இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0202தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:202)

பொழிப்பு (மு வரதராசன்): தீயசெயல்கள் தீமையை விளைவிப்பதால், அத் தீய செயல்கள் தீயைவிட மிகையாக அஞ்சத்தக்கன.மணக்குடவர் உரை: தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

பரிமேலழகர் உரை: தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவன் தனக்கு இன்பம் என்று கருதிச் செய்யும் தீவினைகள் இன்பம் தரா. தீமையே தரும். அதனால் தீயைவிடத் தீவினை அஞ்சத்தக்கது. தீ ஒரோவழி நன்மையும் செய்யக்கூடியது. தீவினையால் யாதொரு நன்மையும் இல்லை. அதனால் தீயினும் அஞ்சப்படும் என்றார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தீயவை தீய பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்.

பதவுரை:
தீயவை-கொடியசெயல்கள்; தீய-துன்பங்கள்; பயத்தலால்-பயனாகத் தருதலால்; தீயினும்-நெருப்பைக் காட்டிலும்; அஞ்சப்படும்-நடுங்கத்தகும்.


தீயவை தீய பயத்தலால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே;
பரிதி: பாவம் பாவத்தையே விளைத்தலால்;
பரிமேலழகர்: தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்;

'தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள்' என்று தீயவைக்கு விளக்கம் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'யார்க்கும் கொடுமைகள் கொடுமை தரும்', 'தீய செயல்கள் தீயவற்றையே தருவதால்', 'தனக்கு நல்லதென்று கருதிச் செய்யும் தீவினைகள் உண்மையில் துன்பத்தையே விளைத்தலால்', 'தீமையான செயல்கள் எப்பொழுதும் துன்பத்தையே கொடுத்தலால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடிய செயல்கள் தீமைகளையே தருவதால் என்பது இப்பகுதியின் பொருள்.

தீயினும் அஞ்சப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
பரிதி: பாவத்தை நெருப்பினும் பெரிது என்றறிக. அஃது எப்படி என்றால், நெருப்பு வேரைச் சுடமாட்டாது; பாவம் வேரளவாகச் சுட்டுப் போடும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.

'அத்தொழில்கள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயைக்காட்டிலும் அவற்றை நெருங்காதே', 'நன்மை, தீமை இரண்டனையும் விளைக்கும் நெருப்பினும் அஞ்சப்படும்', 'அவை தீயைப் பார்க்கிலும் அதிகமாக அஞ்சப்படத்தக்கன. (திவினைப் பயன் உடம்பு அழிந்தபின் உயிரினைத் தொடர்தலால், அவை தீயினும் அஞ்சப்படுமென்றார்.)', 'தீய செயல்கள் நெருப்பைவிடக் கொடியனவாக அஞ்சப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெருப்பைவிட கொடுமையானவை என்று அச்செயல்களைத் தீண்ட அஞ்சவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
கொடிய செயல்கள் தீமைகளையே தருவதால், தீயினும் அஞ்சப்படும் என்பது பாடலின் பொருள்.
'தீயினும் அஞ்சப்படும்' குறிப்பது என்ன?

தீமையான செயல்கள் செய்தவருக்குத் தீமையையே தரும்; எனவே அவற்றின் கிட்டவே நெருங்காதே;
ஒருவன் தனக்கு நன்மை அல்லது இன்பம் தருவதாக எண்ணி தீச் செயல்களை நிகழ்த்துகிறான். ஆனால் அவரை போட்டால் துவரை முளைக்குமா? வினை விதைத்தவன் வினை அறுப்பான் அதாவது விதைக்கப்படுவது எதுவோ அதுவே விளையும் என்ற முதுமொழிக்கேற்ப, இத்தீச் செயல்கள் பின்பு அச்செயல்களைச் செய்தவனுக்குத் துன்பமே தரும். கத்தியை எடுத்தவன் கத்தியாலே மடிவான் என்பதுபோல, தான் செய்த தீய செயல்கள் தனக்குக் கேடு பயக்கும்; ஆகையால் தீயவை என்றால் விலகித் தூர நிற்க வேண்டும்; கம்பரும் தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம் என்று உறுதிபடக் கூறினார்.
தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிப் பிறர்க்குச் செய்யும் தீய வினைகள் தனக்கே துன்பம் தருவனவாதலால் அவற்றைத் தீயினும் கொடியதாகக் கருதி தீமைகள் செய்ய அஞ்ச வேண்டும் என்பது பாடலின் கருத்து.

