அழுக்கற்று அகன்றாரும் இல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை;
பரிதி: மனத்தில் அழுக்குடையார் செல்வம் பெற்றதும் இல்லை;
பரிமேலழகர்: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை;
மனத்தில் அழுக்குடையார் செல்வம் பெற்றதும் இல்லை என்று பரிதியும் அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை கொண்டு செல்வத்திற் பெரியராயினாரும் இல்லை', 'பொறாமையினால் செல்வம் அதிகப்பட்டவர்களும் இல்லை', 'பொறாமை கொண்டு பெரியாராயினாரும் இல்லை', 'பொறாமையால் செல்வராயினாரும் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொறாமை கொண்டு வாழ்வு சிறந்தவரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அச்செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் செவ்வியார்க்குக் கேடில்லை என்றார். இதில் கேடில்லாமையை இவ்வுலகத்திற் காணலாம் என்கின்றார்.
பரிதி: மனத்தில் அழுக்கில்லாதார் செல்வமாகிய லட்சுமியை நீங்கியதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அச்செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. [அச்செயலிலாதார் - அந்த அழுக்காற்றைச் செய்யாதவர்]
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.
செவ்வியார்க்குக் கேடில்லாமையை இவ்வுலகத்திற் காணலாம் என்று பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினார். பரிதி மனத்தில் அழுக்கில்லாதார் செல்வத்தின் நீங்கினாரும் இல்லை என்றும் பரிமேலழகர் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை என்றும் உரை செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை இல்லாதார் செல்வப் பெருக்கில் நீங்கியதும் இல்லை', 'அது இல்லாததனால் செல்வம் இழந்து விட்டவர்களும் இல்லை', 'பொறாமை இல்லாதவர்களுள் செல்வ வளர்ச்சியில் நீங்கினாரும் இல்லை', 'பொறாமையில்லாமல் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொறாமை இல்லாதாருள் வளர்ச்சி குன்றினாரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|