வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
(அதிகாரம்:கூடாஒழுக்கம்
குறள் எண்:271)
பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
|
மணக்குடவர் உரை:
கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.
பரிமேலழகர் உரை:
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
(காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)
வ சுப மாணிக்கம் உரை:
வஞ்சகனது மறைந்த நடத்தையைக் கண்டு ஐம்பூதங்களும் உடம்பினுள்ளே சிரிக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
பதவுரை: வஞ்ச-கள்ள, ஏமாற்றும்; மனத்தான்-உள்ளமுடையவன்; படிற்று-மறைவான, பொய்யான; ஒழுக்கம்-ஒழுக்கம்; பூதங்கள்-மண், நீர், எரி, கால், விசும்பு என்ற இயற்கைப் பெரும் படைப்புகள்; ஐந்தும்-ஐந்தும்; அகத்தே-மனத்துள்; நகும்-(எள்ளி) நகைக்கும்.
|
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும்;
பரிப்பெருமாள்: கள்ள மனத்தை யுடையவனது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும்;
பரிதி: தவநெறி செய்கையிலே. அவநெறி செய்வானை;
காலிங்கர்: இங்ஙனம் கூடா ஒழுக்கமாகத் தவநெறி ஒழுகுகின்ற வஞ்ச மனத்தானது பொய்யான ஆசாரத்தினைக் கண்டு;
காலிங்கர் குறிப்புரை: படிற்றொழுக்கம் என்பது பொய்யான ஆசாரம்.
பரிமேலழகர்: வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை;
'கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் (பிறரறியாராயினும்)' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சம் பொருந்திய மனமுடையானது பொய் ஒழுக்கத்தைக் கண்டு', 'துறவறத்தை மேற்கொண்டு கபடமாகக் கள்ள வாழ்க்கை நடத்துகிறவனைப் பற்றி', 'வஞ்சகம் பொருந்திய மனத்தை யுடையவனது மறைந்த தீய ஒழுக்கத்தை', 'வஞ்சனை பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.
பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.
மணக்குடவர் குறிப்புரை: பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.
பரிப்பெருமாள்: தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அதனுள்ளே நகாநிற்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறி. பொறிகளறியவே அவற்றின் குறிப்பினானே பிறராலறியப்படும். இது பிறரறியா தொழியினும் தானே யறிவிக்கு மென்றது.
பரிதி: ஐந்து பூதமும் நகைக்கும் என்றது;
பரிதி குறிப்புரை: அது எது எனில், இவன் அவநெறி செய்ய நாம் நரகத்திலே வீழ ஏதுவானோம் என்பதால் என்றவாறு.
காலிங்கர் ('அஞ்சும்'-பாடம்): யாவரும் அச்சம் கூறுவர்; மற்று அஃதன்றித் தம்முள்ளே இகழ்ந்து சிரிப்பதுஞ் செய்வார்கள் என்றவாறு.
பரிமேலழகர்: உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து. [நலியா நிற்கவும் - வருந்திக் கொண்டிருக்கவும்; அதனது இன்மை கூறி - காமத்தினது இல்லாமையைச் சொல்லி]
'உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்' என்ற பொருளில் காலிங்கர் தவிர்த்த பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். “ஐந்தும் என்பதனை அஞ்சும்” எனப்பாடங்கொண்டு, பூதங்கள் -- பூதகாரியமான உடலையுடையார் பலரும்’ ‘அஞ்சுவர்’ என்றும், ‘நகுவர்' என்றும் காலிங்கர் உரைகாண்பார். மேலும் குறள் 'கரந்து ஒழுகுபவன்' எனக் கூறியிருக்க பிறர் அக்கூடா ஒழுக்கினை அறிந்து கொண்டனர் என்பதாக உள்ளது அவர் உரை. 'நகும்' என்றதற்கு பரிதி கூறும் காரணம் பொருந்தி வரவில்லை.
இன்றைய ஆசிரியர்கள் 'அவனோடு கலந்து நிற்கும் ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும்', 'அவன் தேகத்திலுள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் சிரித்து ஏளனம் செய்யும்', 'அவன் உடம்பின் பகுதிகளாய ஐந்து பூதங்களுந் தமக்குள்ளே பார்த்துச் சிரிக்கும்', 'உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (பரிகசிக்கும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்பது பாடலின் பொருள்.
'பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' என்ற பகுதி குறிப்பதென்ன?
|
ஒருவனது பொய்யொழுக்கத்தை ஊர் அறியாவிடினும் அவன் நெஞ்சு உணர்ந்து உள்ளுக்குள் சிரிப்பாய்ச் சிரிக்கும்.
வஞ்சனை மனம் உடையவனது பொய்யொழுக்கத்தைக் கண்டு, ஐந்து பூதங்களும் தமக்குள்ளே நகைத்துக் கொண்டிருக்கும்.
தனக்கு உரிமையில்லாத பொருள்கள்வழிப் பெறக்கூடிய இன்பங்களைத் துய்க்க முறையற்ற வழிகளில் நடந்துகொள்வது கள்ள ஒழுக்கமாகும். இது இங்கு மறைவாகச் செல்வம் சேர்ப்பது, பெண்ணுறவு கொள்தல் ஆகியவற்றைக் குறிக்கும். அவற்றை அடைய, பொய்யான தவ வேடம் பூண்டு, உலகோரை ஏமாற்றி யாரும் அறியாதவண்ணம் இன்பம் துய்க்கிறான் இத்தீய ஒழுக்கம் உடையவன். தவம் மேற்கொண்டபின் கள்ள ஒழுக்கம் கொள்வானது குற்றங்களையும் அவற்றை மறைக்க அவன் செய்யும் வழிமுறைகளையும் கண்டு ஐந்து பூதங்களும் அவன் உள்ளத்தில் இருந்த படியே அவனை இகழ்ந்து நகும் என்கிறார் வள்ளுவர்.
புறத்தே தவமுடையோன் போலக் காட்டி, உள்ளத்துறவு கொள்ளாது, கள்ள ஒழுக்கமுடையவன் பற்றிய பாடல் இது.
பிறர் அறியாமல் தீங்கு செய்வதற்கு புறக்கோலத்தைப் பயன்படுத்துவது வஞ்சம் ஆகும். தாம் செய்வது மற்றவர்களுக்குத் தெரியாது என்று கருதி, நல்லவன் போல நடித்து, மற்றவரை ஏமாற்றி, கள்ள உள்ளத்தோடு மறைவான தீய ஒழுக்கங்களைப் பேணி வாழ்பவர்கள் வஞ்சமனத்தார் ஆவர். இவரது பொய்யொழுக்கம் புறத்தார்க்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் அறியாமல் உலகில் எதுவும் நடக்க இயலாது. இவனது குற்றங்களைக் காணும் அவ்வைந்தும் அகத்தே 'அட மூடனே! யாருக்கும் தெரியாதென்றா செய்கிறாய்' என்று அவனது பொய்யொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற வழிகளையும் அறிந்து, அவை தம்முள்ளே எள்ளலாய்ச் சிரிக்குமாம். தவக்கோலம் பூண்டு கள்ள வழி செல்வோரைப் பார்த்து இயற்கை சிரிக்கத்தான் செய்யும்.
ஐந்து பூதங்கள் என்பதற்கு ஒருவனது மனச்சான்று என்றும் பொருள் கொள்ளலாம். கூடாஒழுக்கதினரைப் பார்த்து அவனது மனச்சான்று நகைக்கும் என்பது கருத்தாகும்.
பூதங்கள் நகும் என்பது சுவைக்கத்தக்க நல்ல புனைவு!
துறவறம் மேற்கொண்ட அருளாளர்களை மக்கள் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுவர். எல்லாவற்றையும் துறந்த அறிஞர்கள் மிகுந்த மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். ஆதலால் ஒழுக்கமுறையாக வாழும் திறனற்றவர்கள் உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தவவேடத்தினை மேற்கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்றனர்; பெருஞ்செல்வத்தை முறையற்ற வழியில் சேர்க்கிறார்கள்; பின் அதைப் பாதுகாப்பதற்கு வன்முறைக்குக்கூட அவர்கள் அஞ்சுவதில்லை. தவ வேடத்தில் இருந்துகொண்டு பெண்ணின்பம் துய்க்கின்றனர். இவர்கள் வெறுக்கத்தக்கவர்கள். இத்தகையோரை எள்ளி நகையாடத்தக்கவர்களாக வள்ளுவர் இங்கு சுட்டிக் காட்டுகிறார்.
மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்று எண்ணித் தீயநெறியில் ஒழுகுதலைப் 'படிற்றொழுக்கம்' அதாவது வஞ்சனை மிக்க வாழ்க்கைமுறை என்கிறார் வள்ளுவர். 'படிற்று ஒழுக்கம்' என்பதில் உள்ள ‘படிறு’ என்பதற்கு வஞ்சனை, குற்றம், பொய் என்னும் பொருள்களுள் வஞ்சனை என்பது பொருந்தும். முன்பு இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (இனியவைகூறல் 91 பொருள்: இன்சொல்லானது அருளோடு கலந்து வஞ்சனை இல்லாதனவாய் அறம் உணர்ந்தாரது வாய்மை மொழி) என்ற பாடலிலும் இப்பொருளிலே அச்சொல் ஆளப்பட்டது.
|
'பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' என்ற பகுதி குறிப்பதென்ன?
பலரும் 'வஞ்சனை பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்' என்ற பொருளில் இக்குறளுக்கு உரை செய்தனர்.
உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆதாரமாக இருப்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் என்ற ஐந்துமாகும். இவற்றை ஐந்து பூதங்கள் என அழைக்கின்றனர்.
இந்த உலகம் அனைத்தும் இவ் ஐம்பூதங்களின் கலப்பால்-கூடுதல், குறைவு, கலத்தல், மாறியமைதல் என்ற பல்வேறு கலவைகளால் ஆனவையே என்பர்.
இந்த ஐந்தினாலும் ஆனதுதான் உயிர்களின் உடம்பின் அமைப்பும் ஆகும். ஐம்பூதங்களின் இயக்கமும் மனிதன் உடலில் உள்ளது. இவை அறியாத நிகழ்ச்சி இல்லை. வஞ்சக மனத்தான், அதனை வெளியுலகத்திற்கு மறைத்தாலும், அவனுள்ளிருக்கும் இவ் ஐம்பூதங்கள் அறிந்தே தீரும். உள்ளொன்றும் வெளியொன்றுமாகத் தன்மனத்தின் தீயவொழுக்கத்தைப் பிறர்க்குத் தெரியாமல் மறைத்தாலும் ஐம்பூதங்களும் அறிவதால் இவன் மறைப்பதைப் பார்த்து அவை சிரித்துக் கொண்டிருக்கும். இவனுடைய செய்கைகளை எல்லாம் அவன் அறியாமலே தாம் அறிந்துகொண்டு சிரிக்கின்றன என்பதைத்தான் 'அகத்தே நகும்' என்று குறிக்கின்றார் வள்ளுவர்.
பூதங்கள் பூதகாரிய உடலையும் உடல் இடவாகு பெயராய் உள்ளமாகிய நெஞ்சத்தையும் உணர்த்த இருமடியாகு பெயராய் நெஞ்சம் நகும் எனச் சொல்லப்பட்டது.
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் (வாய்மை 293 பொருள்: தன் மனம் அறிந்தே பொய் பேசாதே; பொய் கூறின் உன் மனச்சான்றே உன்னை ஒறுக்கும்) என்று பிரிதோரிடத்தில் 'தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்று குறள் கூறும். அந்த நடையில் இங்கு 'அகத்தே நகும்' எனச் சொல்லப்பட்டது. 'அங்ஙனமாயின் 'தன்னெஞ்சே தன்னைச்சுடும்' என்றாற்போல நேரே கூறாது 'பூதங்கள் நகும்” என்றது எற்றுக்கோ எனின் , பூதங்கள் உடலாயும், பூதங்களின் காரியமாகிய புலன்களாயும் இருந்து கண்டு கேட்டுண்டுயிர்த்து உற்றறியப் பெற்று உயிர்க்குப் படிற்றொழுக்கமாக இன்பம் அளித்தலின் இவையனைத்திற்கும் முதற்காரணம் பூதங்களே என்பார் அவை நகும் எனக் கவிச்சுவைபடக் கூறினார் என்பதாம்' என்று தண்டபாணி தேசிகர் விளக்கம் செய்வார்.
இயற்கையாகிய பூதங்கள் வஞ்சமனத்தான் பொய்யொழுக்கத்தைக் கண்டு அவன் இழிநிலையை இகழ்ந்து எள்ளுகின்றன; தவம் மேற்கொண்டோர் வஞ்சனை போக்கி நெஞ்சத்தூய்மை உள்ளவராக இருக்கவேண்டும் என்பது கருத்து.
|
வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் என்பது இக்குறட்கருத்து.
கூடாஒழுக்கம் உடையவனது செயல்களை ஐம்பூதங்களினின்று மறைக்க முடியாது.
வஞ்சகனது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும்.
|