பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்;
பரிப்பெருமாள்: பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்;
பரிதி: மதப்பட்டால் அறிவில்லாதாற்குப் புகழில்லை;
காலிங்கர்: தத்தம் கோட்பாட்டால் பெறும் பயன் வேறுபடுத்து அமைக்கும் அறுவகைச் சமயத்தோர்க்கும் அவை கடந்த அப்பாலோர்க்கும் பிறரை அவமதிபண்ணி இகழாது ஆற்றல் உடையாராதலே தத்தம் பெறுபயனுக்கு உறுதி நெறியென்பது தாம் கற்ற நூல்களில் பெறுபயன்; [அறுவகைச் சமயத்தோர்-சைவமுதலாகக் கௌமாரம் ஈறாகவுள்ள வைதிக மதம் ஆறினும். காபில முதலாக-சைமினியம் ஈறான வேதாந்த மதம் ஆறினும், பௌத்த முதலாக சூனியவாதம் ஈறான புறச்சமயம் ஆறினும், வைணவம் முதலாகச் சைவம் ஈறான அகப் புறச்சமயம் ஆறினும் உள்ளோர்]
பரிமேலழகர்: பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை;
'பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை', 'மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை', 'சோர்வுடையவர்களுக்குப் புகழுடைமை இல்லை', ''மறதியுடையார்க்குப் புகழுடைமை இல்லை' என்பது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மகிழ்ச்சிச் சோர்வுடையவர்களுக்கு நற்பெயர்பொருந்திய வாழ்வு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.
மணக்குடவர் குறிப்புரை: இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது. [ஆகாது-உண்டாகாது]
பரிப்பெருமாள்: அஃது உலகத்து வழங்குகின்ற அறுவகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொச்சாப்பு ஆகாது என்றது.
பரிதி: அது எல்லாச் சமயத்தார் சொல்லுஞ் சாத்திரத்தினுங் கேட்க என்றவாறு.
காலிங்கர்: அன்றியும் பிற நூல்களினும் இக்குற்றம் நன்று என்பார் யாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.
'அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இது எல்லா ஆசிரியர்க்கும் முடிந்த முடிவு', 'அக் கருத்து எவ்வகைப்பட்ட நூலாசிரியர்கட்கும் தெளிந்த முடிபாகும்', 'அஃது உலகத்தில் எவ்வகைப்பட்ட நூற்கொள்கை உடையார்க்கும் ஒப்ப முடிந்த துணிபாம்', 'உலகத்தில் உள்ள எல்லாப் பெரியோர்க்கும் ஒப்ப முடிந்த துணிபாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
இது உலகத்திலுள்ள எத்துறை சார்ந்த அறிஞர்க்கும் தெளிந்த முடிபாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|