உண்ணாது நோற்பார் பெரியர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;
பரிதி: தம்மிடமுள்ள சீவனை ஒறுத்துச் சருகு பொசித்துத் தபசு பண்ணுவார் பெரியரானாலும்; [பொசித்து - நுகர்ந்து; தபசு - தவம்]
காலிங்கர்: உலகத்து உண்டு தவம் பண்ணுவோர் யாவரினும் உண்ணாமைத்தவம் பண்ணுபவரே சாலப் பெரியர்; [உண்ணாமைத்தவம் பண்ணுபவரே - உணவும் உட்கொள்ளாமல் தவம் செய்வாரே]
பரிமேலழகர்: விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;
'உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பட்டினி கிடந்து நோன்பிருப்பவர் பெரியவர்', 'உண்ணாது நோன்பு மேற்கொள்பவர் பெரியவரே', 'உண்ணாது தவஞ் செய்வார் பெரியோர் எனப்படுதற்கு உரியர்', 'உண்ணாமல் உற்ற நோயைப் பொறுத்துக் கொள்ளுபவர் எல்லாரிலும் பெரியர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உண்ணாது நோன்பிருப்பவர் பெரியவர் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின். [கடுஞ்சொல்-கொடிய சொல்]
மணக்குடவர் குறிப்புரை: இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
பரிதி: அவர், கோபம் பிறந்து சாபம் இடுவார்; இல்லறத்தான் பிறர் செய்த குற்றம் பொறுக்கின்ற படியினாலே இவன் பெரியவன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரும் பிறரால் சொல்லப்பட்ட இன்னாச் சொற்களைப் பொறுக்கும் பொறையுடையாளரின் பின் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது. [நோற்றலின் - பொறுத்துக் கொள்ளுதலினால்.
'அவர் பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவரினும் பெரியவர் வசவைப் பொறுப்பவர்', 'அவர் பெரியவராவது பிறர் இகழ்ந்து கூறும் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு அடுத்த நிலையில்தான் (உண்ணாமல் நோற்பவரினும் இன்னாச்சொல் நோற்பவர் மிகப் பெரியவர்.)', 'பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பவர்களுக்கு பிற்பாடே', 'ஆனால், அவரும் பிறர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்துதான் பெரியார் ஆவார். (கடுஞ்சொற்களைப் பொறுப்பவரே உண்ணா நோன்பினரை விடப் பெரியவர்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அவர் பிறர் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்துதான் என்பது இப்பகுதியின் பொருள்.
|