செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள்; [மாக்கள்-மன உணர்ச்சி இல்லாதவர்]
பரிப்பெருமாள்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாது, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள்;
பரிதி: செவியின் சுவையாகிய கேள்வியில்லாதார்;
காலிங்கர்: சான்றோரால் தம் செவியிற் சொல்லுவதாகிய கேள்விச் சுவையை நுகர்ந்தறியா மாந்தர் ஆகலான், வெறும் வாயுணர்வினையே ஓர் உணவாக மதித்திருக்கின்றனர்;
பரிமேலழகர்: செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்;
பரிமேலழகர் குறிப்புரை: செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். [சொற்சுவை-சொல்லில் தோன்றும் சுவை; பொருட்சுவை-பொருளில் தோன்றும் சுவை; குணம்-தொடைகளைப் பற்றி நின்று காப்பியத்திற்கு அழகு செய்வது; அலங்காரம்-சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது; உருத்திரம்-பிறர் செய்யும் தீங்கினாலாகும் மனக் கொதிப்பு]
'செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாந்தர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
வாயுணர்வின் என்று மற்றவர்கள் கொள்ள காலிங்கர் வாயுணவின் என்று பாடம் கொண்டார். வள்ளுவர் சொல்லாகிய மாக்கள் என்றதையே மணக்குடவர் குறிக்க, பரிப்பெருமாள் மக்கள் என்று அதை மாற்றி அமைத்தார். காலிங்கரும் பரிமேலழகரும் மாக்கள் என்றதை மாந்தர் என்று குறிப்பிடுகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள்', 'செவிச்சுவையறியாத வாய்ச்சுவை மட்டும் அறிகின்ற கீழ்மக்கள்', 'செவியுணவாகிய கேள்விச் சுவைகளை அனுபவிக்கப் பழகாமல் (வெறும்) வாயுணவின் நாக்கு ருசிகளை மட்டும் அனுபவிக்கிற மனிதப் பிறவிகள்', 'செவியினாலே நற்கல்வியின் நயத்தினை நுகரமுடியாது. நாவினாலே நல்ல உணவின் சுவையினை மாத்திரம் அறியக்கூடிய மாந்தர்கள்' என்றபடி உரை தந்தனர்.
செவியால் கேட்டறியும் சுவைகளை உணராத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
அவியினும் வாழினும் என்:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிப்பெருமாள்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிதி: செத்தால் என் இருந்தால் என் என்றவாறு.
காலிங்கர்: மாய்ந்தால் வரும் சேதமும் இருந்தால் வரும் இலாபமும் என் உலகோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
பரிமேலழகர் குறிப்புரை: செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது. [இரண்டும்-சாவதும் வாழ்வதும்]
'கேள்வியில்லாதார் உலகத்தார்க்கு பயன்படாராதலால் அவர்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது?' என்றபடி மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். பரிதி 'அவர்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன' என்கிறார். காலிங்கர் 'அவர்கள் செத்தால் ஒரு இழப்பும் இல்லை இருப்பதால் பயனும் இல்லை' என்று உரை தருவார். பரிமேலழகர் 'சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?' என்று முன்னவர்கள் உரைகளைத் தொகுத்துக் கூறுவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெந்தால் என்ன? இருந்தால் என்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு வருவதென்ன?', 'இறந்தாலென்ன? இருந்தாலென்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகத்திற்கு வருவதென்ன?' என்றபடி பொருள் உரைத்தனர்.
செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.
|