சிறுபடையான் செல்லிடம் சேரின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே;.
பரிப்பெருமாள்: சிறுபடை யுடையவனுக்கு இயலுமிடத்தே;
பரிதி: அற்பப்படை யுடையவனாகிலும் அவனுக்குக் கை சென்றவிடத்திலே;.
காலிங்கர்: உலகத்து ஒரு வேந்தன் சிறுபடையாவானாயினும் மற்று அவனது செலவு பயின்ற இடத்தைத் தான் மதியாது சென்று கிட்டுமாயின்;.
பரிமேலழகர்: ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், [புகலை - தங்கியிருக்கும் இடத்தை]
பரிமேலழகர் குறிப்புரை: 'செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம்.
'சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அவன் புகலைச் சென்று சாருமாயின்' என்றார்
இன்றைய ஆசிரியர்கள் 'வெல்லுதற்குச் சிறு படையுடையவனின் புகலிடத்தைச் சென்று சேர்வானாயின்', ' (பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டால்) குறைந்த பரிவாரமுள்ளவனானாலும் ஒருவன் தகுந்த இடடததில் மட்டும் இருந்து கொண்டால்', 'சிறிய சேனையையுடையவன் செல்லுதற்குரிய இடத்தில் பெரிய சேனையையுடையவன் சென்றால்', 'சிறு படையுடையானை வெல்ல நினைத்து அவனுக்குரிய இடத்தில் சென்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே சென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும்.
மணக்குடவர்: குறிப்புரை இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிப்பெருமாள்: பெரும்படை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெட்டுவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிதி: மிகுந்த படையுடையவன் சென்றாலும் கெடுவன் என்றபாறு.
காலிங்கர்: மற்றை மிகுபடையாட்சி வேந்தனானவன் தனது வலி அழிந்து கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: பெரும்படையுடைய அரசன், அவனால் தன் பெருமை அழியும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி, இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.
'பெரும்படையை யுடையவன் மிகுதி கெடும் என்றும் வலி அழிந்து கெட்டுவிடும் என்றும்/ தன் பெருமை அழியும் என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பெரும்படையுடைய அரசன் ஊக்கம் கெட்டு அழிவான்', 'மிகுந்த பரிவாரங்கள் உள்ளவன் அவனை வெல்ல நினைக்கும் முயற்சிகள் பலிக்கமாட்டா', 'அவன் ஊக்கம் கெட்டொழியும், அவ்விடம் பெருஞ்சேனை தொழில் செய்வதற்குத் தக்க இயைபில்லாமல் இருப்பதனால்', 'பெரும் படையை உடைய அரசன் மன எழுச்சி கெட்டு பெருமை அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
பெரும்படையை யுடையவன் மன எழுச்சி கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|