இருள்நீங்கி இன்பம் பயக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்;
பரிப்பெருமாள்: அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்;
பரிதி: அஞ்ஞானமாகிய இருள் நீங்கிப் பேரின்பம் பெருக்கும்;
காலிங்கர்: தமது அறியாமையானது நீங்கி மற்று அளவிறந்த இன்பமானது பயக்கும்;
காலிங்கர் குறிப்புரை: இருள் நீங்கி என்பது தாம் அறியாமை நீங்கி என்றது;
பரிமேலழகர்: அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும்.
'அறியாமையானது நீங்கி மற்று இன்பமானது பயக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இருள் என்பதற்குப் பரிமேலழகர் பிறப்பு என்கிறார். இன்பம் என்ற சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் முத்தியாகிய இன்பம் எனக் கொண்டார். பரிதி பேரின்பம் என்றார். காலிங்கர் அளவிறந்த இன்பம் என்கிறார். பரிமேலழகர் வீடு என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பேதைமை இராது; பேரின்பம் உண்டாம்', 'அம்மெய்யுணர்வு அறியாமைத் துன்பம் நீக்கிப் பேரின்பம் கொடுக்கும்', 'அஞ்ஞானம் நீங்கி, பிறப்பில்லாத பேரின்பம் கைகூடும்', 'அம் மெய்யுணர்ச்சி துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.
பரிப்பெருமாள்: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு (முத்தி) யின்ப முண்டா மென்றது.
பரிதி: மாசற்ற தரிசனம் கண்டவர்க்கு என்றவாறு.
காலிங்கர்: யார்க்கு எனின், மெய்ப்பொருளை வேறொன்றாகவும் வேறொன்றினை மெய்ப்பொருளாகவும் இங்ஙனம் மயங்கி நின்ற மயக்கம் நீங்கித் தெளிந்த உள்ளத்துக் குற்றமற்ற நல்லறிவுடையோர்க்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மருள் நீங்கி என்பது மயக்கம் நீங்கி என்றது; மாசறு காட்சி என்பது; மாசு என்பது குற்றம்; காட்சி என்பது அறிவு.
பரிமேலழகர்: அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன. [கேவல உணர்வு-இறையுணர்வாகிய மெய்யுணர்வு; நிரதிசய இன்பம்- பேரின்பம்]
'மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்கு', 'திரிபாக உணரும் மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வு உடையார்க்கு', 'மயங்கித் திரிபாக எண்ணிவிடாமல் குற்றமற்ற நோக்கத்தோடு மெய்ப் பொருளை அறிகின்றவர்களுக்கு', 'மயக்கத்தினின்றும் விலகிக் குற்றமற்ற மெய்யுணர்வு உடையவர்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மயக்கத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற அறிவினையுடயவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
|