நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்;
பரிப்பெருமாள்: நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்;
பரிதி: ஓர் உயிரைக் கொன்றால், இதனாலே ஆக்கம் வரும் என்றாலும்;
காலிங்கர்: ஒன்றின் கொலையானது எக்காலமும் கேடின்றி இனிதாகும் ஆக்கத்தைப் பெரிதும் பயக்கும் என்று அறநூல் சொல்லினும்;
பரிமேலழகர்: தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்;
'நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது', 'வேள்விக்கொலை முதலியவற்றால் நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று பிறர் கூறினாலும்', 'நன்மை உண்டாகுமென்றாலும் செல்வம் அதிகரிக்கும் என்றாலும்', 'இன்ப மிகுதற்கு ஏதுவாகிய செல்வமானது வேள்வி முதலியவற்றிற் செய்யுங் கொலையினால் பெரிதாகக் கிடைக்குமாயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று கூறப்பட்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
மணக்குடவர் குறிப்புரை: இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அஃதியாதெனின், வேள்வியால் வரும் கொலை. அதனை உயர்ந்தோர்க்கு ஆகாதென்றார், ஏனையோர்க்காமென்றற்கு என்னை அதனாற் பயன் சுவர்க்கமன்றே அச்சுவர்க்கத்தினை விரும்பாது வீடுபேற்றினை விரும்புவராதலான்.
பரிதி: அப்படிப் பெற்ற செல்வமும் சடுதியிலே கெடும் என்றவாறு.
காலிங்கர்: துறவோர்க்கு ஒன்றினைக் கொன்றாகுவதோர் ஆக்கம் சாலக்கடை என்றவாறு.
பரிமேலழகர்: துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை.
பரிமேலழகர்: இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.
'ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். சான்றோர் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் உயர்ந்தோர் என்றும் காலிங்கரும் பரிமேலழகரும் துறவோர் எனப் பொருள் கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தனிக்கொலை விளைவு இழிந்தது', 'சால்புடையார்க்குக் கொலையால் வரும் செல்வம் இழிந்ததாம்', 'உயர்ந்த குணமுடையவர்கள் கொலை செய்து அதனால் வரக்கூடிய நன்மைகளை மிகவும் கேவலமாகத்தான் கருதுவார்கள்', 'அத்தகைய செல்வம் கொலை காரணமாக வருதலால் நிறை தவமுடையோர்க்கு அது கடைப்பட்டதாகவே காணப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கொலையால் வரும் நன்மைகளைச் சான்றோர் இழிந்ததாகக் கருதுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|