உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பை;
மணக்குடவர் குறிப்புரை: மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார்.
பரிப்பெருமாள்: செல்வம் மிக்க காலத்து நட்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பை;
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் *என்றவாறு. *அன்றியும் தன்னோடு பொருத்தமில்லாதார் என்றுமாம்.
பரிதி: பயன் கண்டால் உறவு செய்து பயனில வந்தபோது உறவு விடுவார் நட்பு;
காலிங்கர்: இங்ஙனம் நமக்கு உறுவது பெறும் காலத்து மிகவும் நட்டும் தமக்கு உறுதி அறுமிடத்து நீங்கும் இயல்பினராகிய இந்த ஒத்த நெறி இல்லாதார் கேண்மை;
பரிமேலழகர்: தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.
'பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கிடைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர் நட்பு', 'தமக்குப் பயன் கிட்டுமாயின் நட்புக்கொண்டு பயனில்லாதபோது கைவிட்டு நீங்கும் பொருத்தமில்லாதவரின் நட்பை', 'ஒரு நன்மை வேண்டும்போது நட்பு கொண்டாடி, அது இல்லாதபோது விட்டுப் போய்விடுகிற தகுதியற்றவர்களுடைய நட்பு', 'தன் நன்மை கருதி நட்புற்று, நன்மை இல்வழி நீங்கும் நட்பினரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஏதேனும் கிடைக்குமானால் பழகி, இல்லையானால் விலகிவிடும் ஒத்தநெறி இல்லாதார் நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.
பெறினும் இழப்பினும் என்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?
மணக்குடவர் குறிப்புரை: இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: பெற்ற அதனால் வரும் நன்மை யாது? இழந்த அதனால் வரும் தீமை யாது?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
பரிதி: பெற்றால் என்ன பெறாவிடில் என்ன என்றவாறு.
காலிங்கர்: பெறின் அதனால் வரும் இன்பம் யாது? இழப்பின் அதனால் வரும் சேதம் யாது? மற்று ஒன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது?
'பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இருந்தாலென்? போனால் என்?', 'பெற்றாலும் நன்மை இல்லை; இழந்தாலும் தீமையில்லை', 'இருந்தாலென்ன போனாலென்ன?', 'பெறுதலினாலும் இழத்தலினாலும் பயன் ஒன்றுமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பெற்றாலென்ன இழந்தாலென்ன? என்பது இப்பகுதியின் பொருள்.
|