யாம்மெய்யாக் கண்டவற்றுள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் மெய்யாக் கண்டவற்றுள்;
பரிப்பெருமாள்: யாம் மெய்யாக் கண்டவற்றுள்;
பரிதி: ஆத்மாவைச் செனனத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்திய வாக்கியம் அன்றி, வேறொன்றும் கண்டிலோம்;
பரிமேலழகர்: யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்;
பரிமேலழகர் குறிப்புரை: மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம்.
'யாம் மெய்யாக் கண்டவற்றுள்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்குப் பொருள் கூற பரிமேலழகர் 'யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என உரை நல்கினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள்', 'யாம் உண்மையாகக் கண்ட அறங்களுள்', 'நாம் அறிந்த உண்மைகளுக்குள்', 'நிலைபெற்ற பொருளாக ஆய்ந்து அறிந்தவற்றுள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நான் மெய்யாக அறிந்தவரையில் என்பது இப்பகுதியின் பொருள்.
இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
பரிப்பெருமாள்: மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
பரிதி: அசத்தியம் சொன்ன தருமபுத்திரன் நரகங் கண்டான். சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேசுவரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான் என்றவாறு.
பரிமேலழகர்: யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.
'மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் கூற 'யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை' என்றார் பரிமேலழகர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாய்மையினும் நல்லறம் வேறில்லை', 'வாய்மை கூறுவது போல நல்ல அறம் வேறு யாதொன்றும் இல்லை', 'பொய் சொல்லாமை என்பதைக் காட்டிலும் நல்ல துணை வேறொன்றும் இல்லை', 'யாதொரு வகையிலும், மெய்ம்மையைப் பார்க்கினுஞ் சிறந்த பொருள் வேறில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|