இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

(அதிகாரம்:ஈகை குறள் எண்:229)

பொழிப்பு (மு வரதராசன்): பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

மணக்குடவர் உரை: இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்.
தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

பரிமேலழகர் உரை: நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.
(பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: நிறைந்த உணவைத் தனித்து உண்பது இரப்பதினும் பார்வைக்கு அருவருப்பானது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிரப்பிய தாமே தமியர் உணல் இரத்தலின் இன்னாது மன்ற.

பதவுரை:
இரத்தலின்-ஏற்பதைவிட; இன்னாது-கொடியது; மன்ற-திண்ணமாக(உறுதிப் பொருள்); நிரப்பிய-நிரப்ப வேண்டி; தாமே-தாங்களாகவே; தமியர்-தனியராக; உணல்-உண்ணுதல்.


இரத்தலின் இன்னாது மன்ற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்;
பரிதி: தேகி என்பது பொல்லாது; [தேகி-கொடு]
காலிங்கர்: யாவராலும் பிறர்மாட்டுச் சென்று இரத்தல் சால இன்னாங்குடைத்து.. மற்றதனினும் இன்னாங்குடைத்து ஒன்று உண்டு; [இன்னாங்குடைத்து-துன்பம் உடைத்து]
பரிமேலழகர்: ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.

'இரத்தல்போல இன்னாதாம்' என்று உவமப் பொருளில் மணக்குடவரும் மற்றவர்கள் 'இரத்தலைவிட இன்னாது' என்று உறழ்பொருளிலும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரிடம் சென்று இரத்தலினும் பொல்லாதது', 'பிச்சை எடுக்கிற இகழ்ச்சியான நிலைமையிலும் இன்னும் இகழ்ச்சியான நிலைமையைத் தரக்கூடியது எதுவென்றால்', 'பிச்சை எடுப்பதைப் பார்க்கிலும் துன்பந் தருவதாகும்', 'பிறரிடம் இரத்தலைக் காட்டிலும் கொடியதாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரிடம் இரத்தலைக் காட்டிலும் உறுதியாகக் கொடுமைதான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிரப்பிய தாமே தமியர் உணல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்.
மணக்குடவர் குறிப்புரை: தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
பரிதி: அதிலும் பொல்லாது தான் பெற்ற செல்வத்தைத் தானே பொசித்தல். [பொசித்தல்- உண்டல்]
பரிதி குறிப்புரை: அது எப்படி என்றால் தேகி என்பவன் கொடுப்பார்க்குப் புண்ணியத்தைக் கொடுத்தான்; அவன் தனக்குப் பாவமே தேடினான்; ஆகையால் இவனுக்குச் சரியல்ல என்றவாறு.
காலிங்கர்: மற்றது யாதோ எனின் ஒருவர்க்கு ஈந்தால் அதனாலே நமக்கு ஊண் குறைவுபடும் என்று, தாம் வயிற்றை நிரப்புதற்காகத் தாமே தமியராய் இருந்து உண்டல் என்றவாறு.
பரிமேலழகர்: பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.

'உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். ஏன் அப்படி உண்பர் என்பதற்கு மணக்குடவர் 'ஒருவருங் காணாமல்' என்றும் காலிங்கர் 'தனது ஊண் குறைவுபடும் என்பதால்' என்றும் பரிமேலழகர் 'பொருட்குறை நிரப்ப வேண்டி' என்றும் விளக்கம் செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் தேடிய உணவைப் பிறர்க்குக் கொடுக்காமல் தனியாக உண்ணுதல்', 'நெடுந் தெருக்களில் வீடு வீடாகப் பிச்சையெடுத்து நிரம்பக் கிடைத்த உணவு முழுவதையும் தானே தனியாக உண்பது', 'தமது பொருட் குறைவை நிறைத்தற் பொருட்டுப் பிறர்க்குக் கொடாது தாமே தனித்தவராய் உணவு கொள்ளுதல்', 'ஈட்டிய பொருள்களைத் தாமே தமியராக உண்ணுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிறையத் தாமே தனியாக உண்ணுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிரப்பிய தாமே தனியாக உண்ணுதல் பிறரிடம் இரத்தலைக் காட்டிலும் உறுதியாகக் கொடுமைதான் என்பது பாடலின் பொருள்.
'நிரப்பிய' என்ற சொல்லின் பொருள் என்ன?

