இறைகாக்கும் வையகம் எல்லாம்:
பதவுரை: இறை-வேந்தன்(அரசு); காக்கும்-காப்பாற்றும்; வையகம்-மண்ணுலகம்; எல்லாம்-அனைத்தும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்;
பரிப்பெருமாள்: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்;
பரிதி: உலகத்தைச் செங்கோல் முறையாலே அரசன் காப்பானாகில்;
காலிங்கர்: இவ்வையகத்து வாழும் மக்கள் முதலாகிய உயிர்கள் அனைத்தையும் மன்னனானவன் ஒன்றினை ஒன்று நலியாமல் பாதுகாத்து ஒழுகும்;
பரிமேலழகர்: வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்;
'வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகங்களை எல்லாம் அரசன் காப்பான்', 'தன் நாட்டின் மக்களையெல்லாம் காப்பவன் மன்னவன்', 'அரசன் உலகத்தை எல்லாம் காப்பான்', 'உலகம் முழுவதையும் அரசன் காப்பாற்றுவான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நாட்டையெல்லாம் ஆள்வான் காப்பான் என்பது இப்பகுதியின் பொருள்.
அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்:
பதவுரை: அவனை-அவனை; முறை-நீதி; காக்கும்-காப்பாற்றும்; முட்டா-வழுவாமல்; செயின்-செய்தால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது தனக்குக் காவலாம் என்றது.
பரிப்பெருமாள்: அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தனக்குக் காவலாம் என்றது.
பரிதி: அரசனை உலகம் காக்கும் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அம்மன்னவன் (தன்னைத் தான் நடாத்துகின்ற) செங்கோலாகிய நீதியானது நிறையக் காத்து நிற்கும். மற்று இதனை இடை முறியாமல் பரிகரித்துச் செய்யுமாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.
'அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவனை ஆட்சிமுறை காக்கும்; முறைக்குக் குறையில்லாதவாறு நெறிப்படி ஆட்சிபுரிந்தால்', 'முட்டில்லாதபடி அரசு செய்தால் அம்மன்னவனைக் காப்பது அவனுடைய நல்ல அரசாட்சி முறையே', 'அவன் வழுவாமல் செங்கோல் செலுத்துவனாயின் முறையே அவனைக் காக்கும்', 'அவன் இடையூறு வந்தபோதும் தவறாமல் அறநெறியில் ஆட்சி செலுத்துவானானால் அவனை அவனுடைய ஆட்சி முறையே காப்பாற்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவனை ஆட்சிமுறை காக்கும்; இடையூறு வந்தபோதும் முறைக்குக் குறையில்லாதவாறு ஆட்சிபுரிந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|