தொட்டனைத்து ஊறும் மணற்கேணி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்;
பரிப்பெருமாள்: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்;
பரிதியார்: ஊற்று எத்தனையாழமுண்டு, அத்தனையாழமும் தண்ணீர் ஊறும்;
காலிங்கர்: ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது; [கல்லுதற்கு-தோண்டுதற்கு]
பரிமேலழகர்: மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்;
பரிமேலழகர் விரிவுரை: ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு.
'மணற்கேணியில் தோண்டிய அளவு நீர் ஊறும்' என்ற பொருளில் அனைத்துத் தொல்லாசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்', 'மணலில் தோண்டிய கிணறு தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊறும்', 'மணலில் தோண்டிய கிணறு இறைத்த அளவு நீர் சுரக்கும்', 'மணலின்கண் உள்ள கிணறு தோண்டிய அளவாக ஊறும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மணலின்கண் உள்ள கிணறு தோண்டிய அளவாக ஊறும் என்பது இத்தொடரின் பொருள்.
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அறிவுண்டாமென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது அறிவுண்டாமென்றது.
பரிதியார்: அதுபோலக் கல்விமிடுக்கு எத்தனையுண்டு,அத்தனையும் அறிவூஉம் என்றவாறு.
காலிங்கர்: அதுபோல உலகத்துப் பண்புடையோர்க்குத் தாம் கற்கும் கல்வி முயற்சியானது எவ்வளவைத்து, மற்று அவ்வளவைத்தான் வந்து ஊறா
நிற்கும் அக்கல்வியின் நிகழும் அறிவு என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
பரிமேலழகர் விரிவுரை: சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின்,
மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் 373) என்றதனோடு மலையாமை அறிக.)
'மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்' என்ற பொருளில் அனைத்து பழம் ஆசிரியர்களும் உரை கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் கற்கக்கற்க அறிவூறும்', 'அதுபோல, மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு பெருகும்', 'அதுபோல மக்களுக்கு அறிவானது படித்த அளவு விளக்கம் அடையும்', 'அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவாகத்தான் பெருகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்
கற்ற அளவிற்கு மக்களுக்கு அறிவு பெருகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|