இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0482பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:482)

பொழிப்பு (மு வரதராசன்): காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்

மணக்குடவர் உரை: காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.
இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்

பரிமேலழகர் உரை: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: காலத்தோடு ஒத்த முயற்சியினைச் செய்தொழுகல் செல்வமானது தம்மைவிட்டு நீங்காதபடி கட்டும் கயிறாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.

பதவுரை: பருவத்தோடு-காலத்தோடு; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; திருவினை-செல்வத்தினை; தீராமை-நீங்காமல்; ஆர்க்கும்-பிணிக்கும்; கயிறு-கயிறு, வடம்.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காலத்தோடு பொருந்த ஒழுகுதல்;
பரிப்பெருமாள்: காலத்தோடு பொருந்த ஒழுகுதல்;
பரிதி: தாயம் வருமட்டும் பார்த்திருந்து காலமறிந்து காரியம் கொள்வானாகில்;
காலிங்கர்: மற்று இவ்வாறு தாம் தொடங்கும் கருமத்திற்கு ஏற்கும் காலத்தோடு இயைய ஒழுகவே;.
காலிங்கர் குறிப்புரை ஒட்ட என்பது இயைய என்றது.
பரிமேலழகர்: அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்,
பரிமேலழகர் குறிப்புரை: (காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். '

'காலத்தோடு பொருந்த ஒழுகுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலம் பார்த்து ஏற்ப நடப்பது', 'காலத்தோடு பொருந்தச் செயல்புரிதல்', '(அரசர் பகைவரை வெல்ல மட்டுமல்ல. எந்தக் காரியத்துக்கும் பருவகாலம் உண்டு.) பருவகாலத்தை அறிந்து அந்தந்தச்க் காரியத்தை அதனதன் பருவகாலத்தில் செய்யத் தெரிவது ', 'காலத்தோடு பொருந்த ஒழுகுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காலத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.
மணக்குடவர் குறிப்புரை: இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்
பரிப்பெருமாள்: செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்
பரிதி: அது திருமாது தன்னை விட்டு நீங்காமல் கட்டின கயிறு என்றவாறு.
காலிங்கர்: அது தமது செல்வத்தை நீங்காமல் பிணிக்கும் கயிறு ஆம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை தீராமை என்பது ஒழியாமை என்றது. ஆர்க்கும் என்பது பிணிக்கும் என்றது. பரிமேலழகர்: ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.

'செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' நிலையாகச் செல்வத்தைக் கட்டும் கயிறாகும் ', 'நீங்கும் தன்மையுடைய செல்வத்தைத் தன்னுடன் நீங்காதிருக்கக் கட்டும் கயிறாம்', 'செல்வம் தம்மை விட்டு நீங்கிவிடாமல் இருக்கச் செய்கிற உபாயம்.', 'செல்வத்தைத் தம்மைவிட்டு நீங்காமல் கட்டும் கயிறாகும். (செல்வம் நம்மைவிட்டு என்றும் நீங்காது) ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பருவத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாம் என்பது பாடலின் பொருள்.
'பருவம்' என்ற சொல் குறிப்பது என்ன?

காலத்தின் மாற்றத்துக்கு ஏற்பச் செயல்பட்டால் செல்வம் ஒருவரை விட்டு நீங்காது தங்கும்.

