இடும்பைக்கு இடும்பை படுப்பர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார்;
பரிப்பெருமாள்: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார்;
பரிதி: துன்பம் வந்தால் துன்பம் அதற்கு இடுவர்;
காலிங்கர்: யாதானும் ஒருவாற்றான் வந்து எய்திய இடும்பைக்குத் தாம் பெரிதும் இடும்பையைச் செய்வார்;
பரிமேலழகர்: அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.
'துன்பத்திற்குத் துன்பத்தை விளைப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அத்துன்பத்திற்குத் தாம் துன்பம் செய்வர்', 'அவர்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும்படியாகச் செய்துவிடுவார்கள்', 'அவ்விடையூற்றிற்கே இடையூறு விளைப்பர்', 'துன்பத்திற்குத் துன்பம் உண்டு பண்ணுவர் ('துன்பத்தை அழிப்பர்' என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
துன்பத்திற்குத் இடையூறு உண்டு பண்ணுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
பரிப்பெருமாள்: அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
பரிதி: துன்பம் வந்தாலும் துன்பப்படாதவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் அங்ஙனம் எய்திய இடும்பைக்கு இங்ஙனம் தெளிந்து தாம் சிறுதும் இடுக்கண் உறாத இகல் வேந்தர் என்றவாறு.
பரிமேலழகர்: வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.
'துன்பத்திற்குத் துன்ப முறாதவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு வந்த துன்பத்திற்குத் துன்பப்படாதவர்', 'துன்பப்படுத்த வரும் இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுள்ள அறிவாளிகள்', 'இடையூறுகளுக்கு வருந்தாதவர்கள்', 'துன்பத்திற்கு வருந்தாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இடையூற்றிற்குத் துன்பப் படாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|