இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1281 குறள் திறன்-1282 குறள் திறன்-1283 குறள் திறன்-1284 குறள் திறன்-1285
குறள் திறன்-1286 குறள் திறன்-1287 குறள் திறன்-1288 குறள் திறன்-1289 குறள் திறன்-1290

புணர்ச்சி விதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும் தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர் முந்து முந்து விரைதல்.
- மணக்குடவர்

தொழில் காரணமாக நீண்டகாலம் பிரிந்து சென்று திரும்பி வந்துள்ள கணவரை அவரது காதல் மனைவி இன்னும் நெருங்கிச் சந்திக்கவில்லை. எப்பொழுது அருகில் சென்று அவரை அரவணைப்பேனோ என ஏங்கி நிற்கிறாள். பிரிவாற்றாமையில் உண்டான வருத்தத்தை உணர்த்தி ஊடுவதா அல்லது நேராக அவனுடன் கூடிவிடுவதா என்ற மனப் போராட்டம் கொள்கிறாள். அவரை நேரில் கண்டவுடன் அவர் தவறுகள் ஒன்றும் தெரிவதில்லை அவளுக்கு. கண்ணாலேயே தன் மீதான வருத்தத்தைக் காட்டும் அதேநேரம் அவரைத் தழுவிக் கொள்வதை எதிர்நோக்கித் தலைவி பரபரத்துக் காணப்படுவதையும் கணவர் உணர்ந்து கொள்கிறார்.

புணர்ச்சிவிதும்பல்

பிரிவில் சென்றிருந்த கணவர் இல்லம் வந்துவிட்டார். பிரிவுக்காலத்தில் அழகிழந்த நிலையில் இருந்த தலைவி இப்பொழுது கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கித் தன் காமநோயினைத் தீர்க்குமாறு கண்களால் இறைஞ்சி நின்றாள் எனக் கூறி சென்ற அதிகாரம் முடிந்தது. வீட்டில் மற்றவர்கள் இருந்ததால் கணவனும் மனைவியும் இன்னும் நெருங்கிக் கொள்ளமுடியாதிருக்கிறது, பிரிவுக் காலத்தில் ஒருவரையொருவர் நினைத்து மட்டுந்தான் களிப்படைய முடிந்தது; இப்பொழுது நேருக்குநேர் பார்த்து மகிழ்கின்றனர்.

தலைவிக்குக் கணவரை நெருங்கிக் காதல் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக மேலோங்கி நிற்கிறது. அந்த நிலையில் அவருடன் ஊடி காம இன்பத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என நினைவும் வருகிறது. அவள் கண்கள் அவர் செல்லும் பக்கமெல்லாம் சென்று சுழன்று கொண்டிருக்கின்றன. அவருடன் சிறு சண்டை போடவேண்டும் என மனம் கூற நெஞ்சோ அவரைக் கூடவேண்டும் என்றே விரும்புகிறது. அவரை நேரில் கண்டவுடன் அவர் மீதான பழிகள் எல்லாம் மறைந்து போய்விட்டன; அவரைப் பார்ப்பதற்கு முன் அவர் செய்வன எல்லாமே தவறானதாகவே அவளுக்குப் பட்டது. அவரைக் கண்டபின் அவருடைய தவறுகள் எதுவுமே அவளுக்கு தெரிவதில்லை; தனக்கு இழிவு உண்டாகக்கூடிய அளவு பிரிந்து சென்று துன்பம் தந்தாலும் அவர் மார்பைத் தழுவுதல் எக்காலத்தும் தனக்குக் களிப்பு தருவதுதான்; பொய்த்துப் போகும் என்பதை அறிந்தும் ஏன் இப்பொழுது ஊடி நிற்கவேண்டும்? கூடலுக்கு முன் ஊடல் என்பது உதவாது. அவள் எப்படி அவரைப் பணிகளுக்கிடையே நோக்கிக் கொண்டிருக்கிறாளோ அவ்வாறே அவரும் தலைவியின் மேல் கண் கொண்டவராகவே இருக்கிறார். காமம் மலரினும் மென்மையானது. எனவே அதன் செவ்வியைப் பெற பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். இவ்வாறு தலைவியின் எண்ணஒட்டங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, அவள் கணவரை நோக்கி ஊடல் கொண்டு சினப்பார்வை வீசியதையும் அதேவேளை அவரைத் தழுவுவதற்காக அப்பேதை துடிதுடித்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

