பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின்;
மணக்குடவர் குறிப்புரை: மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.
பரிதி: அபகீர்த்தி வராமல் நடத்தி விருந்தோம்பலும் உண்டாகிய; [அபகீர்த்தி-இகழ்ச்சி].
காலிங்கர்: தென்புலத்தாராதியாகச் சொன்ன ஐவகைவேள்வி செலுத்துங்காலத்து அதற்கு யாதானுமொரு குற்றம் உண்டாயின் பழிவருமென்று அஞ்சிப் பாதுகாத்துப்
பகுத்தூண் உடைத்தாயின்;
பரிமேலழகர்: பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும்
பகுத்துத் தான் உண்டலை உடைத்தாயின்;
'பழியை அஞ்சிப் பகுத்து உண்டலை உடைத்தாயின்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். காலிங்கர் ஐவகை வேள்வி செலுத்துங் காலத்து பழிவராமல் பாதுகாத்து என்கிறார். இவர் கூறும் ஐவகை வேள்விகளாவன: தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், மானுடயாகம், பிதிர்யாகம்.
இன்றைய ஆசிரியர்கள் 'பழியஞ்சிப் பகுத்துண்ணும்', 'பழிக்கு அஞ்சிப் பலரோடு பகுத்துண்டலை உடைத்தாயின்', 'கொடுமைக்குப் பயந்து நேர்வழியிற் பொருளீட்டி அப்பொருளை உரியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்ணுமுறையினை உடைத்தாயிருந்தால்', 'நல்லோரால் பழிக்கப்படுவதற்கு அஞ்சி தமக்குரியதைப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் உடையதாக' என்றபடி உரை தந்தனர்.
பழிவராமல் காத்தும் பகுத்து உண்டலையும் உடைத்தாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலை, தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை.
பரிதி: இல்வாழ்க்கை எக்காலமும் நடக்கும் என்றவாறு..
காலிங்கர்: இவ்இல்லறத்தினது ஒழுகலாறு குறைபட்டு ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் இல்வாழ்க்கை அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை.
பரிமேலழகர் விரிவுரை: பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி
எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.
மணக்குடவர் 'தனது ஒழுங்கு இடையறுதல் எக்காலத்திலும் இல்லை' என்றும் பரிதி 'இல்வாழ்க்கை எக்காலமும் நடக்கும்' என்றும் காலிங்கர்
'இல்லற ஒழுகலாறு குறைபட்டு ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'இல்வாழ்க்கை அவன் வழி
உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது. வழியும் நில்லாது', 'ஒருவன் வாழ்க்கை, அவன்வழி (பரம்பரை) எக்காலத்தும் இடையறவுபடாது', 'ஒருவனது இல்வாழ்க்கை அவனது குடிவழி (சந்ததி) உலகத்தில் எப்போதும் அற்றுப் போவதில்லை.(நிலைத்திருக்கும்)', 'இல்லற வாழ்க்கை இருக்குமானால் அவ்வாழ்க்கை உலகில் என்றும் நிலைத்து நிற்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
இல்வாழ்க்கை வழி எக்காலத்திலும் குறைபட்டு ஒழிதல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|