கற்க கசடறக் கற்பவை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க;
பரிப்பெருமாள்: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வி பல வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றைக் கற்று.
பரிதி: கல்வியைப் பிழையறக் கற்க;
காலிங்கர்: முதற்சொன்ன எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும் துணை உறுப்பாகக் கொண்டு, தாம் கற்கும் அவற்றை மாசறக் கற்று உணர்க;
பரிமேலழகர்: ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்.
இப்பகுதியிலுள்ள கசடற என்பதற்குத் தொல்லாசிரியர்கள் குற்றமற, பிழையற, மாசற, பழுதற என்று பொருள் உரைத்தனர். இச்சொல்லுக்கு இவர்கள் அனைவரும் தரும் பொருள் ஒரு கருத்துடையதுவே. கற்பவை என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'கற்கப்படுவனவற்றை' என்று பொதுமையில் உரை கூறினர். பரிப்பெருமாள் இதை விரித்து 'கல்வி பல
வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றை' என விளக்கியுள்ளார். பரிதி பொதுவாக கல்வி என்று கூறினார். காலிங்கர் 'எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும் குறிக்கிறார். பரிமேலழகர் கற்கப்படு நூல்களாக 'அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்தும்' நூல்கள் என விளக்கம் தருவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் கற்க வேண்டிய நூல்களை (எண்ணும் எழுத்தும்) குற்றமறக் கற்க', 'கற்கவேண்டிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும்', 'கற்க வேண்டிய நூல்களைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும்', 'கற்க விரும்பும் ஒருவன் தான் கற்கத் தக்க நூல்களைக் குற்றமறக் கற்பானாக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்றல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்
கற்றபின் நிற்க அதற்குத் தக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக.
மணக்குடவர் குறிப்புரை: இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: அக்கல்வியிற் கூறினது தப்பாமற் செய்க. அது கல்வியாற் பயன் என்றவாயிற்று. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிதி: கற்றால் அந்த நெறியில் நிற்க.
காலிங்கர்: இங்ஙனம் தெளியக் கற்றபின் கல்விக்குத் தகும் ஒழுக்கத்தின் கண்ணே நிலைநிற்க என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.
பரிமேலழகர் குறிப்புரை: நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும்
(நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம்,
அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)
இப்பகுதியிலுள்ள 'கற்றபின்' என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய மூவரும் 'கற்றபின்பு' என்று பொருள் கொள்ள, பரிதியும்
பரிமேலழகரும் 'கற்றால்' எனக் கொண்டனர். 'நிற்க' என்ற சொல்லுக்கு 'கடைப்பிடிக்க' அதாவது 'உறுதியாகப் பற்றி ஒழுகவும்' என்றும் 'நிலைநிற்க' என்றும் உரை தந்தனர். 'தக' என்ற சொல்லுக்கு 'தப்பாமல்' என்றும் 'நெறிக்கண்' என்றும் பழம் ஆசிரியர்கள் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் ';கற்றால் அக்கல்விக்கு ஏற்ப நடக்க', 'அப்படிக் கற்றபின் அக்கல்விக்குத் தக்கபடி நல்லநெறியிலே நிற்றல் வேண்டும்', 'அங்ஙனம் கற்ற பிறகு அந்நூல்களில் கூறியுள்ள நெறிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்', 'அவ்வாறு கற்றபின் அந்நூல்கள் கூறும் நெறிக்கு ஏற்ப ஒழுகுவானாக' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.
கற்றபின்பு அதற்குப் பொருந்த ஒழுகுக என்பது இப்பகுதியின் பொருள்
|