இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்;
பரிப்பெருமாள்; இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லாம் என்றது வாழ்க்கைப் பன்மை.
பரிதி: இராதசரீரத்தை இருப்பது என்றும், நில்லாத செல்வம் நிற்பதென்றும் வாழ்வர்;
காலிங்கர்: ஒருவன் இல்லறத்திருந்து இல்வாழ்க்கையைப் பாதுகாக்கும் காரணம் யாதோவெனின்........
பரிமேலழகர்: மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்;
'இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள 'குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம்', 'வீடுவாசலோடு இருந்துகொண்டு பொருள்களைப் பாதுகாத்து மனைவிமக்களுடன் குடும்பம் நடத்துவதன் நோக்கமெல்லாம்', 'மனைவியுடன் வீட்டிலிருந்து பொருள்களைப் போற்றி வாவதெல்லாம்', 'இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்' என்ற பொருளில் உரை தந்தனர்.
குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் என்பது இப்பகுதியின் பொருள்.
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
பரிப்பெருமாள்; வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இல்வாழ்க்கையின் பயன் விருந்தோம்பல் என்றது.
பரிதி: இதனை அறியாமல் விருந்து செய்தல் வேளாண்மை செய்வதற்கு ஒக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம். [வேளாண்மை- உதவுதல்]
'விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'விருந்துபேணி உதவி செய்தற்கே', 'வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக இருப்பதற்காகத்தான்', 'விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டேயாம்', 'விருந்தினரைப் பேணி அவர்க்கு உதவி செய்யும் பொருட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.
விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டு என்பது இப்பகுதியின் பொருள்.
|