய சொல்லாக ஆகிவிட்டது. இன்னும் சொன்னால் வள்ளுவருடைய கருத்தோட்டத்தில் மனித நிலையில் மிக உயர்ந்த நிலையை ஒட்டிய ஒருவனைச் சான்றோன் என்றும் மிகத்தாழ்ந்த நிலையில் இருக்கின்ற ஒருவனைக் கயவன் என்றும் அவர் குறிப்பிடுகிறார். சான்றோர் மிக உயர்ந்த நிலைக்கு உரியவர். கயவர் மிக மோசமான இழிநிலைக்கு உரியவர்.

இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள கீழ்க்கண்ட இரண்டு பாடல்கள்பற்றி சில குறிப்புகள்:
1. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு (1077),
2. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078),
'கையை மடக்கி கன்னத்துல ஓங்கிக்குத்திப் பல்லை உடைத்து கேட்கும் வன்மையாளர்க்குத்தான் கயவர் கொடுப்பர்; மற்றப்படி உண்ட எச்சில் கையைக்கூட உதறமாட்டார்' என்றும் 'வறுமையாளர் தம்மை வந்து கேட்ட உடனேயே சான்றோர் கொடுத்து உதவுவர். ஆனால் பொருளுடைய கயவர்களைக் கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பதுபோல் நெருக்கி நசுக்கிப் பிழிந்த பொழுதுதான் பயன்படுவர்' என்றும் கூறுகின்றன இப்பாடல்கள். இவ்விரண்டு குறட்பாக்களும் தம் செல்வத்தைச் சிறிதும் பிறர்க்குப் பயன்படுத்தாத தன்னல மிகுந்தோர்மீது வன்முறையைச் செலுத்தி ஒருவர் தன் தேவைகளுக்குத் தீர்வு காணலாம் என வள்ளுவர் சொல்வது போல அமைந்துவிட்டன. கன்னத்தை உடைப்பது, நசுக்கிப் பிழிவது ஆகிய கருத்துக்கள் வள்ளுவர்க்கு வன்முறையும் சில இடங்களில் உடன்பாடுதான் என்பதுபோல் உள்ளன.
கொடாது பொருளை மறைத்து வைக்கும் கயவரை வறுமையாளரான தனிமனிதர் நேரடியாக வன்செயல்களால் ஒறுத்தலும் குற்றமில்லை எனச் சொல்கின்றனவா இப்பாடல்கள்? போன்ற வினாக்கள் எழுகின்றன.
வள்ளுவர் வன்முறையை ஓர் வழியாக எப்பொழுதும் வற்புறுத்தமாட்டார் என எண்ணியவர்கள் கீழ்க்கண்டவாறு அமைதி கூறினர்:

 • செல்வம் பெருகிய கருமிகளின் உடைமையைப் பறிமுதல் செய்யலாம், அது தவறன்று என்பதே வள்ளுவர் கருத்து. நாட்டுக்குப் பயன்படாமல் தீமை செய்வோர்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்யலாம். அவர்கள் நடத்தும் தொழில்களைத் தேச உடைமையாக்கலாம்; இவ்வாறு கொள்ளுவதற்கும் இடந்தருகின்றன. ஆதலால் கயவர்கள் செல்வத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யுமானால் அது குற்றம் அன்று.
 • இங்கே கொல்லப் பயன்படும் என்றால் அவர்களைக் கொல்லவேண்டுமென்பதன்று. உடம்பு வணங்கி அடக்கமும் பணிவும் ஏற்படும்படி சக்கையாக வேலை வாங்கினால் போதும்
 • இங்ஙனம் செல்வம் சேர்ந்து கயமைத்தன உணர்ச்சி பெருகி வளர்வதே பலாத்காரப் புரட்சிக்கு வித்திடுகிறது.
 • கரும்பனைய செல்வங்கள் கயவரிடந்தானே சேர்கிறது என உலகியலுக் கிரங்கியது
 • மெலிந்தவர்கள் சான்றோர்பால் சென்று தம் குறைகளைச் சொல்லிய அளவில் அவற்றை நன்கு அறிந்து பயனைச் செய்வார்கள். எனவே சான்றோர்களுக்குப் பேசும் முறைமை பற்றிக் கூறத் தேவையில்லை. ஆனால் கீழ்மக்களாகிய கயவர்கள் நிலை வேறு. அவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால் கரும்பை வெட்டிப் பிழிந்து சாறு எடுத்துக் கொடுப்பது போன்று உரைத்தால் மட்டுமே அவர்களிடமிருந்து பயனைப் பெறமுடியும். இத்தன்மையில் சான்றோரின் நிலையும் கீழ் மக்களின் நிலையும் வேறாக விளங்குவதால் சொல்லும் தன்மையை வேறுபடுத்திக் காட்டுமாறு உள்ளது
ஈகைக் குணத்தை மிகவும் வேண்டுபவர் வள்ளுவர் என்பது உண்மை. தனது செல்வத்தை மறைத்து வைத்துக்கொண்டு வறியவர்க்கு ஈயாதவர்கள் மீது அவர் வெகுண்டெழுவார்தாம். கயவர்கள் தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள் என்று இவ்வதிகாரத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படிப்பட்டவரிமிருந்து ஏன் அடித்து உதைத்து அதைப் பெறவேண்டும்? மக்களுக்குப் பயன்படாத அவர் செல்வத்தை அரசு பறிமுதல் செய்வது வேறு. ஆனால் இக்குறட்கருத்து, இரந்து வருபவன் ஒருவன் பொருள் கிடைக்காவிடில் அதை அவன் நேரடியாகவே தன் வலிமையைப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு இடந்தருவதாக அமைந்துவிட்டது. தம் செல்வத்தைச் சிறிதும் பிறர்க்குப் பயன்படுத்தாத தன்னல மிகுந்தோரின் செல்வத்தை வன்முறையினால் கவர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் நிலையும் ஏற்படக் கூடும் என்ற கருத்து இக்குறள்களில் கூறப்படுகிறது என அமைதி கண்டு கடந்து செல்லமுடியவில்லை.
இவ்விரண்டு பாடல்களிலும், தனி ஒருவர் இன்னொருவர்க்கு, கொல்வதுபோன்ற துன்பம் தந்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது. இன்னா செய்யாமையை பல இடங்களில் வற்புறுத்திய வள்ளுவர் இங்கு தன்னிடம் உதவி கேட்க வந்தவனுக்கு 'இல்லை' என்று சொன்னதற்காக அவன் கன்னத்தைப் பெயர்க்கலாம்/ கரும்பு ஆலையில் நசுக்கப்படுவதுபோல் துன்புறுத்தலாம் என்று உரிமை வழங்குவது எந்தவகை அறத்திலும் சேராது. அரசு உருவாக்கும் சட்ட அமைப்புகள் மூலமே கொடிய ஒறுத்தல் என்பது நடைபெறவேண்டும். ஈயாதவர் செல்வத்தை எவருமே அடித்து உதைத்து அங்கேயே பறிமுதல் செய்யலாம்; அது தவறன்று என்பது கருத்தாகிவிட்டதே. இது வள்ளுவமல்லாதது.
‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என முற்குறள் (1075) ஒன்றில் சொல்லப்பட்டது, அக்கருத்திற்கேற்பவே கயவர் அச்சுறுத்தினால்மட்டுமே பயன்படுவர் எனக் கூறி அமையலாம்.

கயமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 • 1071ஆம் குறள் கயவர் தோற்றத்தால் மக்கள் போன்றே காணப்படுகின்றனர்; அவர் மக்களையொத்தார் போன்றஒப்பு யாம் கண்டதில்லை என்கிறது.
 • 1072ஆம் குறள் தம் உள்ளத்தில் கவலையின் உறுத்தல் ஏதும் இல்லாதவர் ஆதலால் நன்மை தீமைகள் அறிந்தவர்களினும் கயவர் பேறுபெற்றவர் என்று சொல்கிறது.
 • 1073ஆம் குறள் கயவர் வானுலகில் இருக்கும் தேவரைப் போன்றவர்கள்; அத்தேவரும் இக்கயவரைப் போலக் கட்டுப்பாடின்றித் தாம் விரும்பியபடியே நடப்பதால் என்கிறது.
 • 1074ஆம் குறள் தன்னினும் சுருங்கிய அடங்காதவராக ஒழுகுகின்றவரைக் கண்டால் அவரினும் தாம் மேம்பட்டதாகக் காட்டி செருக்கடைவர் கயவர் எனச் சொல்கிறது.
 • 1075ஆம் குறள் கீழ்மக்கள் ஒழுக்கமுடையராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அச்சமே; அதுதவிர்த்து, தாம் ஆசைப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம் எனச் சொல்கிறது.
 • 1076ஆம் குறள் தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் கொண்டுசென்று சொல்லுதலால் கயவர் அடிக்கப்படும் பறைக்கருவி போன்றவர் என்கிறது.
 • 1077ஆம் குறள் கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையினை உடையர் அல்லாதார்க்கு, கயவர் தாம் உண்டு கழுவிய கையைக்கூட உதறமாட்டார்கள் என்கிறது.
 • 1078ஆம் குறள் ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலே இரங்கிப் பயன்செய்வர் மேன்மக்கள்; கரும்பு போல் நையப் புடைத்தவழியே, கீழ்மக்கள் பயன்படுவர் எனச் சொல்கிறது.
 • 1079ஆம் குறள் உடுத்துவதையும் உண்பதனையும் கண்டால் அவர்கள்மேல் குற்றங் காண வல்லவர் கயவர் என்கிறது.
 • 1080ஆம் குறள் கயவர் தமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அதற்காகத் தம்மையே பிறர்க்கு விரைந்து விலைப்படுத்த வல்லவர்; வேறு எத்தொழிற்குத் தகுதியானவர் அவர்? எனக் கேட்கிறது.

கயமை அதிகாரச் சிறப்பியல்புகள்

மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல் (1071) என்ற குறள் மக்கள் போல்வர் கயவர்; அக்கயவர்களும் மக்களும் ஒத்திருக்கும் ஒப்புமையைப் போல உலகத்தில் வேறு இரண்டு பொருள்களிடையே ஒப்புமையுள்ளதை யாம் கண்டதில்லை என்கிறது. கயவர் ஒருவரிடம் நாம் உறவு ஏற்படுத்தியபின் அவரது உண்மையான குணம் தெரியவரும். இதற்கிடையில் நமக்கு நிறைய இழப்பு உண்டாக வாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் போலிகள் எனப்படும் கயவர்கள் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தும் பாடல் இது.

தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்துஒழுக லான் (1073) என்ற பாடல் கயவரை புகழ்வார் போன்று பழிக்கிறது. வானுலகத் தேவர் என்பவர் தம்மின் பெரியோர் என்று சொல்லக்கூடியவர் யாருமில்லாததால் இடித்துரைப்பு ஏதுமின்றி ஒழுகும் இயல்பினர் என்பதால் தனக்குத் தோன்றியவாறெல்லாம் செய்து ஒழுகுவர். அதனால் கயவர் தேவர்க்குச் சமம் என்று எள்ளல் நடையில் சொல்லப்பட்டது.

ஒழுக்கமாக நடக்கவேண்டுமெனத் தற்காட்டுப்பாட்டுடன் நடப்பார்கள் பெரியோர். கீழ்மக்களோ பெரிதும் அச்சத்தால் ஒழுக்கமுடையவராயிருக்கின்றனர். ஆசாரம் அதாவது ஒழுக்கம் என்பது இவர்களுக்கு அச்சத்தால் உண்டாவது. சில சமயம் தமது ஆசை நிறைவேற வேண்டி ஒழுங்குமுறையாக இருப்பார்கள். இதை அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது (1075) என்ற பாடல் தெரிவிக்கிறது. கயவர் இயல்பாகவே அச்சமுடையவர்கள் என்பது கருத்து.

கயவர்க்கு எந்தவொரு செயலையும் உருப்படியாகச் செய்யவராது. தனக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தாலோ, தமது பணத்தேவைக்காகவோ அல்லது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவோ, தன்மானத்தையே விற்க முன்வருவர் இவர்கள். வேறு எந்தத் தகுதி இவர்க்கு உண்டு? என்று நகைச்சுவை உணர்வுடன் கேட்பது எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து (1080) என்ற பாடல்.
குறள் திறன்-1071 குறள் திறன்-1072 குறள் திறன்-1073 குறள் திறன்-1074 குறள் திறன்-1075
குறள் திறன்-1076 குறள் திறன்-1077 குறள் திறன்-1078 குறள் திறன்-1079 குறள் திறன்-1080