இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0791நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:791)

பொழிப்பு (மு வரதராசன்): நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.

மணக்குடவர் உரை: நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை: நட்டபின் அவனை விடுதலில்லை யாயின்.
இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை.
(ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.)

இரா இளங்குமரனார் உரை: ஆராயாது நட்புச் செய்வதைப்போல் கேடானது இல்லை; ஏனெனில் நட்புக் கொண்டபின் நட்புக் கொண்டவர்க்கு அதனை விடுவது எளிது இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்பாள்பவர்க்கு நட்டபின் வீடில்லை; நாடாது நட்டலின் கேடில்லை.

பதவுரை: நாடாது-ஆராயாமல்; நட்டலின்-நட்புச்செய்தலைவிட; கேடு-அழிவு; இல்லை-இல்லை; நட்டபின்-தோழமை கொண்ட பிறகு; வீடு-விடுதல்; இல்லை-இல்லை; நட்பு-தோழமை; ஆள்பவர்க்கு-மேற்கொள்வார்க்கு, கைக்கொள்ள விரும்பியவர்க்கு.


நாடாது நட்டலின் கேடில்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை:
பரிப்பெருமாள்: ஆராயாது நட்புப் பண்ணுதல் போலக் கெடுதல் வருவதலில்லை;
பரிதி: ஒருவன் குற்றத்தை விசாரியாமல் நட்புக் கொள்வது போலக் கேடு இல்லை;
காலிங்கர்: இங்ஙனம் ஆராய்ந்து கடிது நட்டலின் மேற்பட்ட கேடுமில்லை;
பரிமேலழகர்: ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை;
பரிமேலழகர் குறிப்புரை: ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர்.

'ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரின் 'ஆராய்ந்து' என்ற உரைப்பாடம் பிழைபட்ட பாடமாம் என்பார் தண்டபாணி தேசிகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராயாது நட்பதுபோல் கேடில்லை; ஏன்?', 'ஆதலால் குணநலன்களை ஆராயாமல் நட்புச் செய்தல் போலத் துன்பம் தருவது வேறில்லை', 'அதனால் ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் (தீயவர்களுடன்) நட்பு கொண்டுவிடுவதைப் போன்ற குற்றமான காரியம் வேறில்லை', 'ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு தருவது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பை விரும்பியாள்பவர்க்கு நட்டபின் அவனை விடுதலில்லை யாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: நட்டபின் அவர்க்கு விடுதல் இல்லை யாதலால் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆராய வேண்டும் என்றது.
பரிதி: பின்பு அவன் பொல்லாத குணத்தைக் கண்டு விடாமல் அவனை நட்புக் கொண்டிருப்பது பெருமை என்றவாறு.
காலிங்கர்: ஒருவாற்றான் நட்ட பின்பு விடுதியும் இல்லை; யார்க்கெனின், நட்பறிந்து ஆளுமவர்க்கு என்றவாறு. [விடுதி - விட்டு நீங்குதல்]
பரிமேலழகர்: நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது;
பரிமேலழகர் குறிப்புரை: நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.

'நட்பை விரும்பியாள்பவர்க்கு நட்டபின் அவனை விடுதலில்லை யாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புச் செய்தபின் என்றும் விடுதலை இல்லை', 'நட்பினைச் செய்பவர்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதல் கூடாது', 'நட்பை அனுசரித்து நடக்கின்றவர்களுக்கு (ஒருவருடன்) நட்பு கொண்டபின் (அவரை விட்டுவிடுவது என்பது முடியாத காரியம்', 'நட்பினை விரும்பி அதன் கண்ணே நிற்பவர்க்கு, ஒருவரோடு நட்புச் செய்தபின் அவரைப் பிரிய முடியாது ஆதலில்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் அவரை விட்டுவிலகுதல் இல்லை ஆதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் வீடில்லை ஆதலால், ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை என்பது பாடலின் பொருள்.
'வீடில்லை' குறிப்பது என்ன?

நட்பாகப் பழகிவிட்டபின் அவனைவிட்டு எப்படி விலகுவது?