காலத்தோடு பொருந்தத் தொழிலில் ஈடுபட்டு நடத்தல், செல்வத்தை ஒருவரிடமிருந்து நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.
இப்பாடல் பொருள் செய்தற்கான காலம் அறிதல் பற்றியது.
செல்வம் நிலையற்றது. தீருந்தன்மையது பொருள் ஒருவரிடம் எப்போதும் ஒரே மாதிரி நிலைத்து நிற்பதில்லை. காலமறிந்து செயலாற்றினால், செல்வமானது கயிற்றால் கட்டிப்போட்டது போன்று கலைந்து போகாமல் தங்கும். அதாவது மாட்டை முளை (peg) கட்டி கயிற்றுடன் பிணைப்பது போல செல்வம் எங்கும் நீங்கிச் செல்லாமல் கட்டி வைக்கப்படுவது போன்றதாகி விடும். காலமறிந்து செய்யும் தொழில் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் தீராதென்பது கருத்து.
காலத்தோடு பொருந்தச் செய்வதென்பது உரிய காலத்தில் உரிய பணிகளைச் செய்தல். செல்வம் ஈட்டும் முயற்சிகளுக்குக் காலமறிந்து செய்யும் இயல்பு இன்றியமையாதது.
வேளாண்மையில்- ஆடிப்பட்டம் தேடி விதை', 'பருவத்தே பயிர் செய்' என்ற பழமொழிகள் நினைக்கத்தகுந்தன. குறிப்பிட்ட பருவத்தில் விதைக்கப்படும் விதைகளே செழுமையாக வளர்ந்து சிறப்பான பயன்களைக் கொடுக்கின்றன.
வணிகத்தில்- காற்று அடிக்கிற பருவத்தில் மாவும், மழைபெய்கிற நேரத்தில் உப்பும் விற்கத் தெருவில் செல்வது காலம் அறியாமல் செய்வனவாதலால் அக்காலங்களில் பொருள் ஈட்ட முடியாது. காலம் கருதிச் செய்யும் தொழில்களே வெற்றியைத் தரும்.
முதலீட்டில்- வங்கி வட்டி விகிதம் கூடும் பொழுது அங்கு வைப்புத்தொகையாக முதலீடு செய்வது ஆதாயமாகும். வட்டி குறையும் காலத்து பாதுகாப்பான மற்ற முதலீடுகளை நினைக்க வேண்டும்.
காலம் உணர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஒருவரது செல்வம் சுருங்காமல் காக்கும்.
காலத்தோடு பொருந்தச் செய்வது என்பதற்குக் காலத்திற்கேற்ற கருவிகளைப் பயன்படுத்துதலையும் எண்ணலாம். கணிணிக் காலத்தில் தட்டச்சை யாரும் பயன்படுத்துவார்களா? அது பருவத்தோடு ஒட்ட ஒழுகலாகாது. அப்படிப் பயன்படுத்துவோர் திரு நீங்காமல் நிலைக்கச் செய்யும் வழிதெரியாதவர் ஆவர்.

'பருவம்' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பாடல் செல்வம் நீங்காதிருப்பதைப் பற்றிச் சொல்வதால் தொடர்ந்து பொருள் பெறும் வகையில் செய்யப்படும் முயற்சிகள் பற்றியே பேசப்படுகிறது என்பது தெளிவு.
பருவம் என்பது ஓடிக்கொண்டிருக்கிற காலத்தைக் குறிப்பது என்பது பெரும்பான்மை உரையாளர்கள் கருத்து. சிலர் உடல் வளர்ச்சியின் பருவங்களை அதாவது இளமை, காளை, முதுமை போன்றவற்றைக் குறிக்கும் என உரைத்தனர். பிறர் தொடர்புடைய சமுதாய வாழ்வில் ஒருவன் மேற்கொள்ளத் தகும் காலம் அறிதலைக் காட்டுவது இவ்வதிகாரப் பாடல்கள். எனவே, இக்குறள் தனி மனிதனுடைய பருவவேறுபாட்டு முறைகளைப் பற்றியோ இளமை-முதுமை குறித்ததான பருவங்கட்கு ஏற்ப ஒழுகும் அறிவையோ சொல்வதல்ல.
மாறிவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப பொருள் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டால் செல்வம் தம்மை விட்டு நீங்கிச் செல்லாமல் காக்கலாம் என இப்பாடலுக்குப் பொருள் கொள்வதே சிறப்பு.

காலத்தோடு பொருந்த ஒருவன் செயல் புரிந்து ஒழுகுவானாயின் செல்வம் அவனைவிட்டு நீங்காது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காலமறிதலின் பயன் செல்வம் கெடாதிருப்பது.

பொழிப்பு

காலத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காதிருக்கக் கட்டும் கயிறாம்.