ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும்;
பரிப்பெருமாள்: ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும்;
பரிதி: சமர்த்தன் முன்னே சமர்த்தன் என்று பெயர் பெறுதல்;
காலிங்கர்: ஒள்ளிய அறிவாளர் அவை முன்னர்க்கு ஏற்பத் தாமும் ஒள்ளிய அறிவாளர் ஆதல் உடையர் எனின்; .
காலிங்கர் குறிப்புரை: ஒளியார் என்பது ஒள்ளிய அறிவுடையார். .
பரிமேலழகர்: அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல்.
'ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையார் கூட்டத்தில் தாமும் அறிவுடையராய்ப் பேசுக', 'அறிவாளிகள் கூடியுள்ள சபையில் அவர்களைக் காட்டிலும் அறிவாளியென்று புகழடையப் பேச வேண்டும்', 'அறிஞர்முன் அறிவுடையவனாகப் பேசுக', 'அறிவால் சிறந்தார் முன்னர் தாமும் அறிவுடையராக விளங்குக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக என்பது இப்பகுதியின் பொருள்.
வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.
பரிப்பெருமாள்: வெள்ளறிவினார் முன்னர் வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அவையறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும் என்றார்; அவற்றுள் அவை அறிதலாவது இது என்று கூறியது.
பரிதி: வெள்ளை முன்னே கறுப்பு வெண்மையாமோ என்றவாறு.
காலிங்கர்: அவ்வறிவு, இல்லாப் பேதையார் ஆகிய வெள்ளறிவாளர் முன்னர் வரின் அங்குத்தனையும் வெண்மை நிறமே தனக்கு இயல்பு ஆகிய சுதை போலும் வெள்ளைவண்ணத்தைத் தம் கண் உள்ளதாகக் கொண்டு கழிதல் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வெளியர் என்பது வெள்ளியார்; அறிவுகேடர். வான் சுதை வண்ணம் கொளல் என்பது, இதில் வாலிமை -வெண்மை; சுதை என்பது மணலும் நீறும் கூடிய சுண்ணாம்பு.
பரிமேலழகர்: ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.
'வெள்ளறிவினார் முன்னர் வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மை நிறத்தைக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவற்ற வெள்ளைகளின் கூட்டத்தில் வெள்ளை போல் பேசாதிருக்க', 'அறிவு குறைந்த சாதாரண மக்கள் கூடியுள்ள இடத்தில் அவர்களைக் காட்டிலும் சாதாரண மனிதனாகப் பேச வேண்டும்', 'அறிவில்லாதவர் அவைக்களத்தே வெண்சாந்தின் தன்மையுடையவனாய் இருக்கவும். (அஃதாவது ஒன்றும் அறியாதவன் போல் இருக்கவேண்டும்.)', 'அறிவற்ற கூட்டத்தினர் முன்னர், தாமும் ஒன்றும் அறியாதவர் போல் நடிக்க. (வெண்சுண்ணத்தின் நிறத்தைக் கொள்க.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண்சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக என்பது இப்பகுதியின் பொருள்.
|