இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:779)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?

மணக்குடவர் உரை: முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர்.
இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?
(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.)

தமிழண்ணல் உரை: வீரர்கள் போரில் 'இன்னது செய்து முடிப்பேன்' என வஞ்சினம் கூறியது தப்பிப்போகாதபடி, கடும் போர் செய்து, அவ்வஞ்சினம் முடிக்கும்முன் இறந்துபோனவர்களை 'இவர் வஞ்சினத்தை நிறைவேற்றாமல் இறந்துபோனார்' என்று பழித்துப் பேசுதற்குரியார் யார்? வஞ்சினம் முடிப்பதற்காகப்போரிட்டு முன்னே மடிந்தாலும், அது தோல்வியாகாது; அவர் வஞ்சினம் முடித்தவராகவே கருதப்படுவார் என்பது இதன் கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழைத்தது இகவாமைச் சாவாரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே.

பதவுரை: இழைத்தது-தாம் கூறிக்கொண்டது (வஞ்சினம்), கூறின, வஞ்சினம்வகுத்தது; இகவாமை-தப்பாமல்; சாவாரை-இறப்பவரை; யாரே-எவரே; பிழைத்தது-தப்பியது, தவறு இழைத்தமை; ஒறுக்கிற்பவர்-தண்டிப்பவர், எள்ளுதற்குரியார், பழிப்பவர்.


இழைத்தது இகவாமைச் சாவாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை;
பரிப்பெருமாள்: முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை;
பரிதி: அரசன் சொன்ன அவசரத்தினாலே தன் சீவனை விடும் சுத்தவீரனை;
காலிங்கர்: போர்க்களத்து எதிர் நின்ற வீரரை நோக்கி நும்மை யாம் இவை செய்வேம் என்று எண்ணி முன் கூறியது யாது; மற்று அவ்வெண்ணத்தைக் கடவாமை காரணமாகச் சென்று பொருது தம் உயிர் செருக்கும் திறல் உடையோரை; [கடவாமை-மீறாமை]
பரிமேலழகர்: தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை;
பரிமேலழகர் குறிப்புரை: இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது.

'முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை', 'தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாதிருக்க மாய்ந்தவரை', '(அரசனுக்காக உயிரையும் கொடுப்பேன்' என்று தாம்) செய்து கொடுத்துள்ள சத்திய சபதத்தை மீறக்கூடாது என்பதற்காகவே உயிரையும் துறக்கக்கூடிய வீரர்களை', 'செய்த வஞ்சினந் தப்பாமல் போரில் உயிர்விடுவாரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாமல் உயிர் துறந்தவரை என்பது இப்பகுதியின் பொருள்.

யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தப்பினார் என்று பழிக்கவல்லவர் யாவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.
பரிதி: பிழைகண்டலும் ஒறுப்பவர் யாவர் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து யாரேதானெ(ன் எண்ணத்தைப்) பிழைத்தார் என்று சொல்லி முன் நின்று ஒறுக்க வல்லார் என்றவாறு.
பரிமேலழகர்: அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? [எள்ளுதற்கு உரியார்- இகழ்தற்குரியவர்]
பரிமேலழகர் குறிப்புரை: வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவு அன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு. [தொலைவு - தோல்வி/சாக்காடு]

'அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெற்றி தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ?', 'வஞ்சினம் தவறினாரென்று யாரே இகழ்ந்து துன்புறுத்தற்கு உரியவர்?', 'யாரும் குற்றம் கூறி ஏளனம் செய்ய மாட்டார்கள்', 'குற்றங்கூறி யிகழுவார் அல்லது தண்டிப்பவர் யாவர்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவறினார் என்று இகழ்வோர் யார் இருக்கிறார்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இழைத்தது தவறாமல் உயிர் துறந்தவரைத் தவறினார் என்று இகழ்வோர் யார் இருக்கிறார்? என்பது பாடலின் பொருள்.
'இழைத்தது' என்ன?