ஆராயாது நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புண்டானபின் கைவிடுதல், நட்பை விரும்புவோர்க்கு முடிவதும் இல்லை.
ஒருவனுக்குப் புதிய நட்புத்தொடர்பு ஒன்று கிடைக்கிறது. அந்த அறிமுக நட்புறவு விரைவில் உண்டானது. இருவரும் பழகத் தொடங்கினர். அவன் இவனுக்கு உதவிகள் செய்கிறான். இவனும் அவனுக்குச் சமயங்களில் துணை நின்றான். நட்பு தொடர்கிறது. நாட்கள் செல்லச் செல்ல நட்பான புதியவனது மறுபக்கம் புலப்படத் தொடங்குகிறது. புறங்கூறுதல், இன்னா மொழி பேசுதல் போன்ற விரும்பத்தகாத சிலபல தீய குணங்கள் கொண்டவனாக இருப்பதுவும் வெளிச்சத்துக்கு வருகிறது. இக்குணங்கள் இவனுக்கு முற்றிலும் ஒவ்வா. இன்றுவரை அவனால் இவனுக்குக் கேடு ஒன்றும் நேரவில்லை. நாளை என்ன ஆகுமோ எனத் தெரியாது. தன்னைப் பற்றி முற்றிலும் அறிந்துகொண்டவன் தனக்குப் பெருங்கேடு விளைவிக்கலாம். ஆயினும் அவனை உடனே கைவிடவும் முடியாது. இப்பொழுது என்ன செய்வது? ஆராய்ந்து அதன் பின்னர் நட்பை நெருக்கம் ஆக்கிக்கொண்டிருந்தக்கலாமோ என எண்ணுகிறான்.
நாடா என்ற சொல்லுக்கு இங்கு ஆராய்தலில்லாத என்பது பொருள். நாடாது நட்டலின் கேடில்லை என்று பாடல் சொல்வதால் ஆராயாமல் செய்த நட்பு தீநட்பாக மாறிவிட வாய்ப்புண்டு என்பது குறிப்பால் அறியப்படுகிறது.
பல நட்புறவுகள் ஆராயாமலேயேதாம் தோன்றுகின்றன. அவை விடுதல் இல்லாத அளவு வளர்ச்சியும் பெற்றுவிடுகின்றன. நட்பு என்பது என்றும் பிரியாததாய் அமையவேண்டும். எனவே தான் நட்பு கொள்ளு முன் நன்றாக ஆராய்ந்து அதன் பின் நட்பு கொள்ள வேண்டும்; அவ்வாறு தீர ஆராயாமல் நட்பு கொண்டால் அவரின் குணம், ஒழுக்கம் ஒன்றிப்போகாமல் பல கெடுதிகளை உருவாக்கலாம். நண்பன் எனற உறவினால் அவன் செய்யும் தீங்குகளுக்கான பழியும் இவனை வந்தடையலாம். பழகப் பழக இதுபோல் தீராத கேடுகளை மேலும் உண்டாக்கும் ஆகையால் ஆராயாமல் செய்த நட்புபோல் ஒருவனுக்கு கேடு தருவது வேறு ஒன்றும் இல்லை என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

இக்குறட்கருத்து கொண்ட பாடல் ஒன்று சங்கச் செய்யுளிலும் காணப்படுகிறது. நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் மொட்டியோர் திறத்தே (நற்றிணை 32.) என்பது அது. கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியிடம் தோழி இவ்விதம் உரைப்பதாக உள்ளது நற்றிணைப்பாடல்: 'அவனது காதல் மறுத்தற்கு அரியது. பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!'

'வீடில்லை' குறிப்பது என்ன?

'வீடில்லை' என்றதற்கு விடுதலில்லை, விடாமல் அவனை நட்புக் கொண்டிருப்பது, விடுதியும் இல்லை, விடுதலுண்டாகாது, பிரிகிறதில்லை, விடப்படாது, விடுதலை இல்லை, விடுவதென்பது நாகரிகமாகாது, விடுதல் கூடாது, விட்டுவிடுவது இல்லை, விடுவது எளிது இல்லை, விடுதல் முடியாது, பிரிய முடியாது, விடுதல் முடியாது, மீட்சி இல்லை, விலகுதல் இயலாது, விடுபட முடியாத அளவுக்கு(க் கேடுகளை உண்டாக்கும்), பிரிவது என்பது நட்புக்கொண்டவரால் முடியாது, எளிதாக விட்டுவிட முடியாது என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

குறளில் வீடு என்ற சொல் ஒருமுறையே - இப்பாடலில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இங்கு வீடு என்பது விடுதலை அதாவது விடுபடுதல் என்ற பொருள் தருவது. நட்பிலிருந்து பிரிதலைக் குறிக்கிறது. 'வீடில்லை' என்றது நட்பு விடுபடாது என்ற பொருளாகிறது. எந்த நட்பையும் விடுதல் கூடாது என்பதல்ல வள்ளுவர் கூறவருவது. 'ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பில்லா நட்பு' (800) என்று இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்றிலேயே அவர் சொல்லியுள்ளார். இப்பாடலானது ஏற்கனவே நட்பு உண்டானபின் அதை அடியோடு விடுதல் இல்லை என்ற பொருள் தருமாறு அமைந்துள்ளது. இதை முகத்தால் மட்டும் நட்புச்செய்து அகநட்பை விலக்கிக் கொள்க என்பது உணர்த்தப்படுவதாகக் கொள்ளலாம்.

'வீடில்லை' என்பதைத் தேவநேயப் பாவாணர் இவ்விதம் விளக்குகிறார்: 'சிலர் ஒருவரோடு நட்புக்கொண்டபின், அவரை விட்டுவிலக விரும்பாமல் அல்லது துணிவில்லாமல் இருக்கலாம். சிலர் தொழிற் கூட்டுப்பற்றி ஒருவரோடு நட்புக்கொண்டு, ஒருகாலும் விலக முடியாவாறு வாழ்நாள் ஒப்பந்தஞ்செய்திருக்கலாம்: அல்லது கயவரோடு தொடர்புகொண்டு அவர் பிடிக்குள் அகப்பட்டு விலக முடியாதவராயிருக்கலாம். இவ்விருசாராரையும் நோக்கியே 'நட்டபின் வீடில்லை' என்றார்'.

'வீடில்லை' என்ற தொடர் விடுதல் கடினம் என்ற பொருளில் ஆளப்பட்டது. ஒருதரம் பழகிவிட்டால், அந்நட்பை விடுவது எளிது இல்லை ஆதலால் பழகுமுன்பே பலதரம் ஆராய்ந்து நண்பரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கருத்து.

நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் அவரை விட்டுவிலகுதல் இல்லை ஆதலால் ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நட்பாராய்தல் பெருங்கேடு தவிர்க்கும்.

பொழிப்பு

ஆராயாது நட்பதுபோல் கேடு வேறில்லை; நட்புச் செய்தபின் விடுவது எளிது இல்லை ஆதலால்.