நல்லாறு எனப்படுவது யாதெனின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிப்பெருமாள்: நல் வழியென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிதி ('நல்லார்' என்பது பாடமாகலாம்): பெரியோர் இவர் என்றது;
காலிங்கர்: உலகத்துத் தவநெறிகள் பலவற்றினும் சிறந்த நன்னெறிகள் என்று நூல்களால் எடுத்துச் சொல்லப்படுவன யாவையோ எனின்;
பரிமேலழகர்: மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; [மேற்கதி- இந்திரன் முதலிய தேவர் பதவிகள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு.
'நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'நல்லாறு' என்பதற்குப் பரிதி 'நல்லார்' எனப் பாடங்கொண்டார். நல்லாறு என்றதற்கு உலகத்துத் தவநெறிகள் பலவற்றினும் என்று காலிங்கரும் மேற்கதி வீடு பேறுகள் என்று பரிமேலழகரும் பொருள் கூறுகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல நெறி எனப்படுவது யாதென்றால்', 'நன்னெறி என்பது எதுவென்றால்', 'வீடு எய்துதற்கு நல்ல வழியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதெனின்', 'உலகில் நல்ல வழி என்று சொல்லப்படுவது யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நல்ல வாழ்வுமுறை என்பது எதுவென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
மணக்குடவர் குறிப்புரை: இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
பரிப்பெருமாள்: அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நன்னெறியாவதும் கொல்லாமை யென்றது.
பரிதி: ஒரு உயிர் வதை செய்யாமலும், பொய் சொல்லாமலும், மாங்கிஷம் புசியாமலும், கோபம் தவிர்தலும், செபம் தவம் தான தன்மஞ் செய்தலும் ஆகிய குணங்கள் உடையாரே என்றவாறு.
காலிங்கர்: யாதொன்றினையும் கொல்லாமையைக் கருது நெறி ஒன்றுமே. என்றவாறு.
பரிமேலழகர்: அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
பரிமேலழகர் குறிப்புரை: காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.
'யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நல்லார்' எனப் பாடம் கொண்டிருக்கலாம்; ஆனால் 'எனப்படுவது என அடுத்து வரும் அஃறிணைச் சொல்லை நோக்கின் 'நல்லார்' என்னும் பாடம் பொருந்தவில்லை.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிரையும் கொலை செய்யாமை எண்ணும் நெறியாகும்', 'எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற கொள்கை சூழ்ந்த நெறிதான்', 'யாதோர் உயிரையுங் கொல்லாமையாகிய அறத்தினைப் போற்றும் நெறியாகும்', 'எதனையும் கொல்லாமலிருத்தற்குக் கருதும் வழியேயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எந்த உயிரும் கொலைப் படக்கூடாது என்ற கொள்கை எண்ணும் நெறியே என்பது இப்பகுதியின் பொருள்.
|