இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0210



அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:210)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

மணக்குடவர் உரை: ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லையென்று தானே அறிக என்றவாறு.
இது கேடில்லை என்றது.

பரிமேலழகர் உரை: மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக.
(அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நெறிவிலகிக் கொடுமை இழையாதவன் என்றும் கேடில்லாதவன் எனத் தெளிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மருங்கோடித் தீவினை செய்யான் எனின் அருங்கேடன் என்பது அறிக.

பதவுரை: அருங்கேடன்-கேடில்லாதவன்; என்பது-என்று; அறிக-தெரிந்துகொள்க; மருங்குஓடி-(நடுநிலை தவறி) தீ நெறியிற் சென்று; தீவினை-கொடிய செயல்; செய்யான்-செய்யமாட்டான்; எனின்-என்றால்.


அருங்கேடன் என்பது அறிக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குக் கேடுவருவதில்லையென்று தானே அறிக;
மணக்குடவர் குறிப்புரை: இது கேடில்லை என்றது.
பரிதி: கேட்டுக்கும் பாவத்திற்கும் உள்ளல்ல இவன் என்று அறியப்படும்;
பரிமேலழகர்: அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக.
பரிமேலழகர் குறிப்புரை: அருமை: இன்மை. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க.

'கேடுவருவதில்லையென்று தானே அறிக' என்று மணக்குடவரும் 'கேட்டுக்கு உள்ளல்ல இவன்' என்று பரிதியும் 'அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனைக் கேடற்றவன் என்று அறியலாம்', 'அவனுக்குக் கேடு வராது என்பதை அறிந்து கொள்ளலாம்', 'அவன் யாதொரு கேடும் வரப் பெறாதவனாவன் என்றறிக', 'கேடென்பது அவனுக்கு இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடு வரப் பெறாதவனாவன் என்று தெளிக என்பது இப்பகுதியின் பொருள்.

மருங்கோடித் தீவினை செய்யான் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின். [ஒருமருங்கு - ஒருபக்கம்]
பரிதி: வாக்கினாலும் காயத்தினாலும், மனத்தினாலும் பாவத்தை அறியாதான் என்றவாறு. [காயத்தினாலும்-உடலாலும்]
பரிமேலழகர்: ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், [செந்நெறிக்கண்-செம்மையாகிய நன்னெறியில்; கொடுநெறிக்கண்-தீய கொடிய வழியில்]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.

'ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின்' என்று மணக்குடவரும் 'மனம், வாக்கு, மெய் இவற்றால் பாவம் அறியாதான்' என்று பரிதியும் 'கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அறநெறி பிறழ்ந்து பாவ வழியிற் சென்று பிறருக்குத் தீய செயல்களைச் செய்யான் என்றால்', 'ஒருவன் அவசரப்பட்டுப் பிறருக்குத் தீங்கு செய்கிறவன் அல்லவென்றால்', 'ஒருவன் நன்னெறியிலிருந்து வழுவிச் சென்று தீவினைகளைச் செய்யமாட்டான் என்றால்', 'ஒருவன் அறநெறி கடந்து தீய செயல்களைச் செய்யவில்லையானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நன்னெறியிலிருந்து விலகிச்சென்று தீமைகளைச் செய்யவில்லையானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்னெறியிலிருந்து விலகிச்சென்று தீமைகளைச் செய்யவில்லையானால் அருங்கேடன் என்று தெளிக என்பது பாடலின் பொருள்.
'அருங்கேடன்' என்ற சொல் குறிப்பது என்ன?

யாருக்கும் எந்தக் கொடுமையும் இழைக்காதவனுக்கு இன்ப வாழ்வு அமையும்.

நேர்வழியிலிருந்து விலகிக் கோணலான நெறியில் சென்று தீச்செயல்கள் புரியவில்லையானால் அவன் கேடில்லாதவன் எனத் தெளியலாம்.
அருங்கேடன் என்ற சொல் கேடுகளுக்கு அரிதானானவன் எனப்பொருள்படும். அவன் யார்? நேர்மை தப்பிப் பிறர்க்குக் கெடுதல் செய்யாத நல்லவன் கேடுறமாட்டான். இவனே கேடுகளுக்கு அரிதானானவன். தீச்செயல் ஒன்றும் செய்யவில்லை ஆகையால் அவனுக்குக் கேடு நேராது. தீய வழியில் செல்லாதவன் கேடில்லாத வாழ்வு நடத்துவான். அருங்கேடன் என்பது இனிய வாழ்வுடையவனைக் குறிக்கும். ‌
ஒருமருங்கு என்ற தொடர்க்கு ஒரு பக்கம் என்பது நேர்பொருள். மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் என்பதற்கு ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிப் (தீய நெறிகளின் பக்கம் சென்று) பிறர்க்குத் தீமை செய்யானாயின் என்பது பொருள். இதற்கு நடுநிற்காமல் ஒருபக்கம் சாய்ந்து-அதாவது நடுநிலைதவறி என்றும் பொருள் கூறுவர்.

இக்குறள்‌ தீச்செயலை அஞ்சிச்‌ செய்யாதொழிதலின்‌ நன்மை‌ கூறுவது. நெறி பிறழ்ந்து தீய பக்கம் சென்று பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்வானாயின், அவன் இன்பவாழ்வு பெறுபவனாக இருப்பான்; அவன் கேடுறமாட்டாதவன் என்பதை அறியலாம் என்கிறது.

'அருங்கேடன்' என்ற சொல் குறிப்பது என்ன?

'அருங்கேடன்' என்ற தொடர்க்குக் கேடுவருவதில்லை, கேட்டுக்கும் பாவத்திற்கும் உள்ளல்ல, அரிதாகிய கேட்டையுடையவன், கேடு இல்லாதவன், கேடற்றவன், கேடடைவது அரிது, கேடும் வரப் பெறாதவனாவன், கேடென்பது அவனுக்கு இல்லை என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

அருமை என்ற சொல் இல்லாமை என்ற பொருள் தந்தது. அருங்கேடன் - அருமை+கேடன். அருமை இங்கு இல்லை என்னும் பொருளை உடையது. அருங்கேடன் என்பதனைக் கேடரியன் என விகுதி பிரித்துக் கூட்டியும் காட்டினர். அருங்கேடன் -கேடு அரியன் (கேடுகளுக்கு அரியவன் - அவை இல்லாதவன்- அதாவது கேடில்லாதவன்) எனக் கொள்ள வேண்டும் என்பர். தேவநேயப் பாவாணர் 'அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு' என விளக்குவார்.
கேடு இல்லாதவன் என்றதனால் அவன் இன்ப வாழ்வுடையவனாவான். பிறர்க்கு கொடுமை செய்யாதவன் இனிய வாழ்க்கையை எய்துவான் என்பது செய்தி.

'அருங்கேடன்' என்றதற்குக் கேடு இல்லாதவன் என்பது பொருள்.

நன்னெறியிலிருந்து விலகிச்சென்று தீமைகளைச் செய்யவில்லையானால் கேடு வரப் பெறாதவனாவன் என்று தெளிக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தீவினையச்சம் கேடுறுவதிலிருந்து காக்கும்.

பொழிப்பு

நன்னெறியிலிருந்து விலகிச்சென்று தீய செயல்களைச் செய்யான் என்றால் அவன் கேடில்லாதவன் என்று அறிந்துகொள்க.