வானின்று உலகம் வழங்கி வருதலால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான்;
பரிதி: மழையினாலே உலகந் தழைத்து வருகையான்;
காலிங்கர்: மழையாவது வந்து நிலைபெற்று, மற்றதனால் இவ்வுலகத்து உயிர்களானவை நடைபெற்றுச் சேறலான்;
பரிமேலழகர்: மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்;
பழம் ஆசிரியர்கள் 'மழைவளம் நிலைநின்று உலகம் நிலைபெற்று வருதலான்' என்று இப்பகுதிக்குப் பொருள் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மழையால் உலகம் நிலைபெற்று வருவதால்', 'மழையினால் உலகம் நிலைபெற்று வருவதால்', 'அமிர்தம் என்பது அதை உண்டவர்களை அழியாதிருக்கச் செய்வதுபோல உயிர்கள் இருந்துகொண்டே யிருக்கும்படி உலகத்தை அழிவின்றி வாழவைப்பது மழை', 'மழை உண்மையால் உலகத்தில் உயிர்கள் வாழ்க்கை நடத்திவருவதால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
வான்மழை நிலை நிற்க உலக வாழ்க்கை தொடர்ந்து வருவதால் என்பது இப்பகுதியின் பொருள்.
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை
மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
பரிதி: மழையும் அமிர்தமும் நிலையாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இம்மழையானதுதான் இவ்வுலகத்துக்கு ஓரமுதம் என்று உணரும் பகுதியுடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.
'மழை அமிர்தம் என்று உணரும் பகுதியது என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மழையே அமிழ்தம் என்று உணரவேண்டும்', 'அம்மழை உலகிற்கு அமிழ்தம் என்று உணரப் பெறும்', 'அதனால் மழை அமிர்தத்துக்கு ஒப்பானது', 'உயிரினை உடம்பிலே நிலைபெறச் செய்யும் மழையே சாவாமருந்து என்று கருதத்தக்கது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது என்பது இப்பகுதியின் பொருள்.
|