ஒருவரிடம் சென்று ஈ யென இரப்பது இழிவானது; அதைவிட இழிவானது நிறையக் குவித்துத் தானே தனியாக இருந்து உண்ணுதல்.
செல்வம் ஈட்டியவனே அதன் பயன்களை முழுதும் துய்க்க வேண்டும் என்ற நினைப்புடன், தன்னையும் தன் தேவைகளையும் மட்டுமே கருதுபவர்கள் பலர். பொதுநலன் பற்றிய சிந்தையே இல்லாத இவர்கள் துய்ப்பதிலேயே மன நிறைவு பெறுவராவர். இத்தகையோரைக் காணும்போது வள்ளுவர் கொதிப்படைகிறார். 'எந்தவொரு ஐயமும் வேண்டாம்-ஒருவருங் காணாதவாறு தன்னந்தனியே நிறைய இட்டு உண்ணுபர்கள் பிச்சைக்காரர்களைவிட இழிவானவர்கள்தாம்' என்கிறார் இங்கு.
'ஒருவர்க்கு ஈந்தால் அதனாலே நமக்கு ஊண் குறைவுபடும் என்பதற்காக' என்றும், 'தாம் வயிற்றை நிரப்புதற்காக' என்றும் 'பொருள் நிறைய சேர்க்க வேண்டும் என்பதற்காக' என்றும் தனித்தவராக இருந்து பிறருக்குக் கொடுக்காமல் உணவு கொள்வர் என்பதை விளக்கினர்.
தன்னைப் போல ஒரு மனிதன் பசியால் பசியால் வாடிக் கொண்டிருக்கும்போது தனியாக நிறைத்து வைத்து உண்ண விரும்புதல் மனித இனத்துக்கே ஒவ்வாத ஒரு இழிசெயல். அதனால்தான் இரப்பினும் அது இழிவு என்கிறார் வள்ளுவர். வ சுப மாணிக்கம் 'நிறைந்த உணவைத் தனித்து உண்பது இரப்பதினும் பார்வைக்கு அருவருப்பானது' என்று உரைப்பார்.
உண்டாலம்ம இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் 'இனிது' எனத் தமியர் உண்டலும் இலரே (புறநானூறு 182: 2-3 பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்; இந்திரர்க்குரிய அமிழ்தம் தமக்கு வந்துகூடுவதாயினும் அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர்) என்று சொன்னது சங்கப்பாடல். “தமியர் உண்டலும் இலரே” என்பதிலிருந்து, தனித்திருந்து உண்ணாததைச் சிறப்பாகச் சொல்லப்பட்டதை அறியலாம். அப்படி உண்ணுதல் பண்பாடற்ற செயலாம்.

'நிரப்பிய' என்ற சொல்லின் பொருள் என்ன?

'நிரப்பிய' என்ற சொல்லுக்குத் தேடின உணவை, பெற்ற செல்வத்தை, தன் வயிற்றை நிரப்புதற்கு, பொருட்குறை நிரப்பவேண்டி, பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்கு, பொருள் நிறைய உடையவர், சேர்த்து நிரப்பிய செல்வத்தை, நிறைந்த உணவை, தேடிய உணவை, நிரம்பக் கிடைத்த உணவு முழுவதையும், நிரம்பத் தேடிச் சேர்த்த பொருளை, பொருட் குறைவை நிறைத்தற் பொருட்டு, ஈட்டிய பொருள்களை, தமக்குள்ள பொருளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக, ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி, (இலையில்) நிரப்பியவற்றை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிரப்பிய என்பதற்குத் 'தேடின உணவு' என உரை கண்டார் மணக்குடவர். பரிமேலழகர். 'நிரப்பிய' என்பதனை 'நிரப்பு' என்னும் வறுமைப் பொருளாகக் கொண்டு 'பொருட்குறையை நிரப்பவேண்டி' என உரை தந்தார். பொருட்குறை நிரப்பல் என்றதற்கு பொருளின் குறையை நிறைத்தல் என்பது பொருள். அது 'ஒவ்வொரு தொகையைக் குறிப்பிட்டு, அவ்வளவு ஈட்டுவோம் என்று பொருள் தேடுதலையே மேற்கொண்டு சேர்த்தல்' என விளக்கம் தருவர். 'தன் வயிற்றை நிரப்புதற்காக' என்றார் காலிங்கர்.
ஒருபக்கம் பசியால் வாடுபவர்கள். இன்னொரு பக்கம் செல்வர் மறைந்திருந்து தனியே நிரப்பிய உணவு உட்கொள்ளுதல். இந்த உணவுக் காட்சியைக் காணும் வள்ளுவர் சினம் கொண்டு உணவுக் குவியல் இருந்தும் ஈயாமல் இருக்கிறாரே என 'நிரப்பிய' என்ற சொல் பெய்து பாடுகிறார்.

'நிரப்பிய' என்ற சொல்லுக்கு நிறைத்த என்பது பொருள்.

நிறையத் தாமே தனியாக உண்ணுதல் பிறரிடம் இரத்தலைக் காட்டிலும் உறுதியாகக் கொடுமைதான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஈகையைத் தவிர்ப்பதற்காக மறைந்துண்ணுதல் அருவருப்பானது.

பொழிப்பு

நிறைந்த உணவைத் தாமே தனித்து உண்ணுதல் பிறரிடம் இரப்பதினும் இழிவானது.