| 
 
 
 
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.தான்வேண்டும் ஆற்றான் வரும்
 (அதிகாரம்:அவாவறுத்தல் 
குறள் எண்:367)
 
 
 
 
 | 
 
| 
மணக்குடவர் உரை: 
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.  பரிமேலழகர் உரை: 
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)
 இரா சாரங்கபாணி உரை: 
ஒருவன் ஆசையினை அறவே நீக்க வல்லவனாயின் கெடாமல் வாழ்தற்குரிய நற்செயல்கள் தாம் விரும்பும் நெறியாகவே வரும்.  
 | 
| பொருள்கோள் வரிஅமைப்பு:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்.
 பதவுரை: அவாவினை-விருப்பத்தினை; ஆற்ற-முழுதும், முழுமையாக, மிகவும்; அறுப்பின்-நீக்கினால்; தவா-கெடாமைக்கு ஏதுவாகிய; வினை-செயல்; தான்-தான்; வேண்டும்-விரும்பும்; ஆற்றான்-நெறியால்; வரும்-உண்டாம். 
 | 
| 
 அவாவினை ஆற்ற அறுப்பின்:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: ஆசையை மிகவும் போக்குவானாயின்;
 பரிப்பெருமாள்: ஆசையை மிகவும் போக்குவானாயின்;
 பரிதி: ஆத்மாவுக்கு வினையான ஆசையை விடுப்பானாகில்;
 காலிங்கர்: அவாவினை ஒன்றின்கண் வளராது; ஒன்றின் கண் தவிர (ரா; மற்றவையும் இங்குச்) செய்தவினை இறுதிக்கண் கெடும் என்பது கருதி;  .
 காலிங்கர் குறிப்புரை: ஆற்ற என்பது மிகவும் என்றது.
 பரிமேலழகர்: ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின்;
 'ஆசையை மிகவும் போக்குவானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'ஆசையை முழுதும் அறுத்து விட்டால்', 'ஆசைகளின் தொடர்பை முற்றிலும் அறுத்தொழித்துவிட்டால்', 'ஒருவன் ஆசையினை முற்றிலும் தொலைக்க வல்லன் ஆயின்', 'பெரு விருப்பினை அஞ்சி முழுதும் நீங்கிவிடுவானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். ஆசையை முற்றிலும் நீங்கிவிடுவானாயின் என்பது இப்பகுதியின் பொருள். தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
 பரிப்பெருமாள்: கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
 பரிப்பெருமாள் குறிப்புரை: கேடில்லாத வினையாவது அறத்தொழில்; அவ்வறம் ஆசையில்லாதார்க்கு முயலாம லெய்தும் என்றது.
 பரிதி: தவமான காரியந் தான் நினைத்தபடியே வரும் என்றவாறு.
 காலிங்கர்: மற்றதனால் கேடில்லாத தேர்ச்சியாகிய தெளிவுணர்வானது பின்பு ஒரு வருத்தம் இன்றித்தான் நினைந்தாங்கு வந்தெய்தும் என்றவாறு.
 காலிங்கர் குறிப்புரை: தவா வினை என்பது கெடாத விசாரம் என்றது.
 பரிமேலழகர்: அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.
 பரிமேலழகர் குறிப்புரை: கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
 'கேடில்லாத வினை தான்வேண்டின நெறியாலே வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'நல்வினை நாம் விரும்பியபடி வரும்', 'கேடற்ற நிலைமை என்னும் பிறவாமை தானாகவே வரவேண்டிய முறையில் வந்து சேரும்', 'அவன் கெடாமைக் கேதுவாய நன்முயற்சி அவன் விரும்பிய வழியிலே தானே ஏற்படும்', 'கெடாமைக்குக் காரணமாகிய வினை தான் விரும்பும் வழியால் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். கெடாதற்குரிய செயல்கள் தாம் விரும்பும் வழியால் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள். | 
| நிறையுரை: ஆசையை முற்றிலும் நீங்கிவிடுவானாயின் கெடாதற்குரிய செயல்கள் தாம் விரும்பும் வழியால் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
 'தவாவினை' என்பது என்ன?
 | 
| ஆசையை அறவே ஒழித்தவன் அறமற்ற செயல்களைச் செய்ய மாட்டாதவன்.   ஒருவன் ஆசைகளை முற்றிலும் நீக்கினால் அவன் கேடுறாவண்ணம் செயல்கள் அவன் விரும்புகின்றபடியே உண்டாகும். அவாவை வேருடன் களைதல் நற்செயல் வாய்க்கத் துணை செய்யும் என்கிறது பாடல்.
பேராசை குணத்தை முழுவதுமாக ஒழித்தாலே ஒருவனுக்கு கெடாமல் வாழும் வாழ்க்கை அதாவது கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள் அமையும் வாழ்வு தான் விரும்பும் வண்ணமே உண்டாகும். ஆசையின்மையினால்தான் நல்வினை வந்தது என்று கொள்ளப்படும்.
 'வேண்டும் ஆற்றான்' என்றதற்கு விரும்பும் நெறி எனப் பொருள் கூறி 'மெய்வருந்தா நெறி (உடல் நோகாத வழி)' என விளக்கம் செய்தார் பரிமேலழகர்.  'துன்பமில்லாதவகை' எனத் தேவநேயப்பாவாணர் பொருள் தருவார்.  விரும்பும் நெறி என்பதற்கு விரும்பத்தக்கதாக அமையும் வழி எனப் பொருள் கொள்ளலாம்.
 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறு அறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்று பரிமேலழகர் இக்குறட்கருத்தாகக் கூறுகிறார்.
 | 
| 'தவாவினை' என்பது என்ன?  'தவாவினை' என்றதற்குக் கேடில்லாத வினை, தவமான காரியம், கேடில்லாத தேர்ச்சியாகிய தெளிவுணர்வு, கெடாமைக்கு ஏதுவாகிய வினை,  கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல், கெடாத நல்வினைகள், கெடாமல் நின்று வாழ்தலுக்குரிய செயல்கள், நல்வினை, கெடாமல் வாழ்தற்குரிய நற்செயல்கள், துன்பமற்ற நிலையான பிறவாமை, அழியாமைக்குரிய செயல், கெடாமைக் கேதுவாய நன்முயற்சி, கெடாமைக்குக் காரணமாகிய வினை, நல்வினைகள், கெடாத நற்செயல்(அறம்), பிறவித் துன்பத்தில் தள்ளாத நற்செயல்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.   'தவவினை' எனப் பாடங் கொண்டு பரிதி கண்ட உரை சிறக்கவில்லை, 'துன்பமற்ற நிலையான பிறவாமை' என நாமக்கல் இராமலிங்கம் உரைக்கிறார். இன்னும் சிலர் மோட்சம் எனப் பொருள் கூறினர். 'கெடாமைக்கு ஏதுவாகிய வினை' எனப் பொருள் கூறி கெடாமை என்பது பிறவித் துன்பங்களான் அழியாமை என விளக்கினார் பரிமேலழகர். 
‘தவாவினை’ என்பதற்குக் கெடாமல் வாழ்வதற்குரிய நல்ல செயல் என்ற மு வரதராசன் உரை இயல்பானது.   'தவாவினை'  என்பது கேடில்லாத செயல் எனப்பொருள்படும்  | 
| ஆசையை முற்றிலும் நீங்கிவிடுவானாயின் கெடாதற்குரிய நற்செயல்கள் தாம் விரும்பும் வழியால் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து. 
 
 
    அவாவறுத்தல் நற்பேறுகளை உண்டாக்கும்.  
  ஆசையை முழுதும் நீக்க வல்லவனாயின் கெடாதற்குரிய நற்செயல்கள் தாம் விரும்பியபடி வரும்.   
 
 
 
 |