புணர்ச்சிவிதும்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1281 ஆம்குறள் நினைத்த உடனேயே களிப்புப் பெறுதலும் பார்த்த பொழுதே மகிழ்ச்சி அடைதலும், கள் உண்பார்க்கு இல்லை; காதல் கொண்டவர்க்கு உண்டு என்கிறது.
  • 1282 ஆம்குறள் காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் தினையளவு கூட ஊடாதிருத்தல் விரும்பப்படும் எனச் சொல்கிறது.
  • 1283 ஆம்குறள் என்னைக் கருதாமல் தான் விரும்பியவற்றையே செய்தாலும், கணவனைப் பார்க்காமல் என் கண்கள் அமைதியுறுவதில்லை எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1284 ஆம்குறள் தோழி! ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன்; அது மறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு என்று தலைவி கூறுவதை சொல்கிறது.
  • 1285 ஆம்குறள் மை எழுதப்படும் காலத்து அஞ்சனக் கோலின் இயல்பினைக் காணாத கண் போலக் கணவனைக் கண்டவிடத்து அவனுடைய தவறுகள் எனக்குத் தெரிவதில்லை எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1286 ஆம்குறள் கணவனை நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை; பார்க்காதபோது தவறற்றவற்றை அறிய முடியவில்லை எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1287 ஆம்குறள் என்ன ஆகும் என்று அறிந்தே வெள்ளநீரில் குதிப்பவர் போல, ஒரு கணம் கூட நிற்காது எனத் தெரிந்தும் காதலரிடம் ஊடல் கொள்ள நினைப்பது எதற்காக? என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1288 ஆம்குறள் கள்வனே! இழிவு வரத்தக்க இன்னாதவற்றைச் செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1289 ஆம்குறள் காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைப் பெறுவார் ஒரு சிலரே என்கிறது.
  • 1290 ஆவதுகுறள் தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் மிக விரைந்து, பார்வையால் ஊடலைக் காட்டிக் கலங்கி நின்றாள் எனத் தலைவன் தலைவியைப் பற்றிச் சொல்வது.

புணர்ச்சிவிதும்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்

இவ்வதிகாரத்துப் பாடல்கள் மகளிரின் உள்ளத்துணர்வுகளில் புதியவற்றை வெளிப்படுத்துவனவாகவும் உளவியல் அடிப்படையில் அமைந்தனவாகவும் உள்ளன.

பனையளவு காமம் கொண்டிருந்தால் தினையளவுகூட ஊடல் கொள்ளக் கூடாது எனச் சொல்லப்படுகிறது. அன்புடை நெஞ்சங்கள் காமம் மிகு நிலையில் கலக்கும்போது, அன்பு நிறைவேயன்றி உள்ள நிறைவும் உயிர் நிறைவும் பெற வாய்ப்பு ஏற்படுகின்றது, அப்படிப்பட்ட காலத்தில் தினையளவும் ஊடுதல் கூடாது என்று தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் (குறள் 1282) என்று காமஉளவியல் நோக்கில் அறிவுரை தருகிறது.

பிரிவிலிருந்து திரும்பி வந்த காதலனுடைய தவறு நினைந்து ஊட வேண்டும் என்று சென்றாளாம். ஆனால் அவளுடைய நெஞ்சு அதை மறந்து கூடவேண்டும் என்று எண்ணியதாம். ஊடல் கொள்வதா ஊடல் இல்லாமல் கூடி விடுவதா என்ற மனப்போராட்டத்தை சுற்றியே இவ்வதிகாரம் அமைகிறது. ஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு (குறள் 1284) என்ற பாடல் ஊடல் கொள்ள நினைத்த நிலையிலும் உள்ளம் ஒன்றுபட்டிருந்ததைக் காட்டுகிறது. கணவரை நேரில் காணாத போது அவர் செய்யும் தவறுகளே நினைவுக்கு வருகின்றன என்றும் கண்டபோது தவறுகளாக எதுவுமே தெரிவதில்லை என்றும் மேலும் கூறுகிறாள் தலைவி.

காமத்துப்பாலின் பருப்பெருளாக அமைவது மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (குறள் 1289) என்ற புகழ் பெற்ற பாடல். இது 'காதலில் கடின மனம் இல்லை. காமம் மக்கள் உணர்வுகளுள் மிக மென்மையானது. அதன் மென்மையின் மேன்மையைப் போற்றும் சிலருக்கே அதன் சிறப்புத் தன்மைகள் தெரியும்' எனக் கூறுகிறது. பாலியல் பயிலும்போது அதன் முழுச்சுவை காண எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென உளவியல் பாடம் தருகிறது. இடமும், காலமும், நுட்பமும் அறிந்து தக்க பக்குவத்துடன் காம இன்பத்தைத் துய்க்க வேண்டும் என அறிவுரை பகர்கிறது.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று (குறள் 1290) என்ற பாடலில் முதிர்ந்த ஊடல் நிலை(துனி)க்கும் காதல்கணவரின் அணைப்புக்காக விரையும் விழைவுக்கும் இடையில் தத்தளிக்கும் தலைவியின் உள்ளநிலை உணர்ச்சி மிக்கதாகத் தீட்டப்பட்டுக் காட்டப்படுகிறது.
குறள் திறன்-1281 குறள் திறன்-1282 குறள் திறன்-1283 குறள் திறன்-1284 குறள் திறன்-1285
குறள் திறன்-1286 குறள் திறன்-1287 குறள் திறன்-1288 குறள் திறன்-1289 குறள் திறன்-1290