அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
(அதிகாரம்:ஆள்வினையுடைமை
குறள் எண்:611)
பொழிப்பு (மு வரதராசன்): இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
|
மணக்குடவர் உரை:
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்.
இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
பரிமேலழகர் உரை:
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
ஒருவன் இச்செயல் செய்தற்கரியது என்று அசந்து போகாமல் (அயராமல்) இருக்க வேண்டும். அச்செயலை முடித்தற்கேற்ற பெருமையை அவனுக்கு முயற்சி கொடுக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அருமை உடைத்து என்று அசாவாமைவேண்டும் முயற்சி பெருமை தரும்.
பதவுரை:
அருமை-எய்தற்கருமை; உடைத்து-உடையது; என்று-என்பதாக; அசாவாமை-அசந்து போகாமை (சோர்வடையாமை); வேண்டும்-தகும்; பெருமை-உயர்வு; முயற்சி-முயலுதல்; தரும்-உண்டாக்கும்.
|
அருமை உடைத்துஎன்று அசாவாமைவேண்டும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்;
மணக்குடவர் குறிப்புரை: இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
பரிப்பெருமாள்: ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைசெய்து முடித்தல் அருமையுடைத்தென்று தவிர்தலாகாதென்றது.
பரிதி: இந்தக் காரியத்தை எடுத்து முடிக்க அருமையுண்டு என்று விசாரிக்க வேண்டாம்; [விசாரிக்க - கவலைப்படல்]
காலிங்கர்: அரசரானோர் தமக்குச் சிறந்த கருமம் செய்யும் இடத்துப் பெரிதும் செய்தற்கு அருமை உடைத்து என்று கண்சோம்பி இராமையை விரும்ப வேண்டும்; [கண்சோம்பி-மனச்சோம்பலைக் கண்கள் குவிந்து சுருங்கிக் காட்டுதல்]
பரிமேலழகர்: தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக;
'நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதி முயலாமையைத் தவிர்தல் வேண்டும்/கண்சோம்பி இராமையை விரும்ப வேண்டும்/தளராதொழிக என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி உசாவாமை வேண்டாம் எனப் பாடம் கொண்டார் போல 'விசாரிக்க வேண்டாம்' என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரிய காரியம் என்று மலைக்க வேண்டாம்', '(ஒரு காரியத்தைச் செய்யப் புகுந்து அது கைகூடாவிட்டால்) செய்வதற்கு முடியாத காரியம் என்று தளர்ந்துவிடாமல் இருக்க வேண்டும்', 'ஒரு பெரிய செயலைச் செய்து முடித்தல் கடினமென்று தளர்ச்சி அடையாதிருக்கவேண்டும்', ''இச்செயலை நம்மால் செய்ய முடியாது' என தளராதிருத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செயல் முடித்தல் கடினம் என தளராதிருத்தல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
பெருமை முயற்சி தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்.
பரிப்பெருமாள்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்.
பரிதி: உத்தியோக பலத்தினாலே காரியம் முடியும் என்றவாறு. [உத்தியோக பலம்-முயற்சியின் ஆற்றல்]
காலிங்கர்: அதனால் அம்முயற்சியானது மிகவும் பெரிய மேம்பாட்டினைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.
'பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முயற்சி எல்லாப் பெருமையும் தரும்', 'மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்', 'இடைவிடா முயற்சி அச் செயலைச் செய்வதற்கேற்ற பெருவலிமையைத் தரும்', 'செய்து முடித்தற்கு ஏற்ற பேராற்றலை முயற்சி உண்டு பண்ணும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
முயற்சி பெருமையைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செயல் முடித்தல் கடினம் என அசாவாமை வேண்டும்; முயற்சி பெருமையைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'அசாவாமை' குறிப்பது என்ன?
|
ஒரு செயலைச் செய்து முடித்தல் மிகவும் கடினம் என்று எண்ணி மனம் தளரக்கூடாது; செய்வதற்கான முயற்சியே முடித்தக்கேற்ற பெருமையைத் தரும். எவ்வளவு பெரிய செயலாக இருப்பினும் முயற்சியினால் செய்து முடிக்கலாம்.
முயன்று வாழ்வு நடாத்தலே இயற்கை. எச்செயலையும் செய்து முடிக்க இயலும் என்று சோர்வடையாமல் மேற்கொள்ளும் துணிவிற்கே முயற்சியென்று பெயர். இடைவிடாது முயன்று செயல் ஆற்றுவதை ஆள்வினையுடைமை என்று கூறுகிறார் வள்ளுவர். ஆள்வினையுடைமை மனித வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை, எந்தச் செயலாக இருந்தாலும் செய்ய முடியாதது என்று சோர்வடையக் கூடாது; முயற்சி இருந்தால், அதைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய ஆற்றல் தானே வரும்; அந்த ஆற்றலை முயற்சியே தரும்.
இச்செயலைச் செய்து முடிக்க முடியுமா என்று நினைக்கத் தொடங்கும்போதே செயலூக்கம் சிதைந்து போகும்.
மனக் கிளர்ச்சிக்கு எதிரானவற்றை எண்ணக்கூடாது. ஊக்கக் கிளர்ச்சி குறைந்து போனால் அயற்சியே தலைகாட்டும். தன்னம்பிக்கை தளரும். பயம் குடிகொள்ளும். தோல்வி மனப்பான்மை தலைதூக்கும். அரிய செயலுக்கு நல்ல வண்ணம் முயற்சியைத் தொடங்கிக் களத்தில் போராடித் தோற்றாலும் பெருமைதான். எத்தனையோ தோல்விகள் பெருமையையும் ஈட்டித் தந்திருக்கின்றன. எனவே முயலுதலைத் தவிர்க்கக் கூடாது.
|
'அசாவாமை' குறிப்பது என்ன?
'அசாவாமை' என்ற சொல்லுக்கு முயலாமையைத் தவிர்தல், கண்சோம்பி இராமை, தளராதிருத்தல், சோர்வுறாமல் இருத்தல், மனந்தளராதிருத்தல், மலையாதிருத்தல், அயராதிருத்தல், தளர்ந்துவிடாதிருத்தல், தளராமை, தளர்ச்சி அடையாதிருத்தல், மனத்தளர்ச்சி அடையாதிருத்தல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இன்று பேச்சு வழக்கில் உள்ள அசந்து போகாமலிருத்தல் என்பதையே அசாவாமை என்ற சொல் குறிக்கிறது.
|
செயல் முடித்தல் கடினம் எனத் தளராதிருத்தல் வேண்டும்; முயற்சி பெருமையைத் தரும் என்பது இக்குறட்கருத்து.
ஆள்வினையுடைமையார்க்கு முடித்தற்கு அருமையான செயல் என்று எதுவும் இல்லை.
செயல் செய்தற்கரியது என்று மலைக்காமல் (அயராமல்) இருக்க வேண்டும்; முயற்சி பெருமையைத் தரும்.
|