ஒன்றாக நல்லது கொல்லாமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இணையின்றாக நல்லது கொல்லாமை;
பரிப்பெருமாள்: இணையின்றாக நல்லது கொல்லாமை;
பரிதி: தன்மநெறி எல்லாம் ஒன்றாகத் திரட்டியது அது; எஃது எனில், கொல்லாமை என்று அறிக.
காலிங்கர்: அனைத்தறங்களினும் தனக்கு இணையின்றித் தானேயாகச் சிறந்தது யாதோ எனில், கொல்லாமையாகிய அறம் ஒன்றுமே; .
பரிமேலழகர்: நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை;
பரிமேலழகர் குறிப்புரை: 'நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது.
'இணையின்றாக நல்லது கொல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அற நூலோர் தொகுத்துக் கூறும் அறங்களுள் தனித்த சிறப்புடையது கொல்லாமை', 'இணையற்ற நல்ல குணம் கொல்லா விரதம்', 'அறங்கள் எல்லாவற்றிலுந் தனி சிறப்புடையது கொல்லாமையாகும்', 'கொல்லாமை ஒப்பற்றதான நல்ல அறம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இணையற்ற நல்ல அறம் கொல்லாமை என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.
பரிப்பெருமாள்: அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று எனலாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனாற் சொல்லியது எல்லா அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றவாறாயிற்று.
பரிதி: அதினும் பெரியது பொய் சொல்லாமை என்றவாறு.
காலிங்கர்: அதனால் இனிக் கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவானொருவன் இனி இதன்பின் செய்ய வேண்டுவதும் ஒன்றுண்டு அஃதாவது எஞ்ஞான்றும் பொய்யாமையைத் தப்பாமல் குறிக்கொள்ளல்.
காலிங்கர் குறிப்புரை: அங்ஙனம் குறிக்கொண்டால் அது சாலத் தகைமை யுடைது என்றவாறு.
பரிமேலழகர்: அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
'அதன்பின்பே அணைய, பொய்யாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குத் துணையாக நிற்கும் பொய்யாமை நல்ல அறம்', 'அதற்கடுத்த நல்ல குணம் பொய் சொல்லா விரதம்', 'அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்', 'பின்னர் அதனை அடுத்து பொய்யாமையும் நல்ல அறமாகும். (கொல்லாமை, பொய்யாமை ஆகிய இரண்டு அறங்களுள் கொல்லாமைக்கு முதலிடமும் பொய்யாமைக்கு இரண்டாம் இடமும் கொடுக்கின்றார்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|