சொல்லுதல் யார்க்கும் எளிய:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;
பரிப்பெருமாள்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;
பரிதி: சொல்லுதல் யார்க்கும் எளிது;
காலிங்கர்: யாம் வினைத்திட்பம் உடையோம் என்று இங்ஙனம் சொல்லல் யாவர்க்கும் எளிய;
பரிமேலழகர்: யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய;
'இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் எனச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்', 'இதனை இப்படிச் செய்ய வேண்டும் எனப் பிறரிடம் வாயாற் சொல்லுதல் யாவர்க்கும் எளிய செயல்', 'இவ்வாறு இக்காரியத்தை முடிப்போம் என்று சொல்லுதல் யார்க்கும் எளிமையாம்', ''இச் செயலை இவ்வாறு செய்து முடிப்போம்' என்று ஒழுங்குப் படுத்தி அழகுறக் கூறுதல் யாவர்க்கும் எளிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம் என்பது இப்பகுதியின் பொருள்.
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிப்பெருமாள்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய இருவகையினும், ஊறு ஓராது செயலின் வகை கூறுவார் முற்படச் சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று கூறினார்.
பரிதி: அரியது சொன்னது போலவே காரியம் முடிப்பது என்றவாறு.
காலிங்கர்: மற்று அச்சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அரிய ஆகும்;
காலிங்கர் குறிப்புரை: அதனால் அங்ஙனம் முறைவழி செய்யத் திட்பம் உடையோர் வானவருள் ஒருவர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.
'அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னபடி செய்தலே முடியாது', 'சொல்லியவாறு செய்து முடித்தல் யாவர்க்கும் அரிய செயல்', 'சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அருமையாகும்', 'ஆனால் சொல்லியவாறே செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம் (முடியாவாம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|