ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்;
பரிதி: ஒழுக்கநெறி கைவிடார்;
காலிங்கர்: தமது ஆசாரத்தில் சிறிதும் தளர்ந்து நில்லார் அறிவுடையாளர்;
பரிமேலழகர்: செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; [சுருங்கார் - குறைவுறார்; மனவலியுடையார் - நெஞ்சு உரம் கொண்டவர்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார். [உரவோர் - மனவலியுடையோர்]
'ஒழுக்கத்தினின்று தளர்ந்து நில்லார் அறிவுடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உரவோர் என்பதற்கு பரிமேலழகர் மனவலி உடையார் என்றார்; மற்றவர்கள் அறிவுடையார் எனப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுத் திட்பமுடையவர்கள் ஒழுக்க நெறியினின்றும் தளர மாட்டார்கள்', 'அறிவுடையோர் ஒழுக்கத்தில் தளரமாட்டார்கள்', 'அறிஞர் செய்யுங்கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்', 'அறிவுடையோர் நல்லொழுக்கத்தில் குறைவுபடார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உள்ளத் திண்மையுடையார் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது இப்பகுதியின் பொருள்.
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.
பரிதி: அது ஏன் எனில் ஒழுக்கம் கெட்டது பிராணச்சேதம் வந்ததற்கு ஒக்கும் என்று அறிந்து என்றவாறு. [பிராணச் சேதம் - உயிரழிவு]
காலிங்கர்: அது எங்ஙனம் எனின், தம் ஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் தங்கும் மிகுதிப்பாட்டினை உணர்ந்து என்றவாறு. [வழுவுதல் - தவறுதல்]
பரிமேலழகர்: அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.
'ஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் வருதலை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உயிரழிவு உண்டாதலை அறிந்து' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கக் கேட்டால் துன்பம் உண்டாதலையறிந்து', 'ஒழுக்கம் தவறுவதால் வரக்கூடிய குற்றங்களை உணர்ந்து', 'ஒழுக்கக் குறைவினால், இடர் விளைதலை அறிந்து', 'நல் ஒழுக்கத்திலிருந்து தவறுதல் நமக்குக் குறைவைத் தரும் என்று அறிந்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.
|