பிறன்பழி கூறுவான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன்;
பரிப்பெருமாள்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன்;
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறம் சொல்லுவான்;
காலிங்கர்: பிறன் ஒருவனைப் பழிசொல்லக் கருதுமவன்;
பரிமேலழகர்: பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும்.
'பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறனது பழியைப் புறத்தே தூற்றுபவன்', 'இன்னொருவன் மேல் பழி சுமத்தக் கோள் சொல்லுகின்றவன்', 'பிறருடைய குற்றங்களைப் புறத்தே தூற்றுவானுடைய', 'பிறனொருவன் பழியை அவன் இல்லாத பொழுது ஒருவன் கூறினால்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறனொருவன் பழியை அவன் புறத்தே கூறுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.
தன் பழியுள்ளும் திறன்தெரிந்து கூறப்படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.
பரிப்பெருமாள்: தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுதான் பிறராற் புறஞ்சொல்லப் பெறுவன் என்கின்றது.
பரிதி: தன் குற்றத்தையும் விசாரித்துச் சொல்ல வேணும் என்றவாறு. [விசாரித்து - ஆய்ந்து அல்லது பிறரைக் கேட்டறிந்து]
காலிங்கர்: தனது பழியைப் பிறர் கருதும் திறப்பாட்டினையும் தெளிய ஆராய்ந்து கண்டு கூறப்படும் என்றவாறு. [திறப்பாட்டினை - சிறப்பினை]
பரிமேலழகர்: தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார். [திறன் -திறத்தை (வலியை) உடைய பழிச் சொற்கள்; உளையுந் திறத்தன -வருத்தும் வகையன]
'தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து கூறப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் பிறரால் சொல்லப்படுவன் என்று கூற பரிமேலழகர் அவனால் அதாவது பழி கூறப்பட்டவனால் கூறப்படும் என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன் பழிகளுள் வருத்தும் திறமுடையதைத் தேர்ந்து அவனாற் கூறப்படுவான்', 'தான் யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவன் தன்மேல் கோள் சொல்லும் குற்றம் நினைப்பானே என்றதைத் தெரிந்து பேச வேண்டும்', 'பழிச் செயல்கள் யாவற்றுள்ளும் மிக இழிந்தவை பிறரால் தெரிந்தெடுத்து உரைக்கப்படும்', 'அங்ஙனம் கூறியவனைப்பற்றிக் கூறப்பட்டவன் வருந்தும் பழிகளைத் தெரிந்து கூறுவான். (புறம் கூறுவதனால் பகைமை வளர்ந்து கொண்டே போகும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் குற்றங்களுள் மிக இழிந்தவற்றைத் தேர்ந்து கூறப்படும் என்பதை உணரவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
|