'தீயவே தீயபயத்தலால்' அதாவது 'தீமை மட்டுமே தரும்' என ஒரு பாடமுண்டு. நன்மையுந் தீமையுந் தரும் தீயினும் தீமையே தரும் தீயவை அஞ்சப்படும் எனும் கருத்தழுத்தம் இப் பாடத்தால் பெறப்படுகிறது. தீவினை நன்மையே செய்யாது என்பது உட்பொருள். ஒருவகையில் இக்குறள் ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (குறள் 131) என்னும் பாடல் நடையை ஒத்தது. அக்குறட்கு 'உயிர் தான் தங்கியுள்ள மாந்தர் தம் நிறைக்கேற்ப நன்மை தீமை இரண்டினையும் செய்யும். ஆனால், ஒழுக்கம் எங்கு தங்கினும் விழுப்பமே செய்யுமாதலின், ‘உயிரினும் ஓம்பப் படும்’ எனவும் விளக்கம் தரப்பட்டது. அங்கு ‘விழுப்பமே’ தரலான் எனப் பாடங் கொள்ளப்படவில்லை. ஆதலால் ‘தீயவே தீய பயத்தலான்’ என்னும் பாடம் இல்லாமலும் அவ்விளக்கங் கொள்ளலாம் என்பது அறியத்தகும் (இரா சாரங்கபாணி).

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (குறள் 12) என்ற குறளில் உள்ளது போல இப்பாடலிலும் 'தீய' என்ற சொல் திரும்பத் திரும்ப வருவதால், ஒருவகை ஒலிநயம் அமைகிறது. இத்தகைய ஒலிநயத்தைக் குறட்பாவை வாய்விட்டுப் படிப்பதன்மூலம் நாம் உணரலாம். கற்பவர் உள்ளத்தில் கருத்தை ஆழப்பதிய வைப்பதற்காக இதை ஒரு உத்தியாக வள்ளுவர் பயன்படுத்துவார். அதைச் 'சொற்பின் வருநிலை யணி' என்பர். (க த திருநாவுக்கரசு)

'தீயினும் அஞ்சப்படும்' குறிப்பது என்ன?

தீயைவிட தீமைச் செயல் செய்ய அஞ்சவேண்டும். தீயை நெருங்குவதற்கு, தொடுவதற்கு மாந்தர் அஞ்சுவர். அது என்னவென்று பார்ப்போம் என்று தீயை யாராவது தொடுவார்களா? தொட்டால் நெருப்பு உறுதியாகச் சுடும். அதுபோல தீய வழிகள் பக்கம் நெருங்க வேண்டவே வேண்டாம் என்கிறது பாடல். தீயவை என்றென்றும் செய்தவனுக்குத் தீமையை மட்டும்தான் விளைவிக்கும்.
நெருப்பின் தீங்கு அது இடப்பட்ட நேரத்திலும் இடப்பட்ட இடத்தையும் தாக்கும்; அது மற்றவரது உள்ளத்தினுள் சென்று பாதிப்பதில்லை; ஆனால் தீவினைகள் வேறொரு காலத்திலும் வேறோரிடத்திலும் வேறோரு உடம்பிலுஞ் சென்று சுடும்; எனவே தீயவை தீயினும் அஞ்சப்படும் எனப் பரிமேலழகர் 'தீயினும் அஞ்சப்படும்' என்ற தொடரை விளக்குவார்.
தீயினால் நன்மையும் உண்டு சமயங்களில் மிகத்தேவையும் கூட. தீயானது சமைத்தல், குளிர் காய்தல், நோய் நீக்கவல்ல (கொடுநோய்க்குத் தீ சுட்டக்கால் நன்மையும் உண்டு), கொடுவிலங்கு விரட்டல் போன்ற நன்மைகளையும் செய்யவல்லது. ஆனால் தீயசெயல்களால் நன்மை ஏதும் உண்டோ? தீமையினால் அதைச் செய்தவன் உடனடியாக பயன்பெறலாம். அது ஒருசிறுது காலம்தான் நீடிக்கும் ஆனால் அத்தீமையின் விளைவுகள் செய்தவனை விடாமல் துரத்தி அவனுக்குக் கேடுவிளைவித்தே தீரும் என்பது வள்ளுவரின் அறம் சார்ந்த நம்பிக்கை. நாமும் பல வேளைகளில் இக்கூற்று உண்மையென்பதை கண்கூடாக உணர்ந்திருப்போம். எனவே தீயசெயல்களால் தீதை மட்டுமே விளைவிக்க முடியும் என்பதால் தீயைவிட மிகையாக அஞ்சி அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்.

கொடிய செயல்கள் தீமைகளையே தருவதால், நெருப்பைவிட கொடுமையானவை என்று அச்செயல்களைத் தீண்ட அஞ்சவேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தீய செயல்களின் அருகே நெருங்கவே நெருங்காதே என அறுவுறுத்தும் தீவினையச்சம் பாடல்.

பொழிப்பு

தீய செயல்கள் தீயவற்றையே தருவதால் அவை நெருப்பினும் அஞ்சப்பட வேண்டும்.