நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும்;
பரிதி: பெருமையான கடலில் சங்கு, முத்து, பவளம் பிறவாது;
காலிங்கர்: பெரிதாகிய கடலும் தன்றன்மை குறைபடும்;
பரிமேலழகர்: அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம்.
பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பெரிய கடலும் தன் தன்மை குறைபடும் என்று இப்பகுதிக்கு உரை செய்தனர். மணக்குடவர் நிலமேயன்றி நெடியகடலும் என உரைத்தார். பரிமேலழகர் 'இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம்' என்று விளக்கமும் தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்கடலும் தன் வளம் குறைந்துவிடும்', 'கடலுங்கூடக் குறைந்து வறண்டு போகும்', 'பெரிய கடலும் தனது வளத்திற் குறைவுபடும் (கடலில் நீர்வாழும் உயிர்களும், முத்து மணி முதலியனவும் உண்டாகா என்றவாறு)', 'பெரிய அக்கடலில் கிடைக்கும் வளங்கள் எல்லாமும் குறைந்து போகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பெரிய கடலும் தன் தன்மையில் குறைவுபடும் என்பது இத்தொடரின் பொருள்.
தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மின்னி மழையானது பெய்யாவிடின்.
மணக்குடவர் குறிப்புரை: தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.
பரிதி: மழை பெய்யாவிடில்.
காலிங்கர்: பருவங்களில் வந்து பூரித்து மழை வழங்காதாயின்.
பரிமேலழகர்: மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
மழை பெய்யாவிடில் என்று அனைத்து பழம் உரையாசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். 'தடிந்து' என்ற சொல்லுக்கு மணக்குடவர் 'மின்னி' என்றும் காலிங்கர் 'பூரித்து' என்றும் பரிமேலழகர் 'குறைத்து' என்றும் பொருள் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மேகம் நீரைத்தாங்கத் திரும்பப் பொழியாவிடின்', 'கடலிலிருக்கிற தண்ணீரை ஆவியாக்கி ஆகாயத்திற்குக் கொண்டு போகிற மேகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இடியிடித்து மழை பெய்யாமல் இருந்துவிடுமானால்', 'மேகமானது கடல்நீரைக் குடித்துக் கடலுக்குக் குறைவு செய்து குடித்த நீரைத் திரும்பக் கொடுக்காமற் போமாயின்', 'கடலில் முகந்த நீரை முகில் மழையாக மீண்டும் வழங்காது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
மின்னல் மின்னி மழை பொழியாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
|