புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
(அதிகாரம்:புகழ்
குறள் எண்:237)
பொழிப்பு (மு வரதராசன்): தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக் காரணம் என்ன?
|
மணக்குடவர் உரை:
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
பரிமேலழகர் உரை:
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
(புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)
சி இலக்குவனார் உரை:
தமக்குப் புகழ் உண்டாக வாழமாட்டாதார் தம்மை நொந்து கொள்ளாதவராய்த் தம்மை இகழ்கின்றவர்களை நோவது எதற்கு?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
பதவுரை: புகழ்பட-புகழ் உண்டாக; வாழாதார்-வாழ மாட்டாதவர்; தம்-தம்மை; நோவார்-நொந்து கொள்ளாதவராய்; தம்மை-தங்களை; இகழ்வாரை-பழிப்பவரை; நோவது-வருந்துதல்; எவன்-என்னத்துக்கு?
|
புகழ்பட வாழாதார் தம்நோவார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது; [நோவாது-வருந்தாமல்]
பரிதி: புகழ்பெற வாழவேணும் என்று விரதங்களை நோற்காதவர்கள்; [நோற்காதவர்கள் (இவர் பாடம் 'நோலார்' என்றிருக்கலாம்)- தவம் செய்யாதார்]
காலிங்கர்: மற்று இவ்வுலகத்துத் தம்புகழை நிறுத்தி வாழுகை கல்லாதார் தம்மையே நொந்துகொள்ளுமல்லது; [வாழுகை - வாழ்தல்]
பரிமேலழகர்: தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; [அதுபற்றி - புகழுண்டாக வாழாமை பற்றி; நம்மாட்டாமையான் - புகழுண்டாக வாழ முடியாமையால்]
'புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'புகழில்லார் தம்மேல் வருத்தப்படாது', 'புகழ் தோன்ற வாழ முடியாதவர் அக்குற்றத்திற்காகத் தம்மை நொந்து கொள்ளாமல்', 'புகழ் அடையும்படி நடந்து கொள்ளாதவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்ள வேண்டுமேயன்றி', 'புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் அக்குறைக்காகத் தம்மை நொந்து கொள்ளாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி என்பது இப்பகுதியின் பொருள்.
தம்மை இகழ்வாரை நோவது எவன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
பரிதி: தம்மை இகழ்வாரை ஏன் தான் விதனப்படுவார்கள் என்றவாறு. [விதனப்படுவார்கள் - வருந்துவார்கள்]
காலிங்கர்: மற்றொருவர்க்கு ஈயாத பாவியர் என்று இங்ஙனம் தம்மை இகழந்து உரைப்பாரை நோகின்றது எது கருதியோ என்றவாறு.
பரிமேலழகர்: தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
பரிமேலழகர் குறிப்புரை: புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார். [அதுமாட்டாத-அவ்வாறு வாழமாட்டாத]
'தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது ஏன்?', 'அதுபற்றி இகழ்ந்து கூறுவாரை நொந்து கொள்வது எதற்காக?', 'தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது எதற்காக?', 'தம்மை இகழ்பவரை நொந்து கொள்வதால் பயன் என்ன?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
புகழ்பட வாழாதார் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது பாடலின் பொருள்.
'புகழ்பட வாழாதார்' குறிப்பது என்ன?
|
உன்னால் நற்பெயர் பெறமுடியவில்லை என்றால் அதற்கு நீ மட்டும்தான் காரணம் என்று உணர்ந்துகொள்.
புகழ் எய்தத் தவறியவர்கள், தம்மை இகழ்வார் மாட்டு வருத்தப்படுவது என்னத்துக்கு? தம்மைத்தான் நொந்துகொள்ள வேண்டும்.
புகழ் இல்லா மாந்தர் தாம் இகழப்படும்போது அதற்காக இகழ்வார் மீது ஏன் வருத்தம் கொள்ளவேண்டும் என வினவுகிறது இப்பாடல்.
மற்றவர்கள் புகழ்ந்து போற்றும்படியான நற்குணநற்செயல்களால் வாழமாட்டாதவர்கள் தம்வாழ்வை வீணாக்கிக் கொள்வதற்குத், தம்மை இகழ்வோர் மீது வருத்தம் கொள்ளாது, தாமேதாம் அதற்குக் காரணம் என்று அறியவேண்டும்.
புகழ் என்பது ஒருவருடைய வாழும் முறையால் பெறுவது. ஒருவர் புகழ் விளங்க வாழமாட்டாதவராக இருப்பதற்கு அவரிடம் அதற்கு உரிய நல்ல பண்பும் நல்ல செயலும் இல்லை என்பதுடன் அவர் புகழ்தேடி வாழ முயற்சி செய்யவில்லை அல்லது அவ்வாறு வாழத் தம் தகுதியினை வளர்த்துக்கொள்ளவில்லை என்பனவும் முதன்மைக் காரணங்களாகும். எனவே அவர் தம்மைத்தாம் நொந்துகொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். பெயர்பெற்று வாழாமைக்கு மற்றவர்கள் இகழ்கிறார்களே என்று இகழ்பவர்களை நொந்துகொள்வதால் என்ன கிடைக்கப் போகிறது? ஒன்றுமில்லை எனவும் அவர் கூறுகிறார்.
இப்பொழுதாவது அதை உணர்ந்து புகழுண்டாகும்படி வாழ முயற்சி செய் எனக் குறிப்பால் அறிவுறுத்தப்படுகிறது.
|
'புகழ்பட வாழாதார்' குறிப்பது என்ன?
'புகழ்பட வாழாதார்' என்ற தொடர்க்குப் புகழ்பட வாழ மாட்டாதார், தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார், புகழ்பெற வாழவேணும் என்று விரதங்களை நோற்காதவர்கள், இவ்வுலகத்துத் தம்புகழை நிறுத்தி வாழுகை கல்லாதார், (தமக்குப்) புகழ் உண்டாக வாழமாட்டாதார், தமக்குப் புகழுண்டாகுமாறு அதற்கேற்ற செயல்களைச் செய்து வாழமாட்டாதவர்கள், தமக்குப் புகழுண்டாக வாழாதவர், புகழில்லார், புகழ் தோன்ற வாழ முடியாதவர், தமக்கு ஒரு புகழ் வரும்படி வாழத் தெரியாதவர்கள், புகழுண்டாக வாழ முடியாதவர், புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள், தமக்குப் புகழ் உண்டாக வாழமாட்டாதார், தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழமுடியாதவர், புகழ் ஈட்ட வழியும் வக்கும் இல்லாதார், புகழடைய முடியாது வாழ்பவர், புகழ் இல்லாமல் வாழ்கிறவர்கள் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
எல்லாரும் புகழை விரும்புவர்; ஆயினும் பலர் புகழ்பட வாழ விரும்பாதவரே என்பது உலகியல். புகழ் என்பது ஒருவர் வாழும் முறையால் பெறப்படும் விழுமியத்தைக் குறிக்கும். அவரது முயற்சியும், அறிவும், ஆற்றலுமே புகழ்பெறுவதற்குத் துணை நிற்கும்; பிறரது இடையீடு இல்லை. எனவே ஒருவர்க்கு நல்லது நடந்தாலும் சரி அல்லது அவர் தீயனவற்றை எதிர்கொள்கிறார் என்றாலும் அவை எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பாவார். தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு 192) என்று கணியன் பூங்குன்றனார் அன்றே சொல்லிச் சென்றார். புகழ்பட வாழமாட்டாதவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு திருத்தங்களைக் கண்டு வாழ்தல் முறை.
புகழ் அடைவதற்கு எத்துணையோ வழிகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஆய்ந்து பற்றிக்கொள்ளாமல் இருந்தால் உலகம் அவரை எள்ளத்தான் செய்யும்.
முயற்சி மேற்கொண்டால் உறுதியாகப் புகழ் வாழ்வு எய்தலாம்.
தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள் தமது இழிவினை நோக்கித் தம்மையே நொந்து கொள்ளாமல் இகழ்பவர் மீது வருத்தம் கொண்டு வேதனையுறுவர்.
ஒருவர் புகழடைய முடியாமற்போனால், அதற்குரிய காரணம், தன்மீதான குறைபாடுகளே என அறிந்து அவற்றிற்காகத் தனக்குத் தானே வருத்தப்பட வேண்டும். எதற்கும் ஏற்றவராய் இல்லாமல் போய்விட்டாரே என்று இகழ்ந்து கூறுவார் மாட்டு 'என்ன இவர் இப்படிச் சொல்கிறாரே!' என்று வருத்தப்படக்கூடாது; 'நாம் இப்படி ஆகிவிட்டோமே' எனத் தன் மீது வருத்தம் காட்ட வேண்டும்.
புகழோடு வாழவேண்டும் என எண்ணினால் அதற்கு ஏற்பத் தன் குணநலன்களைப் பண்படுத்தி உழைக்க வேண்டும்; மாறாக, தன்னைப் பழிப்பவர்கள் மீது வருத்தம் காட்டுவது தன் செயலில் காட்டும் முனைப்பைக் குறைக்கவே செய்யும்.
'புகழ்பட வாழாதார்' என்பது தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார் எனப் பொருள்படும்.
|
புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? என்பது இக்குறட்கருத்து.
புகழ்பட வாழாதார் தம்மைத்தாமே நொந்துகொள்ள வேண்டும்.
புகழ் தோன்ற வாழ முடியாதவர் தம்மை நோவாது தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது எதனால்?
|