செயற்பால தோரும் அறனே ஒருவற்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே;
பரிதி: மனம் வாக்குக் காயங்களாலே செய்வதெல்லாந் தருமமே செய்க;
காலிங்கர்: ஈண்டுக் குறிக்கொண்டு செய்யத்தகுவதாகப் பெரியோர் கருதுகின்றது அறமான தொன்றுமே; [குறிக்கொண்டு-இலக்குவைத்து]
பரிமேலழகர்: ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே;
'ஒருவன் செய்யத்தக்கது அறமே' என்று இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் உரை கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் செய்யவேண்டுவது அறமே', 'ஒருவனுக்குச் செய்யத் தக்கது அறச் செயலே', 'ஒவ்வொருவரும் ஆராய்ந்து செய்யவேண்டிய காரியம் அறமே', 'செய்ய வேண்டியது அறமே' என்றபடி உரை பகன்றனர்.
ஒருவன் கருத்துடன் செய்ய வேண்டியது அறமே என்பது இப்பகுதியின் பொருள்.
உயற்பால தோரும் பழி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பும் பகுதியது பழியே.
மணக்குடவர் கருத்துரை: மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
பரிதி: விடுவதாகின் பாவத்தை விடுவது என்றவாறு.
காலிங்கர்: தமக்கு நன்மையறிவார் ஒருவர்க்குப் பிறவித்துயரினின்றும் உய்யலாம்; அதனால் மிகவும் ஆராய்ந்து கொண்மின், பாவமாகிய பழியினை என்றவாறு.
பரிமேலழகர்: ஒழிதற்பான்மையது தீவினையே.
பரிமேலழகர் கருத்துரை: 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும்
ஒழிவதும் நியமிக்கப்பட்டன.
'நீக்கத்தக்கது பழியே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் விடவேண்டியது பழியே', 'தள்ளத்தக்கது பழிச்செயலே', 'செய்துவிடாமல் ஆராய்ந்து விலக்க வேண்டியது பழிவரக்கூடிய காரியங்களே', 'நீக்க வேண்டியது பழியே' என்றவாறு உரை தந்தனர்.
செய்துவிடாமல் ஆராய்ந்து நீக்க வேண்டியது பழி என்பது இப்பகுதியின் பொருள்.
|