இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0331



நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:331)

பொழிப்பு (மு வரதராசன்): நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

மணக்குடவர் உரை: நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது.
எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை: நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு.
(தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச் செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)

இரா சாரங்கபாணி உரை: உலகில் நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவாக மயங்கி அறியும் தாழ்ந்த அறிவு இழிவுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.

பதவுரை: நில்லாதவற்றை-நிலை பெறாதவைகளை, நிலையில்லாமல் ஓரிடத்தில் தங்காதவற்றை; நிலையின-நிலைத்த தன்மையுடையவை; என்று-என்பதாக; உணரும்-கருதும்; புல்அறிவுஆண்மை--கீழ்மையாகிய உணர்வுத் திட்பம், சிற்றறிவுடமை; கடை-கீழ்.


நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை;
பரிப்பெருமாள்: நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை;
பரிதி: நில்லாத யாக்கையை நிற்கும் என்று கருதுவது புல்லறிவு;
காலிங்கர்: இவ்வுலகத்தின்கண் உண்மை நோக்கில் யாவையும் நிலையாயிருக்க அங்ஙனம் நில்லாதனவற்றை நிலையுடையன என்று கருதும் அறியாமையின் இயல்பு உணர்வோர்க்கு;
பரிமேலழகர்: நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்;

'நில்லாதனவற்றை நிலையுடையன என்று கருதும் புல்லிய அறிவுடைமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலையாத பொருள்களை நிலைக்கும் என்று கருதும் அறிவு', 'நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளவை போல நினைக்கிற அற்ப புத்தி', 'நிலையில்லாத பொருள்களை எப்போதும் நிற்பன என்று கருதுகின்ற இழிந்த அறிவினையுடைமை', 'நிலைத்திருக்கும் தன்மையில்லாத பொருள்களை, நிலை பெற்றிருக்கும் என்று அறியும் புல்லிய அறிவினை உடையராதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு என்பது இப்பகுதியின் பொருள்.

கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இழிந்தது.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.
பரிப்பெருமாள்: இழிந்தது.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.
பரிதி: என்று சொல்லப்படும்.
காலிங்கர்: எஞ்ஞான்றும் சாலக்கடை என்றவாறு.
பரிமேலழகர்: துறந்தார்க்கு இழிபு.
பரிமேலழகர் குறிப்புரை: தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.

'இழிந்தது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் துறந்தார்க்கு இழிபு எனச் சொல்லி இக்குறளைத் துறவிகளுக்குரியதாக்குகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகவும் கடையானது', 'இகழத்தக்கது', 'கடைப்பட்ட தன்மையாகும்', 'இழிவாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கீழானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் புல்லறிவாண்மை கீழானது என்பது பாடலின் பொருள்.
'புல்லறிவாண்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

உடம்பு, செல்வம் போன்றவற்றை அழியாதவை என எண்ணித் தருக்கித் திரிதல் கீழானோர் செயல்.

நிலைக்கும் தன்மையில்லாதவைகளை நிலையானவை என்று கருதும் சிற்றறிவினை உடையராயிருத்தல் இழிவான நிலைமையாகும்.
நிலையற்றவைகளான உடைமைகள், வாழ்நாள் இவற்றை என்றும் அழியாதவை என்று கருதி செருக்குடன் வாழ்வோரை இகழ்ந்துரைக்கிறது இப்பாடல்; அத்தகைய குணத்தைப் புன்மையான அறிவோடிருத்தல் எனக் கடுமையாகச் சாடுகிறது இது. இவ்வுலகில் நிலைத்தது எது என்று ஆராய்ந்தால் நிலையாமைதான் நிலைத்தது எனத் தெரியவரும். அதாவது மாற்றம்தான் மாற்றமில்லாதது. உலகப் பொருள்கள் நிலையில்லாதவையல்ல.
உயிர் உலகத்தோடுள்ள தொடர்பே நிலையற்றது. உடம்பு, பெருஞ்செல்வம் முதலியவற்றோடு உயிர்களுக்குள்ள உறவு தொடர்ந்து மாறுதலுக்கு ஆளாகிறது. சிலபொழுது அழிந்தும் மாறுபடும். நிலையாமை உணர்தல் என்பது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதைக் குறிப்பதன்று; வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்க்கையை நடத்திச் செல்வதைச் சொல்வது.
நிலையில்லாத பொருள்களை நிலையென்று நினைத்து வாழ்வது சிற்றறிவு கொண்டோராய் வாழும் புன்மையாம். வாழ்வும், வளமும் நிலையாதனவாயிருந்தும், அவற்றை நிலையானவை என்று உலகியல் தரும் நிலைக்காத சிறுமைப்பட்ட இன்பங்களில் திளைத்து இருப்பவர்களைப்பார்த்து, அவர்களுடைய சிற்றறிவு நோக்கு இழிவானது என்று வள்ளுவர் இகழ்கிறார். நிலையாத வாழ்வில் நிலைத்த செயலைச் செய்யவேண்டும் என்பது குறிப்புப் பொருள்.

'புல்லறிவாண்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'புல்லறிவு' என்றதற்குப் புல்லிய அறிவுடைமை, புல்லறிவு, அறியாமை, புல்லிய அறிவு, கீழ்ப்பட்ட அறிவு, தாழ்ந்த அறிவு, அற்ப புத்தி, சிற்றறிவு, இழிந்த அறிவு, பேதைமை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புல்லறிவாண்மை என்பதை நல்லறிவாகாதவற்றை ஆளுதலையுடையராயிருத்தல் என விளக்குவர். இதைச் சிற்றறிவின் செறிவைக் குறிப்பதாகக் கொள்ளலாம். நிலைபெற்றன எவை நிலையற்றன எவை என்பதை ஆள அறியாதவர் புல்லறிவாளர் ஆவர்.
புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச் செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின் அவற்றது நிலையாமையை விதந்து கூறப்பட்டது என்பார் பரிமேலழகர். 'நாள்தொறும் மாந்தர் எல்லாப் பருவத்திலும் இறக்கக்கண்டும், குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர் ஒருவரும் உலகத்தில் இல்லாமையறிந்தும், இளைஞர் முதியராகவும் செல்வர் வறியவராகவும் மாறுவதைப் பார்த்தும், யாக்கையும் இளமையும் செல்வமும் தமக்கு நிலைக்குமென்று கருதுவது பேதைமை யாதலால் "புல்லறிவாண்மை" எனப்பட்டது' என்பது தேவநேயப்பாவாணர் தரும் விளக்கம்,

'புல்லறிவாண்மை' என்ற சொல்லுக்கு தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மை என்பது பொருள்.

நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு கீழானது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நிலையாமையை உணராதவனது அறிவு சிறுமைப்பட்டது.

பொழிப்பு

நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவாக மயங்கி அறியும் சிற்றறிவு கீழானது.