தான் சூளுரைத்தபடியே கொள்கை உறுதியுடன் போரில் உயிர் துறப்பான் மறவன்.

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தவறாமல் போரில் உயிர் துறந்தவரை, எவர்தாம் பழித்துரைக்க முடியும்?
இழைத்தது என்ற சொல்லுக்குச் சூளுரைத்தது எனப் பொருள் கொள்வர். சூளுரை என்பது வஞ்சினம் அதாவது இன்னது செய்யாவிட்டால், இன்னபடி யாவேன் என்று உறுதி செய்துகொள்வதைக் குறிப்பது. சபதம் என்பதும் இதுவே. வீரர் போர்க்களத்துக்குச் செல்லும்போது சண்டையில் தான் இன்ன வீரச் செயல்களைச் செய்யேனாகில் இன்னான் ஆவேன் என சூளுரைப்பார். 'நான் இப்போரில் பத்துப் பகைவரையாவது உயிர் நீக்கம் செய்வேன்; இல்லாவிடில் திரும்பமாட்டேன்' என்பது போன்ற வஞ்சினம் உரைக்கிறார் ஒரு வீரர்; அவர் ஒன்பது பகைஞரைக் கொன்றபின்னர் மடிகிறார். அவர் வஞ்சினம் நிறைவேற்றவில்லையே என யார் சொல்வார்? இறப்பேன் என்றார்; இறந்துவிட்டார். வஞ்சினம் நிறைவேறியதுதானே. வஞ்சினத்தை நிறைவேற்றாமல் இறந்துவிட்டாரே என்று அவரை யாரும் இகழமாட்டார்கள்.
இப்பாடலிலுள்ள 'பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே' என்ற பகுதிக்கு அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற்குரியார் இவ்வுலகத்தில் யார்தான்! என்பது பொருள். ஒறுக்கிற்பவர் என்பதற்குத் தண்டிப்பவர் என்பது பொருளானாலும் இறந்த பின்னர்த் தண்டிப்பது என்பது கூடாததால், ஒறுப்பர் என்பதற்கு இகழ்பவர் அல்லது பழித்துரைப்பர் எனவும் பொருள் கொள்வர்.

வாழ்வுக்கு முதல் உயிர். உயர்ந்த பண்புகளுக்காக அம்முதலையே நீப்பர் கொள்கையில் உறுதியுடையோர். ஒரு போர்வீரனும் தான் உரைத்த வஞ்சினம் பொய்க்காமல் தன்னையே தருகிறான்.
ஜி வரதராஜன் 'வெற்றியே குறிக்கோளாகக் கொண்டு உயிரையும் விடத் துணிந்தவரை எவர் தடுத்துத் துன்பத்தைக் கொடுத்து வென்றுவிட முடியும்?' என உரை வரைந்தார். இது இத்தகைய படைச்செருக்கு உடையானைத் தடுக்கவும் முடியாது; வெல்லவும் முடியாது; குறிக்கோள் நிறைவேறாதபோது உயிரை விடுவானே தவிர, லட்சியத்தை விடமாட்டான் என்னும் பொருள் தருகிறது.

'இழைத்தது' என்ன?

