சிறப்புஈனும் செல்வம் பெறினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும்;
பரிப்பெருமாள்: மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும்;
பரிதி: எட்டுவகைப் போகந் தருகின்ற செல்வம் பெற்றாலும்;
காலிங்கர்: மறுமைக்கு முத்தியையும் இம்மைக்குச் செல்வத்தையும் பெறினும்;
காலிங்கர் குறிப்புரை: சிறப்பு என்பது முத்தி. செல்வம் என்பது திரு.
பரிமேலழகர்: யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை பெறாமைமேற்று.
'மிகுதியைத் தருகின்ற/ எட்டுவகைப் போகம் தருகின்ற/ மறுமைக்கு முத்தியை இம்மைக்கு/ யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய, செல்வங்களைப் பெற்றாலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சிறப்புச் செல்வம் கிடைப்பினும்', 'பிறர்க்குத் துன்பம் செய்து சிறப்பளிக்கும் செல்வத்தை ஒருவன் பெறலாமாயினும்', 'பெருமை தரவல்ல செல்வங்களைப் பிறர்க்குத் துன்பஞ் செய்து பெறலாமாயினும்', 'சிறப்புக்களைத் தரும் செல்வங்களைப் பெற்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சிறப்புக்களைத் தரும் செல்வங்கள் கிடைப்பதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
மணக்குடவர் குறிப்புரை: இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது; அதாவது தீத்தொழிலார் மாட்டுளதாகிய செல்வம் அவரை நலிந்து கொண்டால் உலகத்தார் பழியாராதலான்.
பரிதி: பிறர்க்கு விதனஞ் செய்யாமை இருப்பது நல்லோர் கொள்கை என்றவாறு.
காலிங்கர்: தன் நெஞ்சு அறியத் துயருறுவதைத் தாம் பிறர்க்குச் செய்யாது ஒத்தல், உட்குற்றமற்ற உணர்வுடைத் துறவோரது நெஞ்சின் கோட்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.
'பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு/துணிவு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்குத் துன்பம் செய்யாமையே தூயவர் கொள்கை', 'அத்துன்பத்தைப் பிறர்க்குச் செய்யாதிருத்தலே மனக்குற்றம் நீங்கிய நல்லோர் கோட்பாடு', 'அத்தகைய துன்பத்தைச் செய்யாமையே நல்லதென்பது குற்றமற்றவரது கொள்கை. சிறப்பீனும் செல்வம்-மிக்க செல்வம். செல்வச் செருக்கால் பிறர்க்குத் துன்பம் செய்யக் கூடாது. இன்னா-துன்பம்', 'பிறர்க்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாமலிருத்தல் குற்றமற்ற பெரியோர்களின் கொள்கையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர் கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.
|