அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும்:
பதவுரை: அரிய-அருமையானவைகளை; கற்று-ஓதி; ஆசு-குற்றம்; அற்றார்கண்ணும்-நீங்கியவரிடத்தும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;
பரிப்பெருமாள்: கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;
பரிதி: நல்ல கல்வி கற்றார் குற்றமற்றார்;
காலிங்கர்: இவ்வுலகத்துப் பலரானும் கற்றற்கு அரியனவாகிய திருந்திய நூல்களை நிறையக் கற்று மற்று அதனானே இருமைக் குற்றமும் நீங்கினார் மாட்டும் பற்றி;
பரிமேலழகர்: கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்;
'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றம் அற்றார் மாட்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும்', 'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றங்களை நீக்கியவரிடத்தும்', '(படித்தவன் என்பதற்காக மட்டும் ஒருவனை நம்பிவிடக்கூடாது.) அருமையான நூல்களைக் கற்று ஐயந்திரிபுகள் இல்லாதவர்களிடத்திலும்', 'அருமையான நூல்களைக் கற்றுக் குற்றங்களில்லாதவர் எனப்படுவோரிடத்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு இல்லாதவராகத் தோன்றுபவர் இடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.
தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு:
பதவுரை: தெரியுங்கால்-ஆராயுமிடத்து; இன்மை-இல்லாமை; அரிதே-அருமையானதே; வெளிறு-வெண்மை (அறியாமை).
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
பரிப்பெருமாள்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது துரோணாசாரியார் மதம். அவ்வளவில் தேறலாகாது என்று இது கூறப்பட்டது.
பரிதி: விசாரித்தால் குற்றப்படுமாகையால் அவர்களைக் குற்றமுடையாரென்று கை விடுவானல்லன் என்றவாறு.
காலிங்கர்: ஆராயுங்காலத்துக் குற்றமும் இல்லாமைச் சான்றோர் ஆதல் அரிது; எனவே கீழ்ச்சொல்லிய ஆங்கே தெரிந்து தெளிக என்பது பொருள் ஆயிற்று.
பரிமேலழகர்: நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.
'ஆராயுமிடத்து குற்றமும் இல்லாமை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் குற்றம் என்று சொல்லாமல் வெண்மை அதாவது அறியாமை இல்லாமை அரிது என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தால் ஓரளவு அறியாமை இருக்கும்', 'ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்', 'நம்பத்தகாமை இல்லாதிருக்கும் என்பது இல்லை', 'நுணுகி ஆராயுமிடத்து, அறியாமை முற்றிலுமில்லாதிருத்தல் அருமையே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|