தொல்லாசிரியர்கள் இச்சொல்லுக்கு 'முற்கூறிய வஞ்சினம்' என்று பொருள் கூறி 'படைவீரன் போர்நேர்ந்துழிச் செய்த சூளுரை' என விளக்குவர். இழை என்பது சொல்லுதல் என்ற பொருள் தருகிறது.
செ வை சண்முகம் 'பரிமேலழகர் பொழிப்புரையில் 'கூறின வஞ்சினம்' என்று உரை எழுதிவிட்டு விளக்கவுரையில் 'இழைத்தல்: இன்னது செய்யேன் ஆயின் இன்னன் ஆகுக எனத் தான் வகுத்தல்' என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் இழைத்தல் என்பது வகுத்துச் சொல்லுதல் என்பதே சரியான விளக்கம் ஆகும். அப்படியானால் 'இழை' என்பது சொல்லுதலில் ஒரு வகையாக அமையும். இழைத்தல் என்பது செய்தல் என்ற பொருளில் சங்க இலக்கியத்திலும் குறளிலும் வந்துள்ளது. மகளிர் கானல் இழைத்த சிறுமனை (குறுந்தொகை 326 பொருள்: மகளிர் கடற்கரைச் சோலையிலே செய்த சிற்றிலினிடத்தே) உழைப்பரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் (குறள் 530) (அரசன்) செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க' என்று இங்குள்ள குறளின் இரண்டாம் அடிக்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். அப்படியானால் 'இழைத்தது இகவாமை' என்பதற்கு 'இப்படிச் செய்வேன் என்று சொன்னது தவறாமை' என்றும் விளக்கலாம் அந்த நிலையில் சொல்லுதலுக்கும் இழைத்தலுக்கும் சிறு வேறுபாடு உண்டு' என்பார்.

வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார் 'சபதத்துள்ள வகை யிரண்டனுள், முதலதாகிய பகைவனுயிர் போக்குதலை நிறைவேற்ற முடியாத விடத்து மற்றொரு வகையாகிய தன்னுயிர் போக்குதலைச் செய்திடுவராயின், அப்பொழுது அவரைச் சபதத் தப்பினவரென்று இகழக் காரணமில்லை என்னும் கருத்துப்பட இக்குறளுக்கு உரை கொள்ளினும் ஆம்' என இக்குறளுக்கு விளக்கம் தந்தார். இவர் போர்க்களத்தில் வீரன் தற்கொலை செய்துகொள்வதைக் குறிக்கிறார்.
தேவநேயப்பாவாணர் சூள் வகையுள் 'என்பகைவருக்கு அடிமையாவேனாக, என் மீசையைக் களைந்து பெண்மைத் தோற்றத்தை மேற்கொள்வேனாக, என் வுடமை முழுவதையும் ஒருங்கே இழப்பேனாக, என் உயிரை விட்டு விடுவேனாக' என விதந்து கூறி 'இவற்றுள் உயிர்விடுவேனாக என்றது இது (இக்குறள்)' எனக் கூறினார்.
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப் புறங் காணேனாயின் (புறநானூறு 71 பொருள்: பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது தேருடனே அவருடைந் தோடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின்) எனவும் வேந்தரை அருஞ்சமஞ்சிதையத் தாக்கி முரசுமொடு ஒருங்ககப் படேனாயின் (புறநானூறு 72 பொருள்: அரசரைப் பொறுத்தற்கரிய போரின் கண்ணே சிதறப் பொருது முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின்) எனவும் அவண் வருந்தப் பொரேஎனாயின் (புறநானூறு 73 பொருள்: அவ்விடத்து வருந்தும்படி பொருதிலேனாயின்) எனவும் சங்கப்பாடல்களில் வஞ்சினங்களில் சுட்டப்பெறுகின்றன.
இழைத்தது என்றதற்கு நாமக்கல் இராமலிங்கம் 'படைவீரனாகச் சேர்கின்ற காலத்தில் 'அரசனுக்காக உயிரையுங் கொடுப்பேன்' என்று செய்த வாக்குறுதி' என்பர். இநத உறுதிமொழி படைச்செருக்குக்கான வஞ்சினமாகப் பொருந்துமாறில்லை.

தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாமல் உயிர் துறந்தவரை தவறினார் என்று இகழ்வோர் யார் இருக்கிறார்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சூளுரைக்கேற்ப உயிர்விடுவது படைச்செருக்கு.

பொழிப்பு

தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாமல் உயிர் கொடுத்தவரை தவறினார் என்று இகழ்வோர் உண்டோ?