எவ்வது உறைவது உலகம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொருவாற்றா லொழுகுவது உலகம்.;
பரிப்பெருமாள்: யாதொருவாற்றா லொழுகும் உலகம்;
பரிதி: பெரியோர் எப்படி நடந்தார்; அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து நீதிப்பொருள் உடையராகிய நாற்பெருங் குலத்தோர் எவ்வகையது ஆகிய நயத்தோடு ஒழுகுவது;
பரிமேலழகர்: உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று,
'உலகம் எவ்வாறு ஒழுகுகிறதோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உலகம் என்பதற்குப் பரிதி பெரியோர் என்றும் நற்பெருங் குலத்தோர் என்று காலிங்கரும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எங்ஙனம் போகின்றது உலகம்', 'உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ', 'உலக நன்மையைக் கருதி வாழ்வது அறிவுடைமையாகும். உலகம் நன்மையை நாடி எவ்வாறு வாழ்கின்றதோ', 'அப்போதைக்கு உலகப் போக்கு எப்படி யிருக்கிறதோ' என்றபடி உரை தந்தனர்.
எவ்வாறு உலகம் வாழ்கிறதோ என்பது இப்பகுதியின் பொருள்.
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
மணக்குடவர் குறிப்புரை: அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிப்பெருமாள்: அவரோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவென்பது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிதி: அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வகை(யதாகவே)என்றும் குறிக்கொண்டு நடப்பதே அறிவாவது என்று கூறப்பட்டது.
பரிமேலழகர்: அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
பரிமேலழகர் குறிப்புரை: 'உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது. [நியமித்தலான்-ஒழுங்கு படுத்தி யாளுதலால்]
'உலகத்தோடு பொருந்த ஒழுகுவது அறிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் தங்களது
கருத்துரையில் உலகத்தோடு என்பதற்கு உயர்ந்தாரோடு என்று பொருள் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை', 'அவ்வாறே அவரோடு கலந்து வாழ்தல் அறிவுடைமைக்கு அடையாளம் ஆகும்',
'அவ்வாறு அந்த உலக நன்மைப் பொருந்த நாமும் வாழ்வதே அறிவுடைமையாகும்', 'அதை அனுசரித்து பொதுமக்களுடன் ஒட்டி நடந்து கொள்வது அறிவுடைமை'
என்றபடி பொருள் உரைத்தனர்.
உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|