இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்::
மணக்குடவர்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;
பரிப்பெருமாள்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: தலையளியாவது வரிசை கொடுத்தல்.
பரிதி: இன்சொல்லாலே குடியைக் காப்பானாகில்;
காலிங்கர்: தன்மாட்டு மரபின் வந்து எய்தும் மக்கள் யாவர்க்கும் கீழ்ச்சொன்ன முறைமையானே இன்சொல்லால் சில வழங்குதலேயுமன்றி மற்றுத் தன் நெஞ்சினாலும் தண்ணளி செய்யவல்ல அரசர்க்கு;
பரிமேலழகர்: இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்.
அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல்.
பழம் ஆசிரியர்கள் இனிய சொல்லுடன் ஈதல் செய்து தண்ணளி புரியு வல்ல அரசர்க்கு என்று பொருள் வருமாறு உரை தருகின்றனர்.
அளித்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் மக்கட்கு அரசனது பரிவாரங்களாலும் அதாவது சுற்றங்களாலும் சூழ்ந்துள்ளோராலும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்பதாக விளக்கம் தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இனிது சொல்லி அளிசெய்யும் அரசன்', 'இனிய வார்த்தைகள் பேசி (குறை சொல்லிக் கொண்டவர்களுக்கு) உதவி கொடுத்து (முறை சொல்லிக் கொண்டவர்களுக்குப்) பாதுகாப்பளிக்க வல்லவனாகிய அரசன்', 'இனிய சொல்லுடன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசனுக்கு', 'இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.
தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.
பரிப்பெருமாள்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவ்வரிசை பெற்றவர் அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது.
பரிதி: தன் சொல்லினாலே தானே உலகத்தைப் படைத்துத் தானே உலகத்தைக் காத்ததற்கு ஒக்கும்.
காலிங்கர்: இங்ஙனம் சொல்லுகின்ற (தனது சொல்நலத்)தினாலே தான் (படைத்த அத்தன்மைத்து இவ்வுலகு என்னவே மற்று) இவ்வுலகில் வாழ்வார் யாவரும் தன்வசத்து ஒழுகுவர்.
பரிமேலழகர்: இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்
மணக்குடவரும் காலிங்கரும் 'தன் ஆணைப்படி அமைந்து தன் வசம் உலகம் இருக்கும்' என்கின்றனர். பரிப்பெருமாள் உரையான 'அவ்வரிசை பெற்றவர் (அதாவது அமாத்தியர்) அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது' என்பது மிகக்குறுகிய பரப்பைத் தழுவி உள்ளது. பரிதி 'இவ்வுலகமே தன் வாய்ச்சொல்லால் படைக்கப்பட்டு அதைத் தானே காப்பது போல் உணர்வான்' என்கிறார். 'நினைத்தது நிறைவேறும்' என்ற பொருள் தரும்படி பரிமேலழகர் 'தான் கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்சொற்படி உலகத்தைக் காண்பான்', 'சொல்லுகிறபடி அவன் விரும்பினதையெல்லாம் உலகத்தார் செய்வார்கள்', 'அவனது சொல்லாற்றலாலேயே இவ்வுலகம் அவன் நினைத்த அளவு அவனுடையது ஆகும்', 'இவ்வுலகம் அவன் விரும்பியவாறு அவன் சொற்படி நடக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
|