மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?
பரிப்பெருமாள்: மற்றுஞ் சில தொடர்ப்பாடுகளை உளதாக்குவது யாதனைக்கருதியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறிதாயினும் தொடர்ப்பாடுளதாயின் அதனைத் துறவென்று கொள்ளப்படாதென்றது; அது நோன்பிற்கியல்பின்மையால்.
பரிதி: மூன்று வகை ஆசையும் விட்டு என்ன பயன்;
காலிங்கர்: மற்று இப்பிறவி யென்னும் துயரினை மறுத்தலை முயன்றுள்ளோர்க்குக் கீழ்ச் சொன்னவை அனைத்தினும் உள்ளதொடர்ச்சியை இனி அது அன்றி வேறும் ஒரு தொடர்ச்சிப்பாடு யாது கொல்லோ;
பரிமேலழகர்: ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? [அதற்கு - பிறப்பறுத்தற்கு]
'மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிற தொடர்பு பற்றி என்ன சொல்வது?', 'எனவே அதற்கு மேல் உடம்பு கொண்டு துய்க்கும் ஏனைப் பொருள்களுடன் தொடர்பு கொள்வது எதற்காக?', 'அங்ஙனமாயின், உடம்பு கொண்டு துய்க்கும் ஏனைப் பொருள்களின் தொடர்பு எதற்கு வேண்டும்?', 'அங்ஙனமாகவும் வேறு பொருளோடு தொடர்பு கொள்ளுதல் எதற்கு?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிற தொடர்புகள் எதற்காக? என்பது இப்பகுதியின் பொருள்.
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க.
பரிப்பெருமாள்: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்கும்.
பரிதி: தேகம் அன்றோ தபசுக்கு அநேகம் பகையாவது என்றவாறு.
காலிங்கர்: எனவே இதுவன்றி மற்று யாதும் இல்லை; அஃது யாதோ எனின் தமது உடம்பும் சீவர்க்கு மிகை என்றவாறு.
பரிமேலழகர்: பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், [கருவியாகிய உடம்பு - நாம் பிறந்ததே வீட்டின்பத்தைப் பெறுதற்கே. ஆதலின், உடம்பு பிறப்பிற்கு ஏதுவாகிய மாயையை நீக்கும் கருவி எனப்பட்டது]
பரிமேலழகர் குறிப்புரை: 'உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது. [உரு உடம்பு -பருவுடல்; அரு உடம்பு -நுண்ணுடல்; முன்னர்க் கூறுப- இவ்வதிகாரத்தின் பத்தாம் குறள். அக்குறளின் சிறப்புரையில் அப்பற்று விடுதற்கு உபாயம் இதனாற் கூறப்பட்டது என்று கூறியிருப்பது அறியத்தக்கது; கட்டு - பாசபந்தம்; இறைப் பொழுது - கணப் பொழுது]
'பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு உடம்பும்மிகை ஆம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறப்பற முயல்வார்க்கு உடலும் கூடாதெனின்', 'பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் மிகையாகும்', 'பிறப்பறுத்தலை மேற்கொண்டவர்க்கு உடம்பே வேண்டாத பொருளாகும்', 'பிறவியை நீக்குவதற்கு உறுதி பூண்டவர்க்கு உடம்பும் வேண்டப்படாத ஒன்றாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் வேண்டப்படாத ஒன்றாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|