ஆற்றின் அளவறிந்து ஈக
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க;
பரிப்பெருமாள்: வருவாய் அளவறிந்து கொடுக்க;
பரிதி: அரசன் இவர்கள் தனக்கு உதவியாவார் என்று அறிந்து பொருள் கொடானாகில்;
காலிங்கர்: பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;
பரிமேலழகர்: ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக;
பரிமேலழகர் குறிப்புரை: ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும், 'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். [வைப்பு-முதலீடு; பிறர் என்றது நல்லாதனாரை - திரிகடுகம் 21]
'பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக' என்று மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என அறிந்து கொடுக்க' என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் 'வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக' என்று பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப ஒருவன் கொடுப்பானாக', '(தானம் கொடுப்பதிலும்) உன்னுடைய பொருளாதாரத்தின் அளவை அறிந்து அதற்குத் தக்கபடி கொடு', 'பொருள் வருவாயின் அளவினை அறிந்து அதற்குத் தக்கபடி கொடுத்தல் வேண்டும்', 'தனக்குப் பொருள் வரும் வழியின் அளவினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும்', என்ற பொருளில் உரை தந்தனர்.
பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப கொடுக்க! என்பது இப்பகுதியின் பொருள்.
அது பொருள் போற்றி வழங்கும் நெறி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று
பரிப்பெருமாள்: பொருள் உண்டாக்கும் நெறி அது ஆதலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இனிப் பொருளினது வலியறிதல் கூறுகின்றார். ஆதலின் முதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்றது
பரிதி: அப்பொருளும் கெடும். மனிதரும் கூடார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அங்ஙனம் செய்யின், அஃது அப்பொருளினைக் காக்கும் இடம் காத்து வழங்கும் வழி வழங்கும் முறைமையாவது;
காலிங்கர் குறிப்புரை: எனவே யாவரும் தத்தம் பொருள் வரலாற்றுக்குத் தக்காங்குக் காக்குமிடம் காத்தும் ஈயுமிடம் ஈத்தும் சேறலே கடன் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம். [முதலி(ல்)ன் - முதலீடு செய்த பொருளின் (மூலதனம்)]
'பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி' என்றபடி மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பொருளும் கெடும் மனிடரும் கூடார்' என்றார். காலிங்கர் 'அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி' என உரை வரைவார். பரிமேலழகர் 'அது பொருளைப் பேணி ஒழுகும் நெறி' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அக்கொடையே பொருளைப் பாதுகாத்து வழங்கும் முறையாகும்', 'அதுதான் செல்வத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வழி', 'அது பொருளைப் பேணி ஒழுகும் முறையாகும்', 'அங்ஙனம் கொடுத்தலே பொருளைக் காத்துக்கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி என்பது இப்பகுதியின் பொருள்.
|