ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின்;
பரிப்பெருமாள்: தமக்கியலும் திறன் இதுவென அறிக; அறிந்த பின் அவ்வளவில நின்றொழுகுவனாயின்;
பரிதி: தன் சத்துவம் அறிந்து மந்திரி வார்த்தைகள் கேட்டு நடப்பானாகில்;
காலிங்கர்: உலகத்து வேந்தரானோர் தாம் யாதானும் ஒரு கருமம் செய்யுமிடத்துத் தமக்கு இயல்வது அறிந்து மற்று அக்கருமநிலை விளங்குமாறு செய்யத் துணிந்தபின் அதனைச் சோரவிடாது அதன்கண்ணே நிலைநின்று மற்று அது முடியுமாறு அங்ஙனம் சென்று முடிப்பார்க்கு;
காலிங்கர் குறிப்புரை: ஒல்வது என்பது இயல்வது என்றது.
பரிமேலழகர்: தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.
'தமக்கு இயல்வது அறிந்து மற்று அக்கருமநிலை விளங்குமாறு செய்யத் துணிந்தபின் அதனைச் சோரவிடாது அதன்கண்ணே நிலைநின்று மற்று அது முடியுமாறு அங்ஙனம் சென்று முடிப்பார்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இயலும் செயலையும் அறிவையும் தெரிந்து நடப்பார்க்கு', ' தம்மால் எவ்வளவு முடியும் என்பதை அறிந்து கொண்டு அந்த அளவோடு நின்று செய்கிறவருக்கு', 'இயலக் கூடியதை அறிய வேண்டும். அறிந்ததைச் செய்ய முயற்சியின்கண் தமது மனத்தினை வைத்து மேற்செல்வார்களுக்கு', 'தன்னால் செய்து முடிக்கக் கூடியதையும் அதன்பொருட்டு தான் அறிய வேண்டியதனையும் அறிந்து அவ்வினையின் (செயலின்) கண் உள்ளம் , உரை, செயல்களைச் செலுத்திக் கருமத்தின் மேல் செல்வார்க்கு. ', என்ற பொருளில் உரை தந்தனர்.
முடிக்கக் கூடிய செயலைத் தெரிந்து அச்செயலின் திறன்களை அறிந்த பின்பு அச்செயலிலேயே தன் மனம் முழுவதையும் செலுத்தி நடப்பார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
செல்லாதது இல்.:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்க்கு இயலாதது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது
பரிப்பெருமாள்: அவனுக்கு இயலாததில்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது
பரிதி: அவன் நினைத்த காரியம் முடியாதது இல்லை.
காலிங்கர்: செல்லப்படாதது யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: முடியாத பொருள் இல்லை.
பரிமேலழகர்ன் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.
'இயலாதது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நடவாதது இல்லை', 'நடக்காத காரியம் ஒன்றுமில்லை', 'முடியாத காரியம் இல்லை', 'முடியாதது ஒன்றும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.
முடியாதது ஒன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|