இலம்என்று வெஃகுதல் செய்யார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்;
பரிதி: வறியம் என்று பாவத்தைச் செய்யார்;
காலிங்கர்: யாம் கைப்பொருள் இலம் என்று கருதி இழிவாகப் பிறர்மாட்டுச் சென்று விரும்புதலை எஞ்ஞான்றும் செய்யார்;
பரிமேலழகர்: 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்;
'வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை நாடார்', 'தாம் ஏழை என்று பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்', 'செல்வம் இல்லையே என்பதற்காகப் பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட மாட்டார்கள்', 'பொருளற்றோம் என்று கருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தாம் வறுமையுற்றுள்ளோம் என்று எண்ணி வருந்துகின்ற நிலையுலும்கூடப் பிறருடைய பொருளை விரும்பமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். [புன்மையிலாத- உள்ளவாறுணரும் மெய்யறிவுடைய]
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
பரிதி: மறுமைக்கு வறுமையாம் என்று வெஃகாமை யுடையவர் என்றவாறு.
காலிங்கர்: யாரோ எனில், தமது ஒழுக்க நெறிக்கு மிகைப்படும் பொறிகண்மேல் செல்லாதவாறு ஐம்புலன்களை வென்ற புல்லிமையற்ற நல்லறிவினை உடையோர் என்றவாறு.[புல்லிமையற்ற- உள்ளவாறுணரும் மெய்யறிவுடைய]
பரிமேலழகர்: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். [ஐம்புலன்கள் - செவி முதலிய ஐந்து இந்திரியங்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல். [திரிபின்றி உணர்தல்-மாறுபாடு இன்றி உள்ளவாறே அறிதல்]
'ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர்', 'ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற அறிவினையுடையவர்கள்', 'ஐம்புல ஆசைகளையும் அடக்கி ஆளக்கூடிய குற்றமற்ற அறிவுடையவர்கள்', 'ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவினையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
புலன்களை வென்று அடக்கிய குற்றமற்ற தெளிந்த உணர்வுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|