அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்;
பரிப்பெருமாள்: அங்கணத்தின்கண் உக்க அமிழ்தம் போல இகழப்படுவர்;
பரிதி: அங்ஙணமாகிய சேற்றுக்குள் அமிர்தத்தை ஊற்றினதற்கு ஒக்கும்;
காலிங்கர்: பொல்லாத நீர் உகுத்தற்கு உரியதோர் அங்ஙணத்துள் கொண்டு சென்று உகுத்த பாலும் தேனும் முதலிய அமுதம் எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து;
பரிமேலழகர்: சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று.
அங்ஙணத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். அங்கணம் என்பதற்கு பரிதி சேறு என்றும் பொல்லாத நீர் உகுத்தற்குரிய இடம் என்றும் பரிமேலழகர் துயதல்லாத முற்றம் என்றும் பொருள் கொண்டனர். அமிழ்து என்ற சொல்லுக்கு அமுதம், அமிழ்தம், பாலும் தேனும் முதலிய அமுதம் எனப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சாக்கடையிற் கொட்டிய அமிழ்தம் போலும்', 'உயர்ந்த அமிழ்தத்தைச் சாக்கடையில் இட்டது போலாம்', 'சாக்கடையில் அமிர்தத்தை ஊற்றுவதற்குச் சமானமாகும்', 'சாக்கடையில் அமிழ்தத்தைக் கொட்டியதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சாக்கடையில் பாலைக் கொட்டியது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.
தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: தம்முடைய இனமல்லாதார் முன் சொல்லுவாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவர் என்றது.
பரிதி: புல்லறிவாளர் முன் வித்தை செய்தல் என்றவாறு.
காலிங்கர்: யாது எனின் தம்மோடு சிறந்த நல்லறிவினரல்லார் கூட்டத்து முன்னர்த் தமது கல்வி வினோதம் கொண்டு ஒழுகல் என்றவாறு.
பரிமேலழகர்: நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க;
('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.
'தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். 'புல்லறிவாளர் முன் வித்தை செய்தல்' என்பது பரிதியின் உரை. 'தம்மோடு சிறந்த நல்லறிவினரல்லார் கூட்டத்து முன்னர்த் தமது கல்வி வினோதம் கொண்டு ஒழுகல்' என்றார் காலிங்கர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்னிலைக்குத் தகாதவர் கூட்டத்தில் பேசுவது', 'நல்லவர் தம் இனத்தவரல்லாத புல்லர்முன் சொற்பழிவாற்றுதல்', 'உயர்ந்த கல்வியறிவுள்ள கருத்துகளை அவற்றை அனுபவிக்கக்கூடிய கல்வியறிவில்லாதவர்கள் முன்னால் பேசுவது. ஆனதால் தம்முடைய இனமான கற்றறிந்தார் அல்லாதவர்கள் கூட்டத்தில் (அவற்றைப்) பேசக் கூடாது', 'தம் கருத்தோடொத்த கூட்டத்தார் அல்லாதார் முன்னிலையில் சொல்லுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம்முடன் ஒத்த உணர்வுடையவர் அல்லாத அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
|