சுடச்சுடரும் பொன்போல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;
பரிப்பெருமாள்: நெருப்பின்கண்ணே இட்ட இடத்துத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;
பரிதி: சுடவைத்த பொன் களங்கமற்றது போல;
காலிங்கர்: தீப்பெற்று நின்று ஒளிவிட்டு விளங்கும் பொன்னைப்போல விளங்கா நிற்கும்;
பரிமேலழகர்: தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல,
பரிமேலழகர் குறிப்புரை: 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.
'நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்', 'சுடச்சுட புடம்போட்ட தங்கம் ஒளிமிகுதல் போல', 'தீயிலிட்டுக் காய்ச்சக் காய்ச்சக் களிம்பு நீங்கி ஒளி அதிகப்படுகிற தங்கத்தைப் போல', 'சுடச்சுடப் பொன் ஒளி மிகுவதுபோல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தீயில் சுடப் பொன் ஒளிமிகுதல் போல் என்பது இப்பகுதியின் பொருள்.
ஒளிவிடும் துன்பம் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
பரிப்பெருமாள்: துன்பம் நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
பரிதி: கன்மம் விடும் தவம் செய்கையினாலே விக்கினம் வந்தால் அந்த விக்கினத்தைப் பாராமல் தவம் பண்ணுவார்க்கு என்றவாறு.
காலிங்கர்: யாதோவெனில் வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்; யார்க்கு எனின் முன் தம் மாட்டு வந்து மயங்கிக் கிடக்கின்ற அவங்களானவற்றை உருவழியச் சுடுமாறு பலயாண்டும் பயிலக் குறிக்கொண்டு நோற்றலை வல்லாற்கு என்றவாறு.
பரிமேலழகர்: தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
பரிமேலழகர்: ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.
'துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு மருவின வினை விட்டு ஒளிவிடும்/வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்/கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துறவிக்குத் துன்பம் தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும்', 'தவம் செய்ய வல்லவர்க்குத் துன்பம் வருத்த வருத்த மெய்யறிவு (ஞானம்) வரும்', ' எவ்வளவு துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தவம் செய்கிறவர்களுக்குத் தவ வலிமை அதிகமாகும்', 'துன்பங்கள் வருத்தத் தவம் செய்கின்றவர்க்கு அறிவு விளக்கம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|