கற்றாருள் கற்றார் எனப்படுவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்;
பரிப்பெருமாள்: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்;
காலிங்கர்: உலகத்துக் கற்றவர் பலருள்ளும் இவர் பெரிதும் கற்றார் என்று அக்கற்றவர் தம்மிலே முன் எடுத்து உரைக்கப்படுவார்;
பரிமேலழகர்: கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்;
'கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார்?', 'கற்றவருள் மிகச்சிறந்த கற்றவர் எனப்படுபவர்', 'கற்றவர்களால் கற்றவராக மதிக்கப்படுவார்கள்', 'படித்தவருள் படித்தவராக மதிக்கப்படுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கற்றவருள் நன்கு கற்றார் எனச்சொல்லப்படுவார் என்பது இப்பகுதியின் பொருள்.
கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
மணக்குடவர் குறிப்புரை: இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
பரிப்பெருமாள்: தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கற்றார் என்பதூஉம் அவையஞ்சாதாவரையே என்று கூறப்பட்டது.
பரிதி: கற்றோர் கூடின கூட்டத்திலே தாம் கற்ற கல்வியைச் செலுத்துதல், அமிர்தமானதை நல்லோர் முன்னே வைத்தற்கு ஒக்கும்; கல்லார்முன் சொல்லுதல் மரப்பாவைமுன் வைத்தற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் கற்றோர் முன்னர்த் தாம் கற்றவற்றை ஏற்கச் சொல்ல வல்லோர் என்றவாறு.
பரிமேலழகர்: கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார்.
பரிமேலழகர் குறிப்புரை: உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.
'தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவர்முன் எடுத்துச் சொல்ல வல்லவரே', 'கற்றவர் கூட்டத்தில் தாம் கற்றவற்றை அஞ்சாது, கேட்பவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவரே', 'கற்றறிந்தார் சபையில் தாம் கற்றதைத் தடுமாற்றமின்றி விளங்கச் சொல்லத் தெரிந்தவர்கள்தாம்', 'தாங்கள் கற்றவற்றைப் புலவர்கள் அவையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் வகையில் பேச வல